ஒசேயா முன்னுரை


இறைவாக்கினர் ஓசேயா வடநாடான இஸ்ரயேலில் ஆமோசுக்குச் சற்றுப் பின்னர் வாழ்ந்தவர்; சமாரியா வீழ்ச்சியுற்ற கி.மு.722க்கு முன் இறைவாக்கு உரைத்தவர்; இஸ்ரயேலரின் சிலைவழிபாட்டைக் கடிந்து கொண்டவர்; அவர்களது கீழ்ப்படியாமையைக் கண்டித்தவர். இவர் கோமேர் என்ற பெண்ணை மணந்து கொண்டார். அவள் அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து, அவரைவிட்டு விலகிச் சென்றாள். அத்தகையவளோடு அவர் கொண்டிருந்த மண உறவைப் பின்னணியாகக் கொண்டு ஓசேயா இறைமக்களின் உண்மையற்ற தன்மையை, கீழ்ப்படியாமையை, நம்பிக்கைத் துரோகத்தை எடுத்தியம்பினார். கடவுளைவிட்டு விலகிச் சென்ற அவர்களுக்கு இறைவன் தண்டனை வழங்குவார்; ஆயினும், இறைவனின் பேரன்பு இறுதிவரை நிலைத்திருக்கும்; அம்மக்களை அவர் பக்கம் ஈர்த்துக்கொள்ளும்; அதன்மூலம், முறிந்த உறவு மலரும். இதுவே இவரது நூலின் செய்தியாகும்.

நூலின் பிரிவுகள்

  1. ஓசேயாவின் திருமணமும் இல்வாழ்வும் 1:1 - 3:5
  2. இஸ்ரயேலின் குற்றங்களும் அவற்றுக்குரிய தண்டனைத் தீர்ப்பும் 4:1 - 13:16
  3. மனமாற்றத்திற்கு அழைப்பும் வாக்குறுதியும் 14:1 - 9