பேறுகாலப் பெண்களைத் தூய்மைப்படுத்தல்

1ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2இஸ்ரயேல் மக்களுக்கு நீ சொல்லவேண்டியது: ஒருபெண், கருத்தரித்து ஆண் குழந்தை பெற்றால் ஏழு நாள் விலக்கு நாள்களில் இருப்பதுபோலவே, தீட்டுப்பட்டிருப்பாள்.
3எட்டாம் நாளன்று அதற்கு விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும்.
4தொடர்ந்து வரும் முப்பதி மூன்று நாள்கள், அவள் தன் உதிரத்தீட்டு நாள்கள் முடியும்வரை தூயதான எந்தப் பொருளையும் தொடலாகாது; தூயதலத்திற்குள் வரலாகாது.
5அவள் பெண் குழந்தை பெற்றால், இரண்டு வாரம் விலக்கு நாள்களில் இருப்பது போலவே, தீட்டாயிருப்பாள். பின்னர், அறுபத்தாறு நாள் தன் உதிரத் தீட்டில் இருப்பாள்.
6குழந்தை பெற்றவள் அது ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் தூய்மையடையும் காலக்கெடுவிற்குப் பின்னர், ஓராண்டு நிறைவுற்ற செம்மறி ஒன்றை எரிபலியாகவும், புறாக்குஞ்சு அல்லது காட்டுப் புறா ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும் குருவிடம் சந்திப்புக்கூடார நுழைவாயிலுக்குக் கொண்டுவர வேண்டும்.
7அதனை அவர் ஆண்டவர் திருமுன் கொண்டுவந்து அவளுக்குக் கறைநீக்கம் செய்வார். அவள் தன் உதிர ஊறல் தீட்டிலிருந்து தூய்மையாவாள். இது ஆண் அல்லது பெண் குழந்தை பெற்றவருக்கு விதிக்கப்படும் சட்டம்.
8ஆட்டுக்குட்டி கொண்டுவர வசதி இல்லாதவள், இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரண்டு புறாக் குஞ்சுகளையோ கொண்டு வந்து, ஒன்றை எரிபலியாகவும், மற்றதைப் பாவம்போக்கும் பலியாகவும் படைத்து, அவற்றால் குரு அவளுக்குக் கறைநீக்கம் செய்வார்; அப்போது அவள் தூய்மையாவாள்.

12:3 தொநூ 17:12; லூக் 2:21. 12:8 லூக் 2:24.