1இஸ்ரயேலே! நீ களிப்புறாதே; மற்ற
மக்களைப்போல் நீ அக்களிக்காதே.
உன் கடவுளைக் கைவிட்டு
நீ வேசித் தொழில் புரிந்தாய்;
கதிரடிக்கும் களமெல்லாம் நீ
விலைமகளின் கூலியை நாடுகின்றாய்.
2கதிரடிக்கும் களமும்,
திராட்சைக் கனி பிழியும் ஆலையும்
அவர்களுக்கு உணவு அளிக்கமாட்டா;
புதிய திராட்சை இரசமும்
இல்லாமல் போகும்.
3ஆண்டவரின் நாட்டில்
அவர்கள் குடியிருக்க மாட்டார்கள்;
எப்ராயிம் எகிப்துக்குத்
திரும்பிப் போவான்;
அவர்கள் அசீரியாவில்
தீட்டுப்பட்டதை உண்பார்கள்.
4திராட்சை இரசத்தை ஆண்டவருக்கு
நீர்மப் படையலாய் வார்க்க மாட்டார்கள்;
அவர்களின் பலிகள்
அவருக்கு உகந்தவை ஆகமாட்டா;
அவை அவர்களுக்கு
இழவு வீட்டு உணவு போலிருக்கும்;
அவற்றை உண்பவர் யாவரும்
தீட்டுப்படுவர்;
ஏனெனில், அவை அவர்களின்
பசி தீர்க்கும் உணவே ஆகும்.
ஆண்டவரின் கோவிலில்
அவை படைக்கப்படுவதில்லை.
5விழா நாள்களில்
அவர்கள் என்ன செய்கின்றார்கள்?
ஆண்டவரின் திருநாளன்று
அவர்கள் செய்வதென்ன?
6அவர்கள் அழிவுக்குத்
தப்பி ஓடுவார்கள்;
எகிப்து அவர்களைச்
சேர்த்துக் கொள்ளும்;
மெம்பிசில் அவர்கள்
அடக்கம் செய்யப்படுவார்கள்.
அவர்கள் விரும்பி வைத்திருந்த
வெள்ளியால் செய்த
அரிய பொருள்கள்
காஞ்சொறிச் செடிகளுக்கு
உரிமைச் சொத்தாகும்.
அவர்களின் கூடாரங்களில்
முட்புதர்கள் வளரும்.
7தண்டனைத் தீர்ப்புப் பெறும்
நாள்கள் வந்துவிட்டன;
பதிலடி கிடைக்கும்
நாள்கள் வந்துவிட்டன;
இதை இஸ்ரயேலர் அறிந்துகொள்வர்.
உன் தீச்செயலின் மிகுதியாலும்,
பெரும் பகையுணர்ச்சியாலும்
‘இறைவாக்கினன்
மூடனாய் இருக்கிறான்;
இறை ஆவி பெற்றவன்
வெறிக்கொண்டு உளறுகின்றான்,’
என்கின்றாய்.✠
8என் கடவுளின் மக்களாகிய
எப்ராயிமுக்கு இறைவாக்கினன்
காவலாளியாய் இருக்கின்றான்;
ஆயினும் வேடன் ஒருவனின் வலை
அவனை எப்பக்கமும் சூழ்ந்துள்ளது;
அவனுடைய கடவுளின் கோவிலிலும்
பகைமை நிலவுகின்றது.
9கிபயாவின் நாள்களில்
நடந்ததுபோலவே,
அவர்கள் கொடுமை செய்வதில்
ஆழ்ந்திருக்கின்றார்கள்;
அவர்களுடைய தீச்செயலை
ஆண்டவர் நினைவில் கொள்வார்;
அவர்களுடைய பாவங்களுக்குத்
தண்டனை கொடுப்பார்.✠
10பாலைநிலத்தில்
திராட்சைக் குலைகளைக்
கண்டது போல்
நான் இஸ்ரயேலைக்
கண்டுபிடித்தேன்.
பருவகாலத் தொடக்கத்தின்
முதல் அத்திப் பழங்களைப்போல்
உங்கள் தந்தையரைக்
கண்டு பிடித்தேன்.
அவர்களோ
பாகால் பெயோருக்கு வந்து,
மானக்கேடானவற்றுக்குத்
தங்களையே நேர்ந்து கொண்டார்கள்.✠
11எப்ராயிமின், மேன்மை
பறவைபோல் பறந்தோடிவிடும்;
அவர்களுக்குள்
பிறப்போ, கருத்தாங்குவதோ,
கருத்தரிப்பதோ எதுவுமே இராது.
12அவர்கள் பிள்ளைகளைப்
பெற்று வளர்த்தாலும்,
ஒருவனும் எஞ்சியிராமல்
அப்பிள்ளைகளை
இழக்கச் செய்வேன்;
நான் அவர்களைவிட்டு
அகன்றுவிட்டால்,
அவர்களுக்கு ஐயோ கேடு!
13நான் பார்த்ததற்கிணங்க,
எப்ராயிம் தம் மக்களைக்
கொள்ளைப் பொருளாய்
ஆக்கியிருக்கின்றான்;
எப்ராயிம் தம் மக்களையெல்லாம்
கொலைக் களத்திற்குக்
கூட்டிச் செல்வான்.
14ஆண்டவரே,
அவர்களுக்குக் கொடுத்தருளும்,
எதைக் கொடுப்பீர்?
கருச்சிதைவையும் கருப்பையையும்
பால் சுரவா முலைகளையும்
கொடுத்தருளும்.
15அவர்களின்
கொடுஞ்செயல்கள் யாவும்
கில்காலில் உருவாயின;
அங்கேதான் நான் அவர்களைப்
பகைக்கத் தொடங்கினேன்;
அவர்களுடைய
தீச்செயல்களை முன்னிட்டு
என் வீட்டினின்றும்
நான் அவர்களை விரட்டியடிப்பேன்;
இனி அவர்கள்மேல்
அன்புகொள்ள மாட்டேன்,
அவர்களின் தலைவர்கள் அனைவரும்
கலகக்காரராய் இருக்கிறார்கள்.
16எப்ராயிம் மக்கள்
வெட்டுண்டு வீழ்ந்தார்கள்;
அவர்களுடைய வேர்
உலர்ந்து போயிற்று;
இனிமேல் அவர்கள்
கனி கொடுக்கமாட்டார்கள்;
அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும்,
நான் அவர்களுடைய
அன்புக் குழந்தைகளைக்
கொன்றுவிடுவேன்.
17என் கடவுள்
அவர்களைத் தள்ளிவிடுவார்;
ஏனெனில், அவர்கள்
அவருக்குச் செவி கொடுக்கவில்லை;
வேற்றினத்தார் நடுவில் அவர்கள்
நாடோடிகளாய்த் திரிவார்கள்.