தீருக்கு எதிரான இறைவாக்கு

1பதினோராம் ஆண்டில், மாதத்தின் முதல் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

2மானிடா! எருசலேமைக் குறித்து

தீர் நகரம் கூறியது: ‘ஆகா!

நாடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன.

அந்நகரம் எனக்குத் திறந்துள்ளது.

அது அழிவில் வீழ்ந்துகிடப்பதால்

நான் வளமடைவேன்.’

3எனவே, தலைவராகிய ஆண்டவர்

இவ்வாறு கூறுகிறார்;

தீர் நகரே! நான்

உனக்கு எதிராய் இருக்கிறேன்;

கடல் அலைகள் எழும்புவதுபோல்

உனக்கு எதிராகப் பல மக்களினங்கள்

எழும்பும்படிச் செய்வேன்.

4அவர்கள் தீர் நகரின்

மதில்களை அழிப்பர்;

அதன் காவல் மாடங்களை

இடித்துத் தள்ளுவர்;

இடிபாடுகளும் அதில் இராதபடி

வெறும் கற்பாறையாகத்

தோன்றச் செய்வேன்.

5கடல் நடுவே வலைகாயும்

திட்டாய் அது மாறும்;

ஏனெனில் நானே உரைத்தேன்

என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

எல்லா மக்களினங்களுக்கும்

கொள்ளைப் பொருளாகும் அந்நகர்.

6உள் நாட்டில் உள்ள அதன் புற நகர்கள்

வாளால் அழிக்கப்படும்;

அப்போது நானே ஆண்டவர் என்பதை

அவர்கள் அறிந்து கொள்வர்.

7ஏனெனில், தலைவராகிய ஆண்டவர்

இவ்வாறு கூறுகிறார்;

இதோ வடக்கிலுள்ள

மன்னரின் மன்னனாம்

பாபிலோனின் மன்னன்

நெபுகத்னேசரைக்

குதிரைகளோடும் தேர்களோடும்

குதிரை வீரர்களோடும்

பெரிய படைகளோடும்

தீர் நகருக்கு எதிராக வரச் செய்வேன்.

8உள் நாட்டிலுள்ள உன் புறநகர்களை

அவன் வாளால் வீழ்த்துவான்;

உனக்கெதிராய் மண்மேடு எழுப்பி

உன் மதில்களுக்கு எதிராய்

முற்றுகை அரண் அமைத்து

உனக்கெதிராய்த்

தன் கேடயங்களை உயர்த்துவான்.

9அரண்தகர் பொறிகளை

உன் மதில்களுக்கு எதிராய்த் திருப்பி,

உன் காவல் மாடங்களைப்

படைக் கலன்களால் நொறுக்குவான்.

10அவனுடைய குதிரைகள்

மிகுதியானவை;

எனவே அவை கிளப்பும் புழுதி

உன்னை மூடும்;

இடித்துத் திறக்கப்பட்ட நகரில்

எளிதாய் நுழைவதுபோல்

அவன் உன் நகரில் நுழைகையில்,

குதிரைகளும் வண்டிகளும்

தேர்களும் எழுப்பும் பேரொலியால்

உன் மதில்கள் அதிரும்.

11குதிரைகள் குளம்புகளால்

உன் தெருக்களை அவன் மிதிப்பான்;

வாளால் உன் மக்களைக் கொல்வான்;

வலிமையான உன் தூண்கள்

தரையில் வீழும்.

12அவர்கள் உன் செல்வத்தைக்

கொள்ளையடித்து

உன் வாணிபச் சரக்கைப்

பறித்துக் கொண்டுபோவர்;

உன் மதில்களை இடிப்பர்;

உன் அழகிய வீடுகளை அழிப்பர்;

உன் கற்களையும் மரங்களையும்

இடிபாடுகளையும் கடலில் எறிவர்.

13உன் பாடலின் ஒலியை

நிறுத்திவிடுவேன்;

இனிமேல் உன் யாழோசை கேட்காது.

14உன்னை ஒரு வெறுமையான

பாறையாக்குவேன்;

நீயோ வலைகாயும் திட்டாவாய்;

ஒருபோதும் நீ திரும்பக்

கட்டியெழுப்பப்பட மாட்டாய்;

ஏனெனில், ஆண்டவராகிய நானே

இதை உரைத்தேன், என்கிறார்

தலைவராகிய ஆண்டவர்.

15தலைவராகிய ஆண்டவர்

தீர்நகருக்குக் கூறுவது இதுவே;

நீ பேரொலியுடன் வீழ்ச்சியுறுகையில்,

உன் மக்கள் காயமுற்று

ஓலமிடுகையில்,

அவர்கள் உன் நடுவே

கொல்லப்படுகையில்,

கடற்கரை நகர்கள் அதிராவோ?

16அப்போது, கடற்கரைத் தலைவர்கள் அனைவரும் தங்கள் அரியணையை விட்டிறங்கித் தங்கள் உயர்ந்த ஆடைகளையும் பூப் பின்னல் ஆடைகளையும் அகற்றுவர்; திகிலடைந்தவர்களாய்த் தரையில் அமர்வர்; ஒவ்வொரு நொடியும் உன்னைக் கண்டு மருண்டு நடுங்குவர்.

17அப்போது உன்னைக் குறித்து இரங்கற்பா ஒன்றுபாடி உன்னிடம் சொல்வர்;

சீர்மிகு மாநகரே!

நெய்தல்நில மாந்தரால்

நிறைந்தவளே! மாகடலில்

வலிமையோடு விளங்கினையே!

நீயும் உன்னில் வாழ் மக்களும்

அடுத்திருந்த அனைவர்க்கும்

பேரச்சம் விளைவித்தீர்!

அந்தோ! என்னே உன் வீழ்ச்சி!

18இப்போது, உன் வீழ்ச்சியில்

கடற்கரை நகர்கள் நடுங்குகின்றன;

உன் அழிவில்

தீவுகள் திகிலுறுகின்றன.

19தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; மக்கள் குடியேறாத நகர்போல் அழிந்த நகராக நான் உன்னை மாற்றுகையில், ஆழ்கடலை உன்மேல் கொண்டு வருகையில், அதன் வெள்ளம் உன்னை மோதி மூடுகையில்,
20நான் உன்னைப் பாதாளத்தில் இறங்குகிறவர்களோடு இறக்கி, படுகுழியில் இருக்கும் மறக்கப்பட்டாரோடு சேர்ப்பேன். கீழுலகில் உன்னை இருக்க வைப்பேன். பழங்கால இடிபாடுகள் போன்ற படுகுழிக்குப் போகிறவர்களுடன் நீ இருப்பாய். நீ திரும்பி வரமாட்டாய்; வாழ்வோர் நாட்டில் உன் இடத்தை மீண்டும் பிடிக்க மாட்டாய்.
21உன்னை நடுங்குதற்குரிய முடிவுக்குக் கொண்டு வருவேன்; நீ இனி இருக்கமாட்டாய். உன்னைத் தேடுவார்கள்; ஆனால் நீ காணப்படமாட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

26:1-28:19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. 26:13 திவெ 18:22. 26:16-18 திவெ 18:9-10. 26:21 திவெ 18:21.