எருசலேம் படையெடுப்புக்கான காரணங்கள்

1நீதியைக் கடைப்பிடித்து

உண்மையை நாடும் ஒரு மனிதரைக்

கண்டுபிடிக்க முடியுமாவென

எருசலேமின் தெருக்களில்

சுற்றிப் பார்த்துத் தெரிந்துகொள்;

அவளுடைய பொது இடங்களில்

கவனமாய்த் தேடிப்பார்; கண்டுபிடித்தால்,

அவளுக்கு மன்னிப்பு அளிப்பேன்.

2வாழும் ஆண்டவர் மேல்

அவர்கள் ஆணையிடலாம்;

ஆனால் அது பொய்யாணையே.

3ஆண்டவரே, உம் கண்கள்

பற்றுறுதியை அன்றோ நோக்குகின்றன!

நீர் அவர்களை நொறுக்கினீர்;

அவர்களோ வேதனையை உணரவில்லை;

நீர் அவர்களை அழித்தீர்;

அவர்களோ திருந்த மறுத்தனர்;

அவர்கள் தங்கள் முகத்தைப்

பாறையினும் கடியதாக

இறுக்கிக்கொண்டனர்.

உம்மிடம் திரும்பிவர மறுத்தனர்.

4நான் ‘அவர்கள் தாழ்நிலையில்

உள்ளவர்கள்;

அறிவற்றுச் செயலாற்றுகின்றார்கள்’

என எண்ணினேன்;

ஏனெனில், அவர்கள் ஆண்டவரின்

வழிமுறைகளையும்,

தம் கடவுளின் நெறிமுறைகளையும்

அறியாதிருக்கின்றார்கள்.

5நான் உயர் நிலையில்

உள்ளவர்களிடம் போய்,

அவர்களிடம் பேசுவேன்.

ஏனெனில், அவர்கள்

ஆண்டவரின் வழிமுறைகளையும்,

தம் கடவுளின் நெறிமுறைகளையும்

அறிந்தவர்களாய் இருக்கிறார்கள்என

நினைத்தேன். ஆனால்,

அவர்களும் நுகத்தை முறித்தார்கள்;

தளைகளை அறுத்தார்கள்.

6எனவே காட்டுச் சிங்கம்

அவர்களைக் கொல்லும்,

பாலைநிலத்து ஓநாய்

அவர்களை அழிக்கும்,

சிறுத்தை அவர்கள் நகர்கள் மேல்

கண்வைத்திருக்கும்;

அவற்றிலிருந்து வெளியேறும் அனைவரும்

பீறிக் கிழித்தெறியப்படுவர்.

ஏனெனில், அவர்கள்

வன்செயல்கள் பல செய்தனர்;

என்னை விட்டுப் பன்முறை

விலகிச் சென்றனர்.

7நான் ஏன் உன்னை

மன்னிக்க வேண்டும்?

உன் மக்கள்

என்னைப் புறக்கணித்தார்கள்;

தெய்வங்கள் அல்லாதவைமீது

ஆணையிட்டார்கள்;

அவர்கள் உண்டு

நிறைவடையுமாறு செய்தேன்;

அவர்களோ

விபசாரம் பண்ணினார்கள்;

விலைமாதர் வீட்டில் கூடினார்கள்;

8தின்று கொழுத்து மோக வெறி கொண்ட

குதிரைகள்போல்,

ஒவ்வொருவனும் தனக்கு

அடுத்திருப்பவன் மனைவியை நோக்கிக்

கனைக்கிறான்.

9இவற்றிற்காக நான்

தண்டிக்க மாட்டேனா?

என்கிறார் ஆண்டவர்.

இத்தகைய மக்களை நான்

பழி வாங்காமல் இருப்பேனா?

10திராட்சைத் தோட்டச்

சுவர்கள் மீது ஏறி அழியுங்கள்;

எனினும் முற்றிலும் அழிக்க வேண்டாம்.

அதன் படர்கொடிகளை

ஒடித்தெறியுங்கள்.

அவை ஆண்டவருடையவை அல்ல.

11ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாரும்

யூதா வீட்டாரும் எனக்கு எதிராக

நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டனர்,

என்கிறார் ஆண்டவர்.

12அவர்கள் ஆண்டவரைக் குறித்துப்

பொய்யாகச் சொன்னது:

“அவர் ஒன்றும் செய்யமாட்டார்;

நமக்குத் தீமை எதுவும் வராது;

வாளையும் பஞ்சத்தையும்

நாம் காணப்போதில்லை.”

13இறைவாக்கினர் பேசுவதெல்லாம்

காற்றோடு காற்றாய்ப் போகும்.

இறைவாக்கு அவர்களிடம் இல்லை;

அவர்கள் கூறியவாறு

அவர்களுக்கே நிகழும்.

வரப்போகும் எதிரிகள்

14ஆகவே படைகளின் கடவுளாகிய

ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:

“அவர்கள் இப்படிப் பேசியதால்

நான் உன் வாயில் வைக்கும்

என் சொற்கள் நெருப்பாகும்.

உன் வாயில் வைத்த அவை

மரக்கட்டைகளாகிய இம்மக்களை

எரித்துவிடும்.

15இஸ்ரயேல் வீட்டாரே,

இதோ! தொலையிலிருந்து

உங்களுக்கு எதிராக ஓரினத்தை

அழைத்து வருவேன்,

என்கிறார் ஆண்டவர்.

அது எதையும் தாங்கும் இனம்;

தொன்று தொட்டு

நிலைத்து நிற்கும் இனம்.

அதன் மொழி உனக்குப் புரியாது;

அவர்கள் பேசுவது உனக்குப் புரியாது.

16அவர்களது அம்புக் கூடு

திறந்த கல்லறை போன்றது.

அவர்கள் அனைவரும்

வலிமை வாய்ந்தவர்கள்.

17அவர்கள் உன் விளைச்சலையும்

உணவையும் விழுங்கிவிடுவார்கள்;

புதல்வர், புதல்வியரை

விழுங்கிவிடுவார்கள்;

உன் ஆடு மாடுகளை

விழுங்கிவிடுவார்கள்;

உன் திராட்சைக் கொடிகளையும்

அத்தி மரங்களையும்

விழுங்கிவிடுவார்கள்;

நீ நம்பியிருக்கும்

உன் அரண்சூழ் நகர்களை

வாளால் அழிப்பார்கள்.

18அந்நாள்களில்கூட நான் உங்களை முற்றும் அழிக்கமாட்டேன்,” என்கிறார் ஆண்டவர்.
19“எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்கு இவற்றை எல்லாம் ஏன் செய்தார்?” என அவர்கள் கேட்கும்போது, நீ அவர்களிடம், “நீங்கள் என்னைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களுக்கு உங்கள் நாட்டில் ஊழியம் செய்ததுபோல் உங்களுக்கு உரிமை இல்லாத நாட்டில் வேற்று நாட்டாருக்கு நீங்கள் ஊழியம் செய்வீர்கள்” என்று சொல்.

இறைவனின் எச்சரிக்கை

20யாக்கோபின் வீட்டாருக்கு

இதைப்பறைசாற்றுங்கள்;

யூதாவின் வீட்டாருக்கு அறிவியுங்கள்.

21கண்ணிருந்தும் காணாத,

காதிருந்தும் கேளாத மதிகெட்ட,

இதயமற்ற மக்களே, கேளுங்கள்;

22உங்களுக்கு என் மீது அச்சமில்லையா?

என்கிறார் ஆண்டவர்.

என் முன்னிலையில்

நீங்கள் நடுங்க வேண்டாமா?

கடலுக்கு எல்லையாக

மணலை வைத்தேன்.

இது என்றென்றும் உள்ள ஒரு வரம்பு,

அதனைக் கடக்க முடியாது.

அலைகள் அதன் மீது மோதியடிக்கலாம்;

எனினும் அதன்மேல்

வெற்றி கொள்ள முடியாது.

அவைகள் சீறி முழங்கலாம்;

எனினும் அதனை மீற முடியாது.

23இம்மக்களோ கட்டுக்கடங்காதவர்,

பிடிவாத குணத்தினர்,

என்னை விட்டு விலகிச் சென்றனர்.

24“தக்க காலத்தில் முன் மாரி,

பின் மாரியைத் தருபவரும்,

விளைச்சலுக்காகக்

குறிக்கப்பட்ட வாரங்களை

நமக்காகக் காத்து வருபவருமான

நம் கடவுளாகிய ஆண்டவருக்கு

அஞ்சுவோம்” என்னும் எண்ணம்

அவர்கள் உள்ளத்தில் எழவில்லை.

25உங்கள் குற்றங்கள்

இவற்றை எல்லாம் தடுத்தன;

உங்கள் பாவங்களே உங்களுக்கு

நன்மை வராமலிருக்கச் செய்தன.

26ஏனெனில், என் மக்களிடையே

தீயோர் காணப்படுகின்றனர்;

வேடர் பதுங்கியிருப்பதுபோல்

அவர்கள் மறைந்து கண்ணி வைத்து

மனிதர்களைப் பிடிக்கின்றனர்.

27பறவைகளால்

கூண்டு நிறைந்திருப்பது போல,

அவர்களின் வீடுகள்

சூழ்ச்சிவழி கிடைத்த

பொருள்களினால் நிறைந்துள்ளன.

இவ்வாறு அவர்கள் பெரியவர்களும்

செல்வர்களும் ஆனார்கள்.

28அவர்கள் கொழுத்துத்

தளதள வென்றிருக்கின்றார்கள்;

அவர்களின் தீச்செயல்களுக்குக்

கணக்கில்லை;

வழக்குகளை

நீதியுடன் விசாரிப்பதில்லை;

அனாதைகள் வளம்பெறும் வகையில்

அவர்கள் வழக்கை விசாரிப்பதில்லை.

ஏழைகளின் உரிமைகளை

நிலைநாட்டுவதுமில்லை.

29இவற்றிற்காக நான்

இவர்களைத் தண்டிக்க வேண்டாமா?

என்கிறார் ஆண்டவர்.

இத்தகைய மக்களினத்தை

நான் பழிவாங்காமல் விடுவேனா?

30திகைப்பும் திகிலும் ஊட்டும் நிகழ்ச்சி

நாட்டில் நடக்கின்றது.

31இறைவாக்கினர் பொய்யை

இறைவாக்காக உரைக்கின்றனர்;

குருக்கள் தங்கள் விருப்பப்படியே

அதிகாரம் செலுத்துகின்றனர்;

இதையே என் மக்களும் விரும்புகின்றனர்;

ஆனால் முடிவில் என்ன செய்வீர்கள்?


5:21 எசா 6:9-10; எசே 12:2; மாற் 8:18. 5:22 யோபு 38:8-11.