ஆண்டவரின் சாட்டையான பாபிலோன்

1யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், அதாவது பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் ஆட்சியேற்ற முதல் ஆண்டில், யூதா மக்கள் அனைவரையும் குறித்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது.
2அதனை இறைவாக்கினரான எரேமியா யூதாவின் அனைத்து மக்களுக்கும், எருசலேமில் குடியிருப்போர் யாவருக்கும் எடுத்துரைத்தார்;
3ஆமோனின் மகனும் யூதாவின் அரசனுமான யோசியா ஆட்சியேற்ற பதின்மூன்றாம் ஆண்டிலிருந்து இன்றுவரை, அதாவது கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளாக, ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டு வந்துள்ளது. நானும் அதை உங்களிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளேன். நீங்களோ அதற்குச் செவிகொடுக்கவில்லை.
4ஆண்டவர்தம் ஊழியர்களான இறைவாக்கினர் எல்லாரையும் தொடர்ந்து அனுப்பியுள்ளார். நீங்களோ காது கொடுத்துக் கேட்கவில்லை; கவனிக்கவுமில்லை.
5அவரது செய்தி இதுவே; “நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர்தம் தீய வழிகளையும் தீச்செயல்களையும் விட்டு விலகுங்கள். அப்போது ஆண்டவர் உங்களுக்கும் உங்கள் மூதாதையருக்கும் எக்காலத்திற்குமெனக் கொடுத்துள்ள நாட்டில் வாழ்வீர்கள்.
6வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றுக்கு ஊழியம் செய்து வழிபடாமலும், உங்கள் கைவேலைப்பாடுகளால் எனக்குச் சினமூட்டாமலும் இருந்தால், நான் உங்களுக்குத் தீங்கிழைக்க மாட்டேன்.
7நீங்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை,” என்கிறார் ஆண்டவர். உங்கள் கை வேலைப்பாடுகளால் உங்களுக்கே தீங்கிழைக்கும் வகையில் எனக்குச் சினமூட்டினீர்கள்.
8ஆகவே படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; நீங்கள் என் சொற்களுக்குக் கீழ்ப்படியால் இருந்தீர்கள்.
9எனவே நான் வடநாட்டுக் குலங்கள் அனைத்தையும், என் ஊழியனான பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரையும் கூட்டிச் சேர்த்து, அவர்களை இந்த நாட்டுக்கும், இதன் குடிமக்களுக்கும், சுற்றியுள்ள எல்லா நாடுகளுக்கும் எதிராகக் கொண்டு வருவேன், என்கிறார் ஆண்டவர். நான் அவர்களை முற்றிலும் அழித்துவிடுவேன். அவர்கள் இகழ்ச்சிக் குறியாகக் காட்சியளிப்பார்கள்; ஏளனத்துக்கும் முடிவில்லா அழிவுக்கும் உள்ளாவார்கள்.
10அவர்களிடம் மகிழ்ச்சி ஒலியும் உவகைக் குரலும் திருமண ஆரவாரமும் எழாதிருக்கச் செய்வேன்; இயந்திரக் கற்களின் ஓசையும் விளக்கின் ஒளியும் இல்லாதிருக்கச் செய்வேன்.
11இந்நாடு முற்றிலும் அழிந்து பாழ்நிலமாகும். சுற்றியுள்ள நாடுகளும் எழுபது ஆண்டளவாய்ப் பாபிலோனிய மன்னனுக்கு அடிமையாகும்.
12ஆனால் எழுபது ஆண்டுகள் முடிந்தபின் பாபிலோனிய மன்னனையும் அந்த நாட்டையும் தண்டிப்பேன், என்கிறார் ஆண்டவர். அவர்களது குற்றத்தின் காரணமாகக் கல்தேயரின் நாட்டை என்றென்றைக்கும் பாழ்நிலம் ஆக்குவேன்.
13நான் அந்த நாட்டுக்கு எதிராய்ப் பேசியுள்ள அனைத்துச் சொற்களும், எரேமியா வேற்று நாடுகளுக்கு எதிராய் உரைத்து இந்நூலில் எழுதப்பட்டுள்ள அனைத்து இறைவாக்குகளும் அந்நாட்டின் மேல் பலிக்கச் செய்வேன்.
14அந்நாட்டினரைக் கூடப் பல நாடுகளும் மாமன்னர்களும், அடிமையாக்குவர். அவர்களின் செயல்களுக்கும் நடத்தைக்கும் ஏற்றவாறு நான் அவர்களுக்குக் கைம்மாறு அளிப்பேன்.

வேற்றினத்தார்க்கு எதிராய்

15இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே; சீற்றத்தால் நிரம்பியுள்ள இந்த இரசக் கிண்ணத்தை என் கையிலிருந்து எடுத்து, நான் உன்னை எந்த மக்களினத்தாரிடம் அனுப்புகிறேனோ அந்த மக்களினத்தார் எல்லாம் குடிக்கக் கொடு.
16நான் அவர்கள்மேல் அனுப்பப்போகும் வாளை முன்னிட்டு அவர்கள் குடித்துத் தள்ளாடி வெறிகொள்வார்கள்.
17அப்போது நான் ஆண்டவரின் கையிலிருந்து அந்தக் கிண்ணத்தை எடுத்து ஆண்டவர் என்னை எந்த மக்களித்தாரிடம் அனுப்பியிருந்தாரோ அந்த மக்களினத்தார் எல்லாம் குடிக்கச் செய்தேன்.
18எருசலேமும் யூதாவின் நகர்களும் அவற்றின் அரசர்களும் தலைவர்களும் அதனைக் குடிக்கச் செய்தேன். இன்று காண்பதுபோல், அவை அழிந்து பாழாகவும் ஏளத்துக்கும் சாபத்துக்கும் உள்ளாகவுமே இவ்வாறு செய்தேன்.
19எகிப்திய மன்னன் பார்வோன், அவன் அலுவலர்கள், தலைவர்கள், மக்கள் எல்லாரும்,
20அங்குள்ள வேற்றின மக்கள் அனைவரும், ஊசு நாட்டு மன்னர்கள் யாவரும், அனைத்துப் பெலிஸ்திய மன்னர்களும், அஸ்கலோன், காசா, எக்ரோன், அஸ்தோதில் எஞ்சியோர்,
21ஏதோம், மோவாபு, அம்னோனின் புதல்வர்,
22தீர், சீதோன் மன்னர்கள் யாவரும், கடலுக்கு அப்பாலுள்ள கடற்கரை நாட்டு மன்னர்கள் எல்லாரும்,
23தெதான், தேமா, பூசு, முன்தலையை மழித்துக் கொள்ளும் எல்லாரும்,
24அரேபியாவின் அனைத்து மன்னர்களும், பாலைநிலத்தில் வாழும் பல இன மக்களின் மன்னர்களும்,
25சிம்ரியின் மன்னர்கள் யாவரும், ஏலாம் மன்னர்கள் எல்லாரும், மேதிய மன்னர்கள் அனைவரும்,
26ஒருவருக்குப் பின் ஒருவராய் அருகிலும் தொலையிலும் உள்ள வட நாட்டு மன்னர்கள் யாவரும், மண்ணுலக நாடுகளின் அரசுகள் அனைத்தும் அக்கிண்ணத்திலிருந்து குடிக்கச் செய்தேன். அவர்களுக்குப் பிறகு சேசாக்கு* மன்னனும் குடிப்பான்.
27இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ‘குடியுங்கள், போதையேறக் குடியுங்கள்; கக்குங்கள். நான் உங்கள்மேல் அனுப்பும் வாளால் வீழுங்கள்; எழவே மாட்டீர்கள்’ என்று நீ அவர்களிடம் கூறு.
28உன் கையிலிருந்து கிண்ணத்தை எடுத்துக் குடிக்க அவர்கள் மறுத்தால், “படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் குடித்துத்தான் ஆகவேண்டும்” என்று அவர்களிடம் கூறு.
29இதோ! என் பெயர் வழங்கும் இந்நகருக்குத் தீங்கு செய்யப் போகிறேன். நீங்கள் மட்டும் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியுமா? தப்பவே முடியாது. ஏனெனில், நாட்டில் வாழ்வோர் அனைவருக்கும் எதிராக வாளை வரவழைக்கப் போகிறேன், என்கிறார் படைகளின் ஆண்டவர்.

30ஆகவே அவர்களுக்கு எதிராக

இச்சொற்களை எல்லாம்

இறைவாக்காக உரை:

“ஆண்டவர் மேலிருந்து

கர்ச்சனை செய்வார்;

தமது தூய உறைவிடத்திலிருந்து

குரல் எழுப்புவார்;

தம் இருப்பிடத்திலிருந்து

கடுமையாகக் கர்ச்சனை செய்வார்;

திராட்சைப்பழம் மிதிப்போரின்

ஆரவாரம்போல்

பூவுலகில் வாழ்வோர் அனைவருக்கு

எதிராகவும் குரல் எழுப்புவார்.

31அவரது கர்ச்சனை

உலகின் எல்லைவரை எட்டும்;

ஏனெனில், ஆண்டவர்

மக்களினங்களுக்கு எதிராக

வழக்குத் தொடரப்போகிறார்;

அவர் எல்லா மனிதர்க்கும்

தீர்ப்பு வழங்கப்போகிறார்;

தீயோரை அவர்

வாளுக்கு இரையாக்குவார்,

என்கிறார் ஆண்டவர்.”

32படைகளின் ஆண்டவர்

கூறுவது இதுவே: இதோ! தீமை

நாட்டிலிருந்து நாட்டுக்குப் பரவுகின்றது.

பூவுலகின் எல்லைகளிலிருந்து

பெரும் புயலொன்று

புறப்பட்டுப் போகின்றது.

33அந்நாளில் ஆண்டவரால் கொல்லப்பட்டவர்கள், உலகின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை விழுந்து கிடப்பார்கள். புலம்புவாரற்று, எடுத்துச் சேர்ப்பாரற்று, புதைப்பாரற்றுத் தரையில் சாணம்போல் கிடப்பார்கள்.
34மேய்ப்பர்களே! ஒப்பாரி வையுங்கள்; கதறியழுங்கள். மந்தையின் தலைவர்களே! சாம்பலில் புரளுங்கள். ஏனெனில் நீங்கள் கொல்லப்படுவதற்கும் சிதறடிக்கப்படுவதற்குமான நாள்கள் நெருங்கிவிட்டன. விலையுயர்ந்த பாத்திரம் நொறுக்கப்படுவதுபோல், நீங்கள் அழிக்கப்படுவீர்கள்.
35மேய்ப்பர்கள் ஓடி ஒளிய இயலாது. மந்தையின் தலைவர்களுக்குத் தப்ப வழியும் இராது.
36மேய்ப்பர்களின் ஆழுகுரலும் மந்தையின் தலைவர்களது ஒப்பாரியும் கேட்கின்றதே! ஏனெனில் ஆண்டவர் அவர்களின் மேய்ச்சல் நிலத்தை அழித்து விட்டார்.
37ஆண்டவரின் கோபக்கனலால் அமைதியான பசும்புல் தரைகள் அழிந்து போயின.
38தன் குகையில் இருந்து வெளியேறும் சிங்கத்தைப் போல் அவர் வெளியேறி விட்டார். கொடியோனின் வாளாலும் ஆண்டவரின் கோபக்கனலாலும் அவர்கள் நாடு பாழடைந்து போயிற்று.

25:1 2 அர 24:1; 2 குறி 36:5-7; தானி 1:1-2. 25:10 எரே 7:34; 16:9; திவெ 18:22-23. 25:11 2 குறி 36:21; எரே 29:10; தானி 9:2.
25:26 ‘சேசாக்கு’ என்னும் சொல் பாபிலோனைக் குறிக்கும்.