இரேக்காபு வீட்டாரின் எடுத்துக்காட்டு

1யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிமுடைய நாள்களில் ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு:
2‘நீ இரேக்காபு குடியிருப்புக்குச் செல். அவர்களோடு பேசி ஆண்டவரின் இல்லத்தில் அறைகளுள் ஒன்றுக்கு அவர்களை அழைத்துவா. அங்கே அவர்கள் பருகிடத் திராட்சை இரசம் கொடு.’
3அவ்வாறே அபட்சனியாவின் பேரனும் மற்றோர் எரேமியாவின் மகனுமான யாசனியாவையும் அவருடைய சகோதரரையும் புதல்வர் எல்லாரையும் இரேக்காபு வீட்டார் அனைவரையும் நான் அழைத்து,
4கடவுளின் அடியவரான இக்தலியாவின் மகன் ஆனானுடைய புதல்வரின் அறைக்குக் கூட்டிவந்தேன். அந்த அறை ஆண்டவரின் இல்லத்தில் தலைவர்களின் அறைக்கு அருகில், சல்லூம் மகனும் வாயில் காவலருமான மாசேயாவின் அறைக்குமேல் இருந்தது.
5நான் திராட்சை இரசம் நிறைந்த பாத்திரங்களையும கிண்ணங்களையும் இரேக்காபு வீட்டாரின் மக்கள்முன் வைத்து, அவர்களை நோக்கி, “திராட்சை இரசம் பருகுங்கள்” என்றேன்.
6அவர்களோ, “நாங்கள் திராட்சை இரசம் பருகமாட்டோம்; ஏனெனில் இரேக்காபின் மகனும் எங்கள் மூதாதையுமான யோனதாபு எங்களுக்குக் கொடுத்துள்ள கட்டளையாவது; ‘நீங்களோ உங்கள் மக்களோ என்றுமே திராட்சை இரசம் பருகலாகாது.
7வீடு கட்டிக்கொள்ளவோ, விதை விதைக்கவோ, திராட்சைத் தோட்டம் நடவோ அதை உடைமையாக்கிக் கொள்ளவோ கூடாது. மாறாக, நீங்கள் தங்கியிருக்கும் இந்நிலத்தின் கண் நெடுநாள்வாழும் பொருட்டு, உங்கள் வாழ்நாள் முழுவதும் கூடாரங்களில் குடியிருங்கள்.’
8ஆகையால் இரேக்காபின் மகனும் எங்கள் மூதாதையுமான யோனதாபு எங்களுக்குக் கட்டளையிட்டுள்ள எல்லாவற்றுக்கும் நாங்கள் கீழ்ப்படிந்து வருகிறோம். அதன்படி நாங்களும் எங்கள் மனைவியர், புதல்வர், புதல்வியர் ஆகிய எல்லாருமே எங்கள் வாழ்நாள் முழுவதும் திராட்சை இரசம் பருகியதுமில்லை;
9குடியிருக்க வீடுகள் கட்டிக் கொண்டதுமில்லை. எங்களுக்காகத் திராட்சைத் தோட்டமோ வயலோ விதையோ எதுவுமே கிடையாது.
10கூடாரங்களில்தான் நாங்கள் குடியிருக்கிறோம். எங்கள் மூதாதையான யோனதாபு எங்களுக்குக் கட்டளையிட்டுள்ள அனைத்துக்கும் நாங்கள் கீழ்ப்படிந்து நடக்கிறோம்.
11ஆனால் பாபிலோனிய மன்னன் நெபுகத்கேனசர் இந்நாட்டின்மீது படையெடுத்து வந்தபொழுது, ‘வாருங்கள், கல்தேயர் படைக்கும் சிரியர் படைக்கும் தப்பித்துக் கொள்ளுமாறு எருசலேமுக்கு ஓடிப் போவோம்’ என்று நாங்கள் சொன்னோம். இவ்வாறு எருசலேமில் நாங்கள் தங்கி வாழ்கிறோம்” என்றனர்.
12பின்னர் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:
13இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ போய், யூதா மக்களையும் எருசலேம் குடிகளையும் பார்த்து, ‘நீங்கள் என் அறிவுரையை ஏற்று, என் சொற்களுக்குக் கீழ்ப்படிய மாட்டீர்களா?’ என்று கேள், என்கிறார் ஆண்டவர்.
14திராட்சை இரசம் பருகவேண்டாம் என்று இரேக்காபின் மகன் யோனதாபு தம் வீட்டாருக்குக் கொடுத்திருந்த கட்டளை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்றுவரை அவர்கள் திராட்சை இரசம் பருகுவது கிடையாது. இவ்வாறு தங்கள் மூதாதையின் கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிந்து வருகிறார்கள். நானோ உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லியும் நீங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை.
15இறைவாக்கினரான என் ஊழியர் அனைவரையும் நான் உங்களிடம் மீண்டும் மீண்டும் அனுப்பி வைத்தேன். ‘இப்பொழுது நீங்கள் அனைவரும் உங்கள் தீய வழியினின்று திரும்பி வாருங்கள்; உங்கள் செயல்களைச் சீர்ப்படுத்திக்கொள்ளுங்கள். வேற்றுத்தெய்வங்களை நாடிச்சென்று அவற்றை வழிபடாதீர்கள். அப்படியானால், உங்களுக்கும் உங்கள் மூதாதையர்க்கும் நான் கொடுத்துள்ள நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள்’ என்று அவர்களைச் சொல்லவைத்தேன். நீங்களோ எனக்குச் செவிசாய்க்கவுமில்லை, கீழ்ப்படியவுமில்லை.
16இரேக்காபின் மகனான யோனதாபின் மக்கள் தம் மூதாதையின் கட்டளையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இம்மக்களோ எனக்குக் கீழ்ப்படியவில்லை.
17எனவே இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இதோ, நான் எச்சரித்திருந்த எல்லாத் தீங்குகளும் யூதாவுக்கும் எருசலேமின் அனைத்துக் குடிகளுக்கும் நேரிடச் செய்வேன். ஏனெனில் நான் அவர்களோடு பேசியிருந்தும் அவர்கள் எனக்குச் செவி சாய்க்கவில்லை; நான் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தும் அவர்கள் எனக்கு மறுமொழி கூறவில்லை.
18இரேக்காபின் வீட்டாரிடம் எரேமியா கூறியது: இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீங்கள் உங்கள் மூதாதையாம் யோனதாபின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை எல்லாம் நிறைவேற்றி, அவர் உங்களுக்குக் கொடுத்திருந்த அறிவுரை அனைத்தையும் கடைப்பிடித்து வந்துள்ளீர்கள்.
19ஆதலால் இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது; என் திருமுன் என்றும் பணிவிடை புரியத்தக்க ஒருவன், இரேக்காபின் மகன் யோனதாபுக்கு இல்லாமல் போகான்.

35:1 2 அர 23:36-24:6; 2 குறி 36:5-7.