வேற்றினத்தார்மேல் வரும் தண்டனைத் தீர்ப்பு

1“அந்நாள்களில் நான் யூதா, எருசலேம் ஆகியவற்றின் துன்ப நிலைமையை மாற்றி முன்பு இருந்த நிலைமைக்கே கொண்டுவருவேன்;
2அப்பொழுது நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்றுசேர்த்து யோசபாத்துப் பள்ளத்தாக்கிற்கு இறங்கிவரச் செய்வேன்; அங்கே நான், என் மக்களும் உரிமைச் சொத்துமாகிய இஸ்ரயேலை முன்னிட்டு அவர்களுக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன்; ஏனெனில், அவர்கள் என் மக்களை வேற்று நாடுகளில் சிதறடித்தார்கள்; எனது நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டார்கள்;
3என் மக்கள் மேல் சீட்டுப்போட்டார்கள்; ஆண் பிள்ளையை விலைமகளுக்குக் கூலியாய்க் கொடுத்தார்கள்; பெண் குழந்தையை விலையாய்க் கொடுத்து, திராட்சை இரசம் வாங்கிக் குடித்தார்கள்.
4தீர், சீதோன் நகரங்களே, பெலிஸ்தியா நாட்டின் அனைத்துப் பகுதிகளே, எனக்கும் உங்களுக்கும் என்ன வழக்கு? என்னை முற்றிலுமாகப் பழிவாங்குவது உங்கள் எண்ணமோ? அவ்வாறு நீங்கள் பழிவாங்கினால் நான் காலந்தாழ்த்தாமல் நீங்கள் செய்ததையே உங்கள் தலைமேல் வெகு விரைவில் விழச் செய்வேன்.
5நீங்கள் என் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துக் கொண்டீர்கள்; விலையுயர்ந்த பொருள்களை உங்கள் அரண்மனைகளுக்கு அள்ளிக்கொண்டு போனீர்கள்.
6யூதாவின் மைந்தரையும் எருசலேமின் மக்களையும் கிரேக்கரிடம் விற்றுவிட்டீர்கள்; இவ்வாறு அவர்கள் தங்கள் நாட்டைவிட்டு வெகு தொலைவிற்குப் போகச் செய்தீர்கள்.
7நீங்கள் விற்றுவிட்ட இடத்திலிருந்து அவர்களை இப்பொழுதே கிளர்ந்தெழச் செய்வேன்; நீங்கள் செய்த கொடுமையை உங்கள் தலை மேலேயே விழச் செய்வேன்.
8உங்கள் புதல்வரையும் புதல்வியரையும் யூதா மக்களிடமே விற்றுவிடுவேன்; யூதா மக்களோ அவர்களைத் தொலைநாட்டவரான செபாயரிடம் விற்றுவிடுவார்கள்; இதைக் கூறுவது ஆண்டவரே.

9வேற்றினத்தாரிடையே

இதைப் பறைசாற்றுங்கள்;

போருக்காக நாள் குறித்து,

போர் வீரர்களைக்

கிளர்ந்தெழச் செய்யுங்கள்;

படை வீரர்கள் அனைவரும்

திரண்டு வந்து,

போருக்குக் கிளம்பட்டும்.

10உங்கள் கலப்பைக் கொழுவைப்

போர்வாளாக அடித்துக் கொள்ளுங்கள்;

கதிரறுக்கும் அரிவாள்களை

ஈட்டிகளாக வடித்துக்கொள்ளுங்கள்;

வலுவற்றவனும்

‘நானொரு போர்வீரன்’ என்று

சொல்லிக் கொள்ளட்டும்.

11சுற்றுப் புறங்களிலுள்ள

வேற்று நாட்டவர்களே,

நீங்கள் அனைவரும்

விரைந்து வாருங்கள்;

வந்து அவ்விடத்தில்

ஒன்றாய்க் கூடுங்கள்;

ஆண்டவரே, உம் போர் வீரர்களை

அனுப்பியருளும்.

12வேற்றினத்தார் அனைவரும்

கிளர்ந்தெழட்டும்;

கிளர்ந்தெழுந்து

யோசபாத்து பள்ளத்தாக்கிற்கு

வந்து சேரட்டும்;

ஏனெனில் சுற்றுப்புறத்து

வேற்றினத்தார் அனைவர்க்கும்

தீர்ப்பு வழங்க

நான் அங்கே அமர்ந்திருப்பேன்.

13அரிவாளை எடுத்து அறுங்கள்,

பயிர் முற்றிவிட்டது;

திராட்சைப் பழங்களை

மிதித்துப் பிழியுங்கள்.

ஏனெனில் ஆலை நிரம்பித்

தொட்டிகள் பொங்கி வழிகின்றன;

அவர்கள் செய்த கொடுமை

மிகப் பெரிது.

14திரள் திரளாய் மக்கட் கூட்டம்

தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில்

திரண்டிருக்கிறது.

ஏனெனில், ஆண்டவரின் நாள்

அப்பள்ளத்தாக்கை

நெருங்கி வந்துவிட்டது.

15கதிரவனும் நிலவும்

இருளடைகின்றன;

விண்மீன்கள்

ஒளியை இழக்கின்றன.

ஆண்டவர் தம் மக்களுக்கு ஆசி வழங்குவார்

16சீயோனிலிருந்து ஆண்டவர்

கர்ச்சனை செய்கின்றார்;

எருசலேமிலிருந்து அவர்

முழங்குகின்றார்;

விண்ணும் மண்ணும் அதிர்கின்றன;

ஆயினும் ஆண்டவரே

தம் மக்களுக்குப் புகலிடம்;

இஸ்ரயேலருக்கு அரணும் அவரே.

17நானே உங்கள் கடவுளாகிய

ஆண்டவர் என்றும்,

நான் என் திருமலையாகிய

சீயோனில் குடியிருக்கிறேன் என்றும்

அப்பொழுது நீங்கள் அறிவீர்கள்;

எருசலேம் தூயதாய் இருக்கும்;

அன்னியர் இனிமேல்

அதைக் கடந்து செல்லமாட்டார்கள்.

18“அந்நாளில் மலைகள்

இனிய, புது இரசத்தைப் பொழியும்;

குன்றுகளிலிருந்து

பால் வழிந்தோடும்

; யூதாவின் நீரோடைகளிலெல்லாம்

தண்ணீர் நிரம்பி வழியும்;

ஆண்டவரின் இல்லத்திலிருந்து

நீரூற்று ஒன்று கிளம்பும்;

அது சித்திமிலுள்ள

ஓடைகளில் பாய்ந்தோடும்.

19எகிப்து பாழ்நிலமாகும்;

ஏதோம் பாழடைந்து

பாலைநிலம் ஆகும்;

ஏனெனில், அவர்கள்

யூதாவின் மக்களைக்

கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்;

அவர்களின் நாட்டிலேயே

குற்றமற்ற இரத்தத்தைச்

சிந்தினார்கள்.

20யூதாவோ என்றென்றும்

மக்கள் குடியிருக்கும்

இடமாயிருக்கும்;

எருசலேமில்

எல்லாத் தலைமுறைக்கும்

மக்கள் குடியிருப்பார்கள்.

21சிந்தப்பட்ட இரத்தத்திற்கு

நான் பழிவாங்கவே செய்வேன்;

குற்றவாளிகளைத்

தண்டியாமல் விடேன்;

ஆண்டவராகிய நான்

சீயோனில் குடியிருப்பேன்.


3:4-8 எசா 14:29-31; 23:1-18; எரே 47:1-7; எசே 25:15-28:26; ஆமோ 1:6-10; செப் 2:4-7; செக் 9:1-7; மத் 11:21-22; லூக் 10:13-14. 3:10 எசா 2:4; மீக் 4:3. 3:13 திவெ 14:14-16, 19-20; 19:15. 3:16 ஆமோ 1:2.