செதேக்கியாவின் தூதர்க்கு மறுமொழி

1மல்கியாவின் மகன் பஸ்கூரையும் மாசேயாவின் மகனாக குரு செப்பனியாவையும் செதேக்கியா அரசன் எரேமியாவிடம் அனுப்பிய நேரத்தில் ஆண்டவரின் வாக்கு அவருக்கு அருளப்பட்டது:
2அவர்கள் எரேமியாவிடம் வந்து, “பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் நமக்கு எதிராய்ப் போருக்குப் புறப்பட்டு வருகிறான். இந்நேரத்தில் ஆண்டவர் நமக்காக வியத்தகு செயல்கள் செய்து நெபுகத்னேசரைப் பின்வாங்க வைப்பாரா? என்று ஆண்டவரிடம் கேட்டுச் சொல்” என்றனர்.
3அப்போது எரேமியா அவர்களிடம் கூறியது: “நீங்கள் செதேக்கியாவிடம் இவ்வாறு சொல்லுங்கள்;
4இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: மதில்களுக்கு வெளியே உங்களுக்கு எதிராய் முற்றுகையிட்டுள்ள பாபிலோனிய மன்னனோடும் கல்தேயரோடும் போரிடுவதற்கு நீங்கள் கையாளும் படைக்கலன்களை உங்களுக்கு எதிராகத் திருப்புவேன். அவற்றை எல்லாம் இந்நகரின் மையத்தில் குவித்துவைப்பேன்.
5என் சினத்திலும், சீற்றத்திலும், கடும் வெஞ்சினத்திலும் உங்களுக்கு எதிராக நானே போரிடுவேன். ஓங்கிய கையோடும் வலிமைமிகு புயத்தோடும் போரிடுவேன்.
6இந்நகரில் வாழ்வோரை வதைப்பேன். இங்குள்ள மனிதர்களும் விலங்குகளும் பெரும் கொள்ளை நோயால் மடிவார்கள்.
7அதன் பின் யூதா அரசன் செதேக்கியாவையும் அவன் அலுவலரையும், கொள்ளைநோய், வாள், பஞ்சம் ஆகியவற்றிலிருந்து தப்பி இந்நகரில் எஞ்சியிருப்போரையும், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் கையிலும், உங்கள் பகைவர்களின் கையிலும், உங்கள் உயிரைப் பறிக்கத் தேடுவார் கையிலும் ஒப்படைப்பேன். நெபுகத்னேசர் அவர்களை வாளால் வெட்டி வீழ்த்துவான். அவர்களைக் காப்பாற்றவோ, அவர்களுக்கு இரக்கம் காட்டவோ, பரிவு காட்டவோ மாட்டான்” என்கிறார் ஆண்டவர்.
8இம்மக்களுக்கு நீ கூற வேண்டியது: ஆண்டவர் கூறுவது இதுவே: “இதோ, வாழ்வின் வழியையும் சாவின் வழியையும் உங்கள்முன் வைக்கிறேன்.
9இந்நகரில் தங்கிவிடுபவன் வாளாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் மடிவான். ஆனால், வெளியேறி உங்களை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும் கல்தேயரிடம் சரணடைபவன் உயிர்பிழைப்பான். அவன் உயிரே அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளாய் இருக்கும்.
10இந்நகருக்கு நன்மையை அல்ல, தீமையையே கொணர முடிவு செய்துள்ளேன்; அதனைப் பாபிலோனிய மன்னனிடம் கையளிக்கப்போகிறேன். அவன் அதனைத் தீக்கிரையாக்குவான், என்கிறார் ஆண்டவர்.”

யூதாவின் அரச குடும்பத்துக்கு எதிராக

11யூதாவின் அரச குடும்பத்திற்கு நீ கூறவேண்டியது: “ஆண்டவர் வாக்கைக் கேளுங்கள்:

12தாவீதின் வீட்டாரே,

ஆண்டவர் கூறுவது இதுவே:

காலைதோறும் நீதி வழங்குங்கள்;

கொள்ளையடிக்கப்பட்டவனைக்

கொடியோனிடத்திலிருந்து

விடுவியுங்கள்; இல்லையேல்

உங்கள் தீச்செயல்களை முன்னிட்டு

என் சீற்றம் நெருப்பென வெளிப்பட்டுப்

பற்றியெரியும்;

அதனை அணைப்பார் யாருமிலர்.

13பள்ளத்தாக்கில் வாழ்வோரே!

சமவெளிப் பாறையே!

‘எங்களுக்கு எதிராக யார் வரமுடியும்?

நம் கோட்டைகளில்

யார் நுழைய முடியும்?’ என்று கூறும்

உங்களுக்கு எதிராய்

நானே எழும்பியுள்ளேன்,

என்கிறார் ஆண்டவர்.

14உங்கள் செயல்களின் விளைவுக்கேற்ப

உங்களைத் தண்டிப்பேன்;

நகரிலுள்ள வனத்திற்குத்* தீமூட்டுவேன்;

சுற்றிலுமுள்ள அனைத்தையும்

அது சுட்டெரிக்கும்.


21:2 2 அர 25:1-11; 2 குறி 36:17-21.
21:14 "வனம்" என்பது இங்கு எருசலேம் அரண்மனையைக் குறிக்கும் (காண் 1 அர 7:2).