எசேக்கியேல் முன்னுரை


எசேக்கியேல் என்னும் பெயருக்கு ‘ஆண்டவர் ஆற்றல் அளிப்பார்’ என்பது பொருள். எருசலேமின் வீழ்ச்சிக்கு முன்பும் பாபிலோனியச் சிறையிருப்பின் போதும் இறைவாக்கினர் எசேக்கியேல் வாழ்ந்தார். பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டோருக்கு மட்டுமன்றி, எருசலேமில் எஞ்சியிருந்தோருக்கும் அவர் இறைவாக்கு உரைத்தார்.

எசேக்கியேல் ஆழ்ந்த இறைப்பற்றும் கற்பனை வளமும் கொண்டிருந்தார். எழுச்சிமிகு தம் எண்ணங்கள் பலவற்றைக் காட்சிகளின் வடிவில் எடுத்துரைத்தார். இவர் தம் அறிக்கைகள் பலவற்றை அடையாளச் செயல்கள் வழியாக விளக்கினார். ஒவ்வொருவரும் தம் தீவினைகளுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், அவர்தம் நெஞ்சமும் எண்ணமும் உள்ளார்ந்த புதுப்பொலிவு பெறவேண்டும் என்றும் எசேக்கியேல் வலியுறுத்தினார்; நாடும் புதுப்பொலிவு பெற்று வாழ்ந்திட வேண்டும் என அறைகூவல் விடுத்தார். இவர் குருவாகவும் இறைவாக்கினராகவும் இருந்தமையால், கோவிலைக் குறித்தும் உள்ளத் தூய்மையைக் குறித்தும் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார்.

நூலின் பகுதிகள்

  1. எசேக்கியேலின் அழைப்பு 1:1 - 3:27
  2. எருசலேம் பற்றிய அழிவுச் செய்திகள் 4:1 - 24:27
  3. மக்களினங்களுக்கு எதிரான கடவுளின் நீதித் தீர்ப்புகள் 25:1 - 32:32
  4. கடவுள் தம் மக்களுக்கு அளித்த வாக்குறுதி 33:1 - 37:28
  5. கோகுக்கு எதிரான இறைவாக்கு 38:1 - 39:29
  6. வருங்காலக் கோவில் மற்றும் நாடு பற்றிய காட்சிகள் 40:1 - 48:35