தம் மக்கள்மேல் கடவுளின் பேரன்பு

1இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்பு கூர்ந்தேன்; எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்.
2எவ்வளவுக்கு நான் அவர்களை வருந்தி அழைத்தேனோ, அவ்வளவுக்கு என்னை விட்டுப் பிடிவாதமாய் விலகிப் போனார்கள்; பாகால்களுக்குப் பலியிட்டார்கள், சிலைகளுக்குத் தூபம் காட்டினார்கள்.
3ஆனால் எப்ராயிமுக்கு நடைபயிற்றுவித்தது நானே; அவர்களைக் கையிலேந்தியதும் நானே; ஆயினும், அவர்களைக் குணமாக்கியது நானே என்பதை அவர்கள் உணராமற் போனார்கள்.
4*பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்; அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்; அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன்.
5எகிப்து நாட்டுக்கே அவர்கள் திரும்பிப் போவார்கள்; அசீரியா அவர்களை அரசாளும்; ஏனெனில் என்னிடம் திரும்பி வர மறுத்துவிட்டார்கள்.
6அவர்களுடைய தீய எண்ணங்களை முன்னிட்டு அவர்களின் நகர்களுக்கு எதிராக வாள் பாய்ந்தெழுந்து, அவர்கள் கதவுகளின் தாழ்ப்பாள்களை நொறுக்கிவிட்டு, அவர்களை விழுங்கிவிடும்.
7என் மக்கள் என்னை விட்டு விலகிப் போவதிலேயே கருத்தாய் இருக்கிறார்கள், அவர்கள்மேல் நுகத்தடி பூட்டப்படுவதால் கூக்குரலிடுவார்கள்; அந்த நுகத்தை அகற்றுவார் எவருமில்லை.
8எப்ராயிமே! நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரயேலே! உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்? உன்னை எப்படி அதிமாவைப் போலாக்குவேன்? செபோயிமுக்குச் செய்ததுபோல் உனக்கும் செய்வேனோ? என் உள்ளம் அதை வெறுத்து ஒதுக்குகின்றது, என் இரக்கம் பொங்கி வழிகின்றது.
9என் சீற்றத்தின் கனலைக் கொட்டமாட்டேன்; எப்ராயிமை அழிக்கத் திரும்பிவரமாட்டேன்; நான் இறைவன், வெறும் மனிதனல்ல; நானே உங்கள் நடுவிலிருக்கும் தூயவர், ஆதலால், நான் நகர்க்கு எதிராக வரமாட்டேன்.

அடிமைத் தளையினின்று திரும்புதல்

10ஆண்டவராம் என் பின்னே அவர்கள் போவார்கள்; நானும் சிங்கத்தைப் போலக் கர்ச்சனை செய்வேன்; ஆம், நான் கர்ச்சனை செய்வேன். அவர்களின் புதல்வர் மேற்கிலிருந்து நடுங்கிக்கொண்டு வருவர்.
11எகிப்தினின்று பறவைகள்போலவும், அசீரியா நாட்டினின்று புறாக்களைப் போலவும் நடுங்கிக் கொண்டு வருவர்; அவர்களைத் தம் வீடுகளுக்கே திரும்பச் செய்வேன், என்கிறார் ஆண்டவர்.
12எப்ராயிம் மக்களின் பொய்க்கூற்று என்னைச் சூழ்ந்துள்ளது; இஸ்ரயேல் குடும்பத்தாரின் வஞ்சகம் என்னை வளைத்துக் கொண்டுள்ளது. ஆனால், யூதா இறைவனோடு இன்னும் நடக்கிறான்; தூயவராம் ஆண்டவருக்கு உண்மை உள்ளவனாய் இருக்கிறான்.

11:1 விப 4:22; மத் 2:15. 11:8 இச 29:23.
11:4 "மனிதன்" என்பது எபிரேய பாடம்.