எரேமியாவின் முறையீடு

1ஆண்டவரே! நீர் நீதியுள்ளவர்;

ஆயினும் உம்மோடு நான்

வழக்காடுவேன்;

ஆம்; உம் தீர்ப்புக்கள் பற்றி

உம்மிடம் முறையிட விரும்புகிறேன்;

தீயோரின் வாழ்வு வளம் பெறக்

காரணம் என்ன?

நம்பிக்கைத் துரோகம் செய்வோர்

அமைதியுடன் வாழ்வது ஏன்?

2அவர்களை நீர் நட்டுவைத்தீர்;

அவர்களும் வேரூன்றி வளர்ந்தார்கள்;

கனியும் ஈந்தார்கள்;

அவர்களின் உதடுகளில்

நீர் எப்போதும் இருக்கின்றீர்;

அவர்கள் உள்ளத்திலிருந்தோ

வெகு தொலையில் உள்ளீர்.

3ஆனால் ஆண்டவரே!

நீர் என்னை அறிவீர்;

என்னைப் பார்க்கின்றீர்;

என் இதயம் உம்மோடு உள்ளது

என்பதைச் சோதித்து அறிகின்றீர்;

அவர்களையோ வெட்டப்படுவதற்கான

ஆடுகளைப் போலக்

கொலையின் நாளுக்கெனப்

பிரித்து வைத்தருளும்.

4எவ்வளவு காலம் மண்ணுலகம்

புலம்பிக் கொண்டிருக்கும்?

வயல்வெளி புற்பூண்டுகள் எல்லாம்

வாடிக் கிடக்கும்?

மண்ணுலகில் குடியிருப்போர் செய்த

தீமைகளின் காரணமாக,

விலங்குகளும் பறவைகளும்

அழிந்து போயின;

“நம் செயல்களைக்

கடவுள் காண்பதில்லை” என்று

அவர்கள் சொல்லிக்கொண்டார்கள்.

5காலாள்களோடு ஓடியே

நீ களைத்துப்போனாய்;

குதிரைகளோடு நீ எவ்வாறு

போட்டியிட முடியும்?

அமைதியான நாட்டிலேயே

நீ அஞ்சுகிறாய் என்றால்,

யோர்தானின் காடுகளில்

நீ என்ன செய்வாய்?

6உன் சகோதரரும்

உன் தந்தை வீட்டாரும்கூட

உனக்கு நம்பிக்கைத் துரோகம்

செய்தார்கள்;

அவர்களும் உனக்கு எதிராக

உரக்கக் கத்தினார்கள்;

அவர்கள் உன்னிடம்

இனிமையாகப் பேசினாலும்

நீ அவர்களை நம்பாதே.

ஆண்டவரின் முறையீடு

7நான் என் வீட்டைப் புறக்கணித்தேன்;

என் உரிமைச் சொத்தைத் தள்ளிவிட்டேன்;

என் உள்ளத்துக்கு இனியவளை

அவளின் எதிரிகளிடம்

ஒப்புவித்துவிட்டேன்.

8என் உரிமைச்சொத்து எனக்கு

ஒரு காட்டுச் சிங்கம்போல் ஆயிற்று;

அது எனக்கு எதிராய்க்

கர்ச்சிக்கின்றது;

எனவே நான் அதனை வெறுக்கின்றேன்.

9என் உரிமைச்சொத்து எனக்குப்

பல வண்ணப் பறவைபோல் ஆயிற்று;

சுற்றிலுமுள்ள பறவைகள் எல்லாம்

அதற்கு எதிராய் எழுந்துள்ளன;

வயல்வெளி விலங்குகளே,

வாருங்கள்; வந்து கூடுங்கள்;

அதனை விழுங்குங்கள்.

10மேய்ப்பர்கள் பலர்

என் திராட்சைத் தோட்டத்தை

அழித்தார்கள்;

எனது பங்கை மிதித்துப் போட்டார்கள்;

எனது இனிய பங்கைப்

பாழடைந்த பாலைநிலம் ஆக்கினார்கள்.

11அவர்கள் அதைப் பாழாக்கினார்கள்;

அது என்னை நோக்கிப் புலம்புகிறது;

நாடு முழுவதும் பாழாகிவிட்டது;

ஆனால் யாரும் அதுபற்றிக்

கவலைப்படுவதில்லை.

12பாழாக்குவோர் பாலைநிலத்தின்

மொட்டை மேடுகள் அனைத்தின் மேலும்

வந்துசேர்ந்துள்ளனர்;

ஏனெனில் ஆண்டவரின் வாள்,

நாட்டை ஒரு முனை முதல்

மறு முனைவரை அழித்துவிடும்;

அமைதி என்பது யாருக்குமே இல்லை.

13கோதுமையை விதைத்தார்கள்;

ஆனால் முட்களையே அறுத்தார்கள்.

உழைத்துக் களைத்தார்கள்;

ஆயினும் பயனே இல்லை.

தங்கள் அறுவடையைக் கண்டு

வெட்கம் அடைந்தார்கள்.

இதற்கு ஆண்டவரின்

கோபக்கனலே காரணம்.

அண்டை நாட்டார்க்குத் தீர்ப்பும் மீட்பும்

14ஆண்டவர் கூறுவது இதுவே; என் மக்களாகிய இஸ்ரயேல் என்னிடமிருந்து பெற்றுக்கொண்ட உரிமைச் சொத்தின்மேல் கைவைக்கும் சுற்றியுள்ள தீயோர் அனைவரையும் அவர்கள் நாட்டிலிருந்து நான் பிடுங்கிவிடுவேன். அவர்கள் நடுவிலிருந்து யூதா வீட்டாரையும் பிடுங்கிவிடுவேன்.
15அவர்களைப் பிடுங்கிவிட்டபின், நான் மீண்டும் அவர்கள்மேல் இரக்கம் காட்டுவேன். அவர்கள் ஒவ்வொருவரையும் தம் உரிமைச் சொத்துக்கும் சொந்த நாட்டுக்கும் திரும்பக் கூட்டிவருவேன்.
16அவர்கள் முன்பு பாகாலின் பெயரால் ஆணையிடும்படி என் மக்களுக்குக் கற்றுக்கொடுத்தது போல், இப்போது என் மக்களின் வழிமுறைகளைக் கவனமாய்க் கற்றுக்கொண்டு, “வாழும் ஆண்டவர் மேல் ஆணை” என்று என் பெயரால் ஆணையிடுவார்களாகில், அவர்கள் என் மக்கள் நடுவில் வாழ்ந்து வளம்பெறுவர்.
17ஆனால், எந்த மக்களினமாவது கீழ்ப்படியாவிடின், அந்த மக்களினத்தை வேரோடு பிடுங்கி அழித்துவிடுவேன், என்கிறார் ஆண்டவர்.