நாட்டில் ஆண்டவருக்கு உரிய பகுதி

1நீங்கள் நாட்டைப் பங்கிட்டு உரிமையாக்கிக் கொள்ளுகையில் ஆண்டவருக்கு நாட்டின் ஒரு பகுதியை அர்ப்பணிக்க வேண்டும். அது இருபத்தைந்தாயிர முழ நீளமும் பத்தாயிர முழ அகலமும் உடையதாய் இருக்க வேண்டும். அப்பகுதி முழுவதும் தூய்மையானதாக இருக்கும்.
2அதில் ஐந்நூறு முழச் சதுர நிலம் தூயகத்துக்கென ஒதுக்கப்படும். ஐம்பது முழம் அதைச் சுற்றித் திறந்த வெளியாயும் விடப்படும்.
3தூய நிலப் பகுதியில் இருபத்தைந்தாயிர முழ நீளமும் பத்தாயிர முழ அகலமும் கொண்ட ஒரு பகுதியைத் தெரிந்தெடுக்க வேண்டும். அவ்விடத்தில்தான் தூயகமும் திருத்தூயகமும் அமையும்.
4அவ்விடமே தூயகத்தில் நின்று ஆண்டவருக்கு முன் பணிபுரிய வரும் குருக்களுக்குரிய தூய நிலப்பகுதியாய் இருக்கும். அது அவர்களின் வீடுகள் இருக்கும் பகுதியாகவும் கோவிலுக்கான தூய பகுதியாகவும் அமையும்.
5இருபத்தைந்தாயிர முழ நீளமும், பத்தாயிர முழ அகலமும் கொண்ட ஒரு பகுதி கோவிலில் பணிபுரியும் லேவியர்களுக்கு உரியதாகும். அவர்களுக்கு இருபது அறைகள் உடைமையாய் இருக்கும்.
6தூய பகுதியை ஒட்டி ஐயாயிர முழ அகலமும் இருபத்தைந்தாயிர முழ நீளமும் கொண்ட ஒரு பகுதியை நகருக்கென ஒதுக்க வேண்டும். அது இஸ்ரயேல் வீட்டார் அனைவர்க்கும் உரியதாய் இருக்கும்.

தலைவனுக்கான நிலம்

7தூய பகுதிக்கும், நகருக்கென ஒதுக்கப்பட்ட பகுதிக்கும் இடையில் தலைவனுக்குரிய நிலம் இருக்கும். மேற்குப் பகுதியிலிருந்து மேற்கு எல்லை வரைக்கும் கிழக்குப் பகுதியிலிருந்து கிழக்கு எல்லைவரைக்கும் நீண்டு மேற்கிலிருந்து கிழக்காக நீண்டிருக்கும் ஒவ்வொரு குலப்பகுதியின் நிலத்திற்கும் இணையாக இது இருக்க வேண்டும்.
8இந்த நிலமே இஸ்ரயேலின் தலைவனது உடைமையாயிருக்கும். என் தலைவர்கள் இனிமேல் என் மக்களைத் துன்புறுத்தமாட்டார்கள்; மாறாக, இஸ்ரயேல் வீட்டினர் தங்கள் குலத்திற்கேற்றவாறு நிலத்தை உரிமையாக்கிக் கொள்ள அனுமதியளிப்பர்.

தலைவனுக்கான நெறிமுறைகள்

9தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேலின் தலைவர்களே! நீங்கள் வன்முறையையும் அடக்கு முறையையும் விட்டொழியுங்கள். நீதியையையும் நியாயத்தையும் கடைப்பிடியுங்கள். என் மக்கள் நில உரிமை இழக்கச் செய்வதை நிறுத்துங்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
10உங்களிடம் சரியான எடைக்கருவிகள் இருக்க வேண்டும். சரியான எடையுடைய மரக்காலும் சரியான அளவுடைய குடமும் உங்களிடம் இருக்க வேண்டும்.
11மரக்காலும் குடமும் ஒரே அளவில் இருக்க வேண்டும். குடம் என்பது கலத்தில் பத்திலொரு பகுதியைக் கொண்டிருக்க வேண்டும். மரக்கால் என்பதும் கலத்தில் பத்திலொரு பகுதியைக் கொண்டிருக்க வேண்டும். கலம் என்பதே இரண்டுக்கும் பொதுவானது.
12செக்கேல் என்பது இருபது கேராக்களைக் கொண்டிருக்கவேண்டும். ஒரு மினாவில் இருபது செக்கேல்களும், இருபத்தைந்து செக்கேல்களும், பதினைந்து செக்கேல்களும் இருக்க வேண்டும்.
13நீங்கள் படைக்க வேண்டிய சிறப்புக் காணிக்கை இதுவே; ஒவ்வொரு கலம் அளவு கோதுமையிலும் ஒரு மரக்காலில் ஆறிலொரு பகுதியையும், ஒவ்வொரு கலம் அளவு வாற் கோதுமையிலும் ஒரு மரக்காலில் ஆறிலொரு பகுதியையும கொடுக்க வேண்டும்.
14படைக்க வேண்டிய எண்ணெய், குடம் அளவையால் அளக்கப்படும். ஒவ்வொரு குடம் அளவு எண்ணெயும் கலத்தில் பத்திலொரு பகுதியாகும். கலம் என்பது பத்துக் குடங்கள் அல்லது ஒரு கலம். ஏனெனில், பத்துக் குடங்கள் ஒரு கலத்திற்கு இணையாகும்.
15இஸ்ரயேலின் வளமான மேய்ச்சல் நிலத்தில் இருநூறு ஆடுகள் உள்ள ஒவ்வொரு மந்தையிலிருந்தும் ஓர் ஆட்டுக்குட்டி எடுக்கப்பட வேண்டும். பாவக் கழுவாய்ப் பலிகளான தானியப் படையலுக்கும், எரிபலிகளுக்கும், நல்லுறவுப் பலிகளுக்கும் அது பயன் படுத்தப்படும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
16இஸ்ரயேலின் தலைவனுக்குக் கொடுக்கும் இச்சிறப்புக் காணிக்கையை நாட்டின் மக்கள் யாவரும் கொடுக்க வேண்டும்.
17இஸ்ரயேலின் திருநாள்களிலும் அமாவாசை நாள்கள், ஓய்வு நாள்கள் மற்றும் இஸ்ரயேலின் எல்லாச் சிறப்புத் திருநாள்களிலும், எரிபலிகளுக்கும் தானியப் படையலுக்கும் நீர்மப் படையல்களுக்கும் வேண்டியவற்றை அளிக்க வேண்டியது தலைவனின் பொறுப்பாகும். அவன் இஸ்ரயேல் வீட்டார் சார்பில் பாவக் கழுவாய் செய்யப் பாவம் போக்கும் பலிகள், தானியப் படையல்கள், எரிபலிகள், நல்லுறவுப் பலிகள் ஆகியவற்றிற்குத் தேவையானவற்றைத் தருவான்.

விழாக்கள்
(விப 12:1-20; லேவி 23:33-43)

18தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: முதல் மாதத்தின் முதல் நாளில் நீங்கள் மாசுமறுவற்ற ஓர் இளங்காளையை மந்தையிலிருந்து எடுத்துத் தூயகத்தைப் புனிதப்படுத்த வேண்டும்.
19குரு பாவம் போக்கும் பலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதைக் கோவிலின் கதவு நிலைகளிலும், பீடத்து விளிம்பின் நான்கு முனைகளிலும், உள் முற்றத்தின் வாயில் நிலைகளிலும் பூச வேண்டும்.
20அறியாமையாலோ அல்லது உள்ளெண்ணமின்றியோ தவறு செய்தோர்க்காக மாதத்தின் ஏழாம் நாளில் இதே போல் செய்ய கோவிலுக்காகப் பாவக்கழுவாய் செய்ய வேண்டும்.
21முதல் மாதத்தின் பதினான்காம் நாள் உங்களுக்குப் பாஸ்காத் திருநாளாக இருக்கும். அது ஏழு நாள் தொடரும். அந்நாள்களில் நீங்கள் புளியாத அப்பங்களையே உண்ண வேண்டும்.
22அந்த நாளில் தலைவன் தனக்காகவும், நாட்டின் எல்லா மக்களுக்காகவும் பாவம் போக்கும் பலிக்கென ஒரு காளையைக் கொடுக்க வேண்டும்.
23திருவிழாவின் அந்த ஏழு நாள்களிலும் ஒவ்வொரு நாளும் அவன் ஆண்டவருக்கு எரிபலிக்கென மாசு மறுவற்ற ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கிடாய்களையும், பாவம் போக்கும் பலிக்கென ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் கொடுக்க வேண்டும்.
24ஒவ்வொரு காளைக்கும் ஒவ்வோர் ஆட்டுக்கிடாய்க்கும் ஒவ்வோர் மரக்கால் அளவு தானியப் பலிப்பொருளையும் ஒவ்வோர் மரக்கால் தானியப் பொருளுக்கு ஒரு கலயம் அளவு எண்ணெயையும் அளிக்க வேண்டும்.
25ஏழாம் மாதத்தின் பதினைந்தாம் நாளில் தொடங்கும் திருவிழாவில் ஏழு நாள்களிலும் இவ்வாறே பாவம் போக்கும் பலிப்பொருள்கள், எரிபலிப்பொருள்கள், தானியப் படையல், எண்ணெய்ப் படையல் ஆகியவற்றை அவன் அளிக்க வேண்டும்.

45:10 லேவி 19:36. 45:21 விப 12:1-20; எண் 28:16-25. 45:25 லேவி 23:33-36; எண் 29:12-38.
45:10 ‘ஏப்பா’ என்பது எபிரேய பாடம். திடப்பொருளை அளவிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட எடைக்கருவி. 45:10 ‘பாத்’ என்பது எபிரேய பாடம். திரவப்பொருளை அளவிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கருவி. 45:11 ‘கோமர்’ என்பது எபிரேய பாடம். 45:14 ‘கோமர்’ என்பது எபிரேய பாடம். ‘கோர்’, ‘கோமர்’ இரண்டும் சம அளவுகள் கொண்டவை. (பத்து குடம் அல்லது நானூறு லிட்டர்). 45:24 ‘கீன்’ என்பது எபிரேய பாடம்.