கோவிலுக்குள் ஆண்டவர் வருதல்

1பின்னர் அம்மனிதர் கிழக்கு நோக்கிய வாயிலுக்கு என்னை அழைத்துச் சென்றார்.
2இதோ, ‘இஸ்ரயேலின் ஆண்டவரது மாட்சி’ கிழக்குப் பகுதியிலிருந்து வருவதைக் கண்டேன். அவரது குரல் பெருவெள்ளத்தின் இரைச்சல்போல் இருந்தது. நிலமோ அவரின் மாட்சியால் ஒளி வீசிற்று.
3நான் கண்ட காட்சி, அவர் நகரை அழிக்க வந்தபோது நான் கண்டது போன்றும், கேபார் ஆற்றோரம் நான் கண்டது போன்றும் இருந்தது. நான் முகங்குப்புற விழுந்தேன்.
4ஆண்டவரின் மாட்சி கிழக்கு நோக்கிய வாயில் வழி கோவிலினுள் நுழைந்தது.
5பின்னர் ஆவி என்னைத் தூக்கி உள்முற்றத்திற்கு அழைத்துச் சென்றது. ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பிற்று.
6அம்மனிதர் என்னருகில் நிற்கையில் கோவிலிருந்து வேறொருவர் என்னுடன் பேசுவதைக் கேட்டேன்.
7அவர் உரைத்தது; “மானிடா! இது என் அரியணையின் இடம்; என் கால்மணைக்கான இடம். இங்குதான் நான் இஸ்ரயேலருடன் என்றென்றும் வாழ்வேன். இஸ்ரயேல் வீட்டார் இனி ஒருபோதும் என் திருப்பெயரைத் தீட்டுப்படுத்த மாட்டார். அவர்களோ, அவர்கள் அரசர்களோ விபசாரத்தினாலோ, அவர்களுடைய அரசர்களின் உயிரற்ற சிலைகளினாலோ, தொழுகை மேடுகளில் தீட்டுப்படுத்த மாட்டார்!
8அவர்களின் வாயிற்படியை என் வாயிற்படிக்கு அருகிலும், அவர்கள் கதவுகளை என் கதவு நிலைகளுக்கு எதிரிலும் வைத்து எனக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு சுவரைமட்டும் வைத்து என் திருப்பெயரை அவர்களின் அருவருப்பான செயல்கள் மூலம் தீட்டுப்படுத்தினர். எனவே அவர்களை நான் என் சினத்தில் அழித்தேன்.
9இப்போது அவர்கள் தங்கள் விபசாரத்தையும், தங்கள் அரசர்களின் உயிரற்ற சிலைகளையும் என்னிடமிருந்து அகற்றி விடட்டும். அப்போது நான் அவர்களிடையே என்றென்றும் வாழ்வேன்.
10நீயோ! இஸ்ரயேல் வீட்டாருக்குக் கோவிலைப் பற்றி விவரி. அதன்மூலம் அவர்கள் தங்கள் பாவங்கள் குறித்து வெட்கமுறட்டும். கோவிலின் அளவு முறையை அவர்கள் ஆராயட்டும்.
11அவர்கள் தாங்கள் செய்ததெல்லாம் குறித்து வெட்கமுற்றால் அவர்களுக்கு கோவிலின் அளவுமுறையைக் காட்டு. அதன் கட்டமைப்பையையும் வெளி வாயில்களையும் நுழைவாயில்களையும் அதன் முழு அமைப்பையும், எல்லா முறைமைகளையும் முழுத்திட்டத்தையும் சட்டங்களையும் தெரிவி. இவற்றை அவர்கள் கண்முன்னால் எழுதிவை. அப்போது அவர்கள் அத்திட்டத்தின்படி நடந்து அதன் எல்லா முறைமைகளையும் கடைப்பிடிப்பார்கள்.
12கோவிலின் சட்டம் இதுவே. மலையின் உச்சியிலுள்ள எல்லாச் சுற்றுப் பகுதிகளும் உன்னத இடங்களாகும். இதுவே கோவிலின் சட்டமாகும்.

பலிமேடை

13முழு அளவுக்கேற்பப் பீடத்தின் அளவுகள் பின்வருமாறு; ஒரு முழம் என்பது ஒருமுழமும் நான்கு விரற்கடையும் கொண்டது. பீடத்தின் அடிப்பாகம் ஒரு முழ உயரமும் ஒரு முழ அகலமும் கொண்டது. சுற்றுப்புறத்தில் அதன் ஓரத்தில் ஒரு சாண் விளிம்புகள் இருக்கும் பீடத்தின் உயரம் இதுவே;
14நிலத்தில் அடிப்பாகத்திலிருந்து கீழ் விளிம்புவரை இதன் உயரம் இரண்டு முழம், அகலம் ஒரு முழம். சிறிய விளிம்பு முதல் பெரிய விளிம்பு வரை உயரம் நான்கு முழம், அகலம் ஒரு முழம்.
15பலிபீடச் சிகரம் நான்கு முழ உயரமானது. நான்கு கொம்புகள் சிகரத்திலிருந்து மேல் நோக்கி இருந்தன.
16பலிபீடச் சிகரம் பன்னிரண்டு முழ நீளமும், பன்னிரண்டு முழ அகலமும் கொண்ட சமசதுரமானது.
17மேல் விளிம்பு பதினான்கு முழ நிளமும் பதினான்கு முழ அகலமும் கொண்ட சமசதுரமானது. அதன் கனம் சுற்றிலும் அரை முழமும் அதன் அடிப்பாகம் சுற்றிலும் ஒரு முழமுமாய் இருந்தது. பீடத்தின் படிகள் கிழக்கு நோக்கி இருந்தன.

பலிமேடை அர்ப்பணம்

18பின்னர் அம்மனிதர் என்னிடம் கூறியது: மானிடா! தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; பீடத்தைக் கட்டியபின் பீடத்தில் எரிபலியிடுகையிலும், குருதித் தெளிப்புப் பலியிடுகையிலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகளாவன:
19என்னை அணுகி வந்து என் முன்னிலையில் திருப்பணிபுரியம் சாதோக்கின் வழிவந்த லேவியராகிய குருக்களுக்கு ஓர் இளங்காளையைப் பாவம் போக்கும் பலியாய்த் தர வேண்டும். இது தலைவராகிய ஆண்டவரின் அறிவிப்பு.
20நீங்கள் அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துப் பீடத்தின் நான்கு கொம்புகளிலும் மேல்விளிம்பின் நான்கு முனைகளிலும் சுற்றுமுள்ள சதுரங்கள் முழுவதிலும் தடவ வேண்டும். இவ்வாறு பீடத்தையும் புனிதப்படுத்தி அதற்குக் கறைநீக்கம் செய்ய வேண்டும்.
21பாவம் போக்கும் பலிக்கான இளங்காளையைக் கோவில் பகுதியில் தூயகத்துக்கு வெளியே குறிப்பிட்ட பகுதியில் எரிக்க வேண்டும்.
22இரண்டாம் நாள் ஒரு மாசு மறுவற்ற ஆட்டுக்கிடாயை எடுத்து பாவம் போக்கும் பலியாய்ச் செலுத்த வேண்டும். இவ்வாறு இளங்காளையினால் புனிதப்படுத்துவது போல் பீடத்தைப் புனிதப்படுத்த வேண்டும்.
23அதைப் புனிதப்படுத்தி முடிந்தபின் நீங்கள் மந்தையிலிருந்து, மாசு மறுவற்ற ஒர் இளங்காளையையும் ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் பலியிட வேண்டும்.
24அவற்றை ஆண்டவரின் முன்னிலையில் படைக்க வேண்டும். குருக்கள் அதன்மேல் உப்புத் தூவி அவற்றை ஆண்டவருக்கு எரிபலியாய் அளிக்க வேண்டும்.
25ஏழு நாள்களுக்குத் தினமும் பாவம் போக்கும் பலியாய் நீங்கள் ஆட்டுக்கிடாயைக் கொடுக்க வேண்டும். மேலும் நீங்கள் மந்தையிலிருந்து மாசு மறுவற்ற ஓர் இளங்காளையையும் ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கொடுக்க வேண்டும்.
26ஏழு நாள்களுக்கு அவைகள் பீடத்திற்காய்ப் பாவக்கழுவாய் செய்து அதைப் புனிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் அதை அர்ப்பணிப்பார்கள்.
27இந்நாள்கள் முடிந்தபின் எட்டாம் நாளிலிருந்து குருக்கள் எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்த வேண்டும். நான் அவற்றை ஏற்றுக்கொள்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

43:2 எசே 10:3-4; 18-19; 11:22-23; திவெ 1:15. 43:13-17 விப 27:1-2; 2 குறி 4:1. 43:27 விப 29:35-37.