விடுதலைபற்றிய வாக்குறுதியும் புதிய உடன்படிக்கையும்

1ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு மீண்டும் அருளப்பட்டது:
2“இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் உனக்குச் சொல்லியிருக்கும் சொற்களை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவை.
3ஏனெனில் நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது என்னுடைய மக்களான இஸ்ரயேலையும் யூதாவையும் அவர்களது அடிமைத்தனத்தினின்று அழைத்து வருவேன்; அவர்களுடைய மூதாதையர்க்கு நான் கொடுத்திருந்த நாட்டுக்கு அவர்களைத் திரும்பிவரச் செய்வேன். அவர்களும் அதை உடைமையாக்கிக்கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர்.”
4இஸ்ரயேலையும் யூதாவையும் குறித்து ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே:

5ஆண்டவர் கூறுகின்றார்;

திடுக்கிடச் செய்யும் ஒலியை

நான் கேட்கின்றேன்;

அது அச்சத்தின் ஒலி;

சமாதானத்தின் ஒலி அன்று.

6‘ஆண்மகன் எவனாவது

பிள்ளை பெற்றதுண்டா?’ என்று

கேட்டுப் பாருங்கள்.

அப்படியிருக்க, ஒவ்வோர் ஆணும்

பேறுகாலப் பெண்ணைப்போலத்

தன் இடுப்பில் கையை

வைத்துக் கொண்டிருப்பதை

நான் ஏன் காண்கிறேன்?

எல்லா முகங்களும் மாறிவிட்டன;

அவை வெளிறிப்போய்விட்டன!

7அந்தோ! அந்த நாள் பெரிய நாள்;

மற்றெந்த நாளும்

அதைப் போன்றில்லை.

யாக்கோபுக்கு அது

வேதனையின் காலம்;

ஆனால் அதனின்று

அவன் விடுவிக்கப்பெறுவான்.

8படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; அந்நாளில் உன்னுடைய கழுத்திலிருக்கும் அவனது நுகத்தை முறித்துப்போடுவேன்; அவனுடைய விலங்குகளை உடைத்தெறிவேன்.
9அயல்நாட்டவர் அவனை மீண்டும் அடிமைப்படுத்தமாட்டார். ஆனால் அவர்களின் கடவுளாகிய ஆண்டவருக்கும், அவர்களுக்காக நான் எழச்செய்யவிருக்கும் மன்னன் தாவீதுக்கும் அவர்கள் ஊழியம் புரிவார்கள்!

10என் ஊழியன் யாக்கோபே,

அஞ்சாதே! இஸ்ரயேலே, கலங்காதே,

என்கிறார் ஆண்டவர்.

தொலை நாட்டினின்று

உன்னை நான் மீட்பேன்;

அடிமைத்தன நாட்டினின்று

உன் வழிமரபினரை விடுவிப்பேன்.

யாக்கோபு திரும்பிவந்து

அமைதியில் இளைப்பாறுவான்;

அவனை அச்சுறுத்துவார் எவருமிலர்.

11நான் உன்னோடு இருக்கின்றேன்;

உன்னை மீட்பதற்காக உள்ளேன்,

என்கிறார் ஆண்டவர்.

எந்த மக்களினத்தார் இடையே

நான் உன்னைச் சிதறடித்தேனோ

அவர்கள் அனைவரையும்

முற்றிலும் அழித்தொழிப்பேன்;

உன்னையோ முற்றிலும்

அழிக்கமாட்டேன்;

உன்னை நீதியான முறையில்

தண்டிப்பேன்;

உன்னைத் தண்டிக்காமல்

விட்டுவிடமாட்டேன்;

உன்னை எவ்வகையிலேனும்

தண்டியாதுவிடேன்.

12ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;

உனது காயத்தைக்

குணப்படுத்த முடியாது;

உனது புண் புரையோடிப்போனது.

13உனக்காக வாதிட எவனும் இல்லை;

உனது காயத்தை ஆற்ற

மருந்தே இல்லை;

உன்னைக் குணப்படுத்தவே முடியாது.

14உன் காதலர் அனைவரும்

உன்னை மறந்துவிட்டனர்;

உன்னை அவர்கள் தேடுவதே இல்லை;

மாற்றான் தாக்குவது போல

நான் உன்னைத் தாக்கினேன்;

கொடியோன் தண்டிப்பதுபோல

நான் உன்னைத் தண்டித்தேன்;

ஏனெனில் உனது குற்றம் பெரிது;

உன் பாவங்களோ எண்ணற்றவை.

15நீ நொறுக்கப்பட்டதை எண்ணி

ஏன் அழுகின்றாய்?

உனது வேதனையைத் தணிக்கமுடியாது;

ஏனெனில் உனது குற்றமோ பெரிது;

உன் பாவங்களோ எண்ணற்றவை;

எனவே இவற்றை எல்லாம்

நான் உனக்குச் செய்தேன்.

16ஆயினும், உன்னை விழுங்குவோர்

எல்லாரும் விழுங்கப்படுவர்;

உன் பகைவர் எல்லாரும்

ஒருவர் விடாமல் நாடுகடத்தப்படுவர்;

உன்னைக் கொள்ளையடிப்போர்

அனைவரும், கொள்ளையடிக்கப்படுவர்;

உன்னைச் சூறையாடுவோர்

அனைவரும், நான் கையளிக்க,

சூறையாடப்படுவர்.

17நான் உனக்கு நலம் அளிப்பேன்;

உன்னுடைய காயங்களை ஆற்றுவேன்,

என்கிறார் ஆண்டவர்.

ஏனெனில், “தள்ளப்பட்டவள்” என்று

உன்னை அழைத்தார்கள்;

‘இந்தச் சீயோனைப் பற்றிக்

கவலைப்படுவார் யாருமிலர்’,

என்றார்கள்.

18ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;

அடிமைத் தனத்தினின்று

நான் யாக்கோபின் கூடாரங்களை

திரும்பக் கொணர்வேன்;

அவனுடைய உறைவிடங்கள்மீது

நான் இரக்கம் காட்டுவேன்;

அவற்றின் இடிபாடுகள்மேலேயே

நகர் மீண்டும் கட்டி எழுப்பப்படும்;

அரண்மனையும் அதற்குரிய

இடத்திலேயே அமைக்கப்படும்.

19அவர்களிடமிருந்து

நன்றிப் பாக்கள் எழும்பிவரும்;

மகிழ்ச்சியுறுவோரின்

ஆரவாரம் கேட்கும்.

அவர்களை நான்

பல்கிப் பெருகச் செய்வேன்;

அவர்கள் எண்ணிக்கையில்

குறைய மாட்டார்கள்.

நான் அவர்களைப்

பெருமைப் படுத்துவேன்;

இனி அவர்கள்

சிறுமையுற மாட்டார்கள்.

20அவர்களுடைய பிள்ளைகள்

முன்புபோல் இருப்பர்;

அவர்களது கூட்டமைப்பு

என் திருமுன் நிலை நாட்டப்படும்;

அவர்களை ஒடுக்குவோர்

அனைவரையும் தண்டிப்பேன்.

21அவர்களின் தலைவன்

அவர்களுள் ஒருவனாகவே இருப்பான்;

அவர்களை ஆள்பவன்

அவர்கள் நடுவினின்றே தோன்றுவான்;

அவன் என்னை நெருங்கிவரச் செய்வேன்;

அவனும் என்னை அணுகிவருவான்;

ஏனெனில், என்னை அணுகிவர

வேறு யாருக்குத் துணிவு உண்டு?,

என்கிறார் ஆண்டவர்.

22நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்;

நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.

23இதோ ஆண்டவரின் புயல்!

அவரது சினம்

சூறாவளிபோல் சுழன்றெழும்.

அது தீயோரின் தலையைத் தாக்கிச்

சுழன்றடிக்கும்.

24ஆண்டவர் மனத்தில் கொண்டுள்ள

திட்டங்கள் அனைத்தையும்

செயல்படுத்தி நிறைவேற்றாமல்

அவரது வெஞ்சினம் திரும்பிவராது;

வரவிருக்கும் நாள்களில்

அதை நீங்கள் உணர்வீர்கள்.


30:10-11 எரே 46:27-28.