மக்களினத்தார் மீது ஆண்டவரின் வெற்றி

1ஏதோமிலிருந்து வருகின்ற

இவர் யார்?

கருஞ்சிவப்பு உடை உடுத்திப்

பொட்சராவிலிருந்து வரும் இவர் யார்?

அழகுமிகு ஆடை அணிந்து

பேராற்றலுடன் பீடுநடைபோடும்

இவர் யார்?

நானேதான் அவர்!

வெற்றியை பறைசாற்றுபவர்;

விடுதலை வழங்குவதில் திறன்மிக்கவர்.

2உம் ஆடை சிவப்பாய் இருப்பதேன்?

உம் உடைகள்

திராட்சை பிழியும் ஆலையில்

மிதிப்பவன் உடைபோல் இருப்பதேன்?

3தனியாளாய் நான் திராட்சை பிழியும்

ஆலையில் மிதித்தேன்;

மக்களினத்தவருள் எவனும்

என்னுடன் இருக்கவில்லை;

என் கோபத்தில் நான்

அவர்களை மிதித்தேன்;

என் சினத்தில் அவர்களை நசுக்கினேன்;

அவர்கள் செந்நீர்

என் உடைகள் மேல் தெறித்தது;

என் ஆடைகள் அனைத்தையும்

கறையாக்கினேன்.

4நான் தண்டனைத் தீர்ப்பு வழங்கும் நாள்

என் நெஞ்சத்தில் இருந்தது;

மீட்பின் ஆண்டு வந்துவிட்டது.

5சுற்றுமுற்றும் பார்த்தேன்;

துணைபுரிவோர் எவருமில்லை;

திகைப்புற்று நின்றேன்;

தாங்குவார் யாருமில்லை;

என் புயமே

எனக்கு வெற்றி கொணர்ந்தது;

என் சினமே எனக்கு ஊக்கமளித்தது.

6சினமுற்று, மக்களினங்களை மிதித்தேன்;

சீற்றமடைந்து அவர்களைக்

குடிவெறி கொள்ளச்செய்தேன்;

அவர்கள் குருதியைத்

தரையில் கொட்டினேன்.

இஸ்ரயேல் மீது ஆண்டவர் கொண்டுள்ள இரக்கம்

7ஆண்டவரின் பேரன்புச் செயல்களை

எடுத்துரைத்து

அவருக்குப் புகழ்சாற்றுவேன்;

ஏனெனில், ஆண்டவர் நமக்கு

நன்மைகள் செய்துள்ளார்;

தம் இரக்கத்தையும்

பேரன்பையும் முன்னிட்டு

இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு

மாபெரும் நன்மை செய்துள்ளார்.

8ஏனெனில், “மெய்யாகவே

அவர்கள் என் மக்கள்,

வஞ்சனை செய்யாத பிள்ளைகள்” என்று

அவர் கூறியுள்ளார்; மேலும்

அவர் அவர்களின் மீட்பர் ஆனார்.

9துன்பங்கள் அனைத்திலும்

அவர்களின் மீட்பர் ஆனார்;

தூதரோ வானதூதரோ அல்ல,

அவரே நேரடியாக

அவர்களை விடுவித்தார்;

தம் அன்பினாலும் இரக்கத்தினாலும்

அவர்களை மீட்டார்;

பண்டைய நாள்கள் அனைத்திலும்

அவர்களைத் தூக்கிச் சுமந்தார்.

10அவர்களோ, அவருக்கு எதிராக எழும்பி,

அவரது தூய ஆவியைத்

துயருறச் செய்தனர்;

ஆதலால் அவரும்

அவர்களின் பகைவராய் மாறினார்;

அவர்களை எதிர்த்து அவரே போரிட்டார்.

11அப்பொழுது அவர் மக்கள்

மோசேயின் காலமாகிய

பண்டைய நாள்களை நினைவு கூர்ந்தனர்;

தம் மந்தையை மேய்ப்பரோடு

கடலினின்று கரையேற்றியவர் எங்கே?

அவருக்குத் தம் தூய ஆவியை

அருளியவர் எங்கே?

12தம் மாட்சிமிகு புயத்தால்

மோசேயின் வலக்கையை

நடத்தி சென்றவர் எங்கே?

தம் பெயர் என்றென்றும் நிலைக்குமாறு

அவர்கள் முன்

தண்ணீரைப் பிரித்தவர் எங்கே?

13ஆழ்கடலின் நடுவே

அவர்களை நடத்திச் சென்றவர் யார்?

பாலை நிலத்தில் தளராத குதிரைபோல்

அவர்கள் தடுமாறவில்லை.

14கால்நடை பள்ளத்தாக்கினுள்

இறங்கிச் செல்வதுபோல்

அவர்களும் இளைப்பாற

ஆண்டவரின் ஆவி அவர்களை நடத்தியது.

இவ்வாறு, உமது பெயர் சிறப்புறுமாறு

நீர் உம் மக்களை நடத்திவந்தீர்.

இரக்கமும் துணையும் வேண்டி மன்றாடல்

15விண்ணகத்தினின்று கண்ணோக்கும்;

தூய்மையும் மாட்சியும் உடைய உம்

உறைவிடத்தினின்று பார்த்தருளும்;

உம் ஆர்வமும் ஆற்றலும் எங்கே?

என்மீது நீர் கொண்ட நெஞ்சுருக்கும்

அன்பும் இரக்கப்பெருக்கும் எங்கே?

என்னிடமிருந்து அவற்றை

நிறுத்தி வைத்துள்ளீரே!

16ஏனெனில், நீரே எங்கள் தந்தை;

ஆபிரகாம் எங்களை அறியார்;

இஸ்ரயேல் எங்களை ஏற்றுக் கொள்ளார்;

ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை;

பண்டை நாளிலிருந்து

‘எம் மீட்பர்’ என்பதே உம் பெயராம்.

17ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து

எங்களைப் பிறழச் செய்வதேன்?

உமக்கு அஞ்சி நடவாதவாறு

எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியதேன்?

உம் ஊழியர்களை முன்னிட்டும்,

உம் உரிமைச் சொத்தாகிய,

குலங்களை முன்னிட்டும் திரும்பிவாரும்.

18உம் திருத்தலத்தை உம் புனித மக்கள்

சிறிது காலம்

உடைமையாகக் கொண்டிருந்தனர்;

எங்கள் பகைவர்

அதைத் தரைமட்டமாக்கினர்.

19உம்மால் என்றுமே

ஆளப்படாதவர்கள் போலானோம்;

உம் பெயரால்

அழைக்கப்படாதவர்கள் போலானோம்.


63:1-6 எசா 34:5-17; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-5; ஆமோ 1:11-12; ஒப 1:14; மலா 1:2-5. 63:3 திவெ 14:20; 19:13-15. 63:5 எசா 59:16. 63:12 விப 14:21.