1தீவுகளே, என் திருமுன்னே
மௌனமாயிருங்கள்;
மக்களினங்கள் தம் ஆற்றலைப்
புதுப்பிப்பார்களாக!
அருகில் வந்து பேசுவார்களாக!
நீதித்தீர்ப்புக்காக
நாம் ஒருங்கே கூடிவருவோமாக!
2சென்றவிடமெல்லாம் சிறப்புறும்
நேர்மையாளனைக்
கிழக்கிலிருந்து எழும்பச் செய்தவர் யார்?
மக்களினங்களை
அவனிடம் கையளித்து
அரசர்களை
அவனுக்குக் கீழ்ப்படுத்தியவர் யார்?
அவன் வாள் அவர்களைப்
புழுதியாக்குகிறது;
அவன் வில் அவர்களைப்
பதர்போல் பறக்கச் செய்கிறது.
3அவன் அவர்களைத்
துரத்திச் செல்கின்றான்;
எதிர்ப்பு எதுவுமின்றி
முன்னேறுகின்றான்;
பாதை வழியே
காலடி படாது செல்கின்றான்.
4இவற்றைச்செய்து முடித்தவர் யார்?
தொடக்கத்திலிருந்தே
தலைமுறைகளை அழைத்தவரன்றோ!
ஆண்டவராகிய நானே முதலானவர்!
முடிவானவற்றுடன்
இருக்கப் போவதும் நானே!
5தீவு நாட்டினர்
அதைப் பார்த்து அஞ்சினர்;
உலகின் எல்லைகளில் வாழ்வோர்
நடுநடுங்கினர்; எனவே
அவர்கள் ஒருங்கே கூடி வந்தனர்.
6ஒவ்வொருவரும் தம் அடுத்தவருக்கு
உதவி செய்கின்றார்;
தம் அடுத்தவரிடம்,
‘திடன்கொள்’ என்கின்றார்.
7கைவினைஞர் பொற்கொல்லருக்கு
ஊக்கமூட்டுகின்றார்;
சுத்தியலால் தட்டுபவர்
சம்மட்டியால் அடிப்பவரிடம்,
பற்றவைப்பதுபற்றி, ‘நன்று’
என்று சொல்லி
உற்சாகப்படுத்துகின்றார்;
அசையாதபடி ஆணிகளால்
அதை இறுக்குகின்றார்.
8நீயோ, இஸ்ரயேலே! என் அடியவனே!
நான் தெரிந்தெடுத்த யாக்கோபே!
என் அன்பன் ஆபிரகாமின் வழிமரபே!
9உலகின் எல்லைகளினின்று
உன்னை அழைத்து வந்தேன்;
தொலைநாடுகளினின்று
உன்னை அழைத்தேன்;
‘நீ என் அடியவன்;
நான் உன்னைத் தெரிந்தெடுத்தேன்;
உன்னை நான் தள்ளிவிடவில்லை’
என்று சொன்னேன்.
10அஞ்சாதே,
நான் உன்னுடன் இருக்கிறேன்;
கலங்காதே, நான் உன் கடவுள்,
நான் உனக்கு வலிமை அளிப்பேன்;
உதவி செய்வேன்;
என் நீதியின் வலக்கரத்தால்
உன்னைத் தாங்குவேன்.
11உனக்கெதிராய்
வெகுண்டெழுவோர் அனைவரும்
மானக்கேடுற்று இழிநிலை அடைவர்;
உன்னை எதிர்த்து வழக்காடுவோர்
இல்லாதொழிவர்.
12உன்னை எதிர்த்துப் போராடியோரை
நீ தேடுவாய்; ஆனால்
அவர்களைக் கண்டுபிடிக்க மாட்டாய்;
உன்னை எதிர்த்துப் போரிட்டோர்
ஒழிந்து போவர்.
13ஏனெனில் நானே
உன் கடவுளாகிய ஆண்டவர்;
உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து,
“அஞ்சாதே, உனக்குத்
துணையாய் இருப்பேன்” என்று
உன்னிடம் சொல்பவரும் நானே.
14“யாக்கோபு என்னும் புழுவே,
இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே,
அஞ்சாதிரு; நான் உனக்குத்
துணையாய் இருப்பேன்,”
என்கிறார் ஆண்டவர்.
இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்.
15இதோ, நான் உன்னைப்
புதிய கூர்மையான
போரடிக்கும் கருவியாக்குவேன்.
நீ மலைகளைப்
போரடித்து நொறுக்குவாய்;
குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய்.
16அவற்றைத் தூற்றுவாய்,
காற்று அவற்றை வாரிக்கொண்டுபோம்;
புயல் அவற்றைச் சிதறடிக்கும்;
ஆண்டவரில் நீ அகமகிழ்வாய்;
இஸ்ரயேலின் தூயவரில்
மேன்மை அடைவாய்.
17ஏழைகளும் வறியோரும்
நீரைத் தேடுகின்றனர்;
அது கிடைக்கவில்லை.
அவர்கள் தாகத்தால்
நாவறண்டு போகின்றனர்;
ஆண்டவராகிய நான்
அவர்களுக்குப் பதிலளிப்பேன்;
இஸ்ரயேலின் கடவுளாகிய நான்
அவர்களைக் கைவிடமாட்டேன்.
18பொட்டல் மேடுகளைப் பிளந்து
ஆறுகள் தோன்றச் செய்வேன்;
பள்ளத்தாக்குகளில்
நீரூற்றுகள் புறப்படச் செய்வேன்;
பாலைநிலத்தை
நீர்த் தடாகங்களாகவும்
வறண்ட நிலத்தை
நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன்.
19பாலைநிலத்தில்
கேதுரு மரங்களை வளரச் செய்வேன்;
சித்திம் மரம், மிருதுச் செடி,
ஒலிவ மரம் ஆகியன
தோன்றச் செய்வேன்;
பாழ்நிலத்தில்
தேவதாரு மரங்களையும்,
புன்னை மரங்களையும்,
ஊசியிலை மரங்களையும் வைப்பேன்.
20அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால்
இதைச்செய்தார் என்றும்
இஸ்ரயேலின் தூயவர்
அதைப் படைத்தார் என்றும்
மக்கள் கண்டு உணர்ந்து கொள்வர்;
ஒருங்கே சிந்தித்துப் புரிந்து கொள்வர்.
21‘உங்கள் வழக்கைக் கொண்டு வாருங்கள்’
என்கிறார் ஆண்டவர்.
‘உங்கள் ஆதாரங்களை
எடுத்துரையுங்கள்’, என்கிறார்
யாக்கோபின் அரசர்.
22அத்தெய்வங்கள் அருகில் வந்து,
நிகழப்போவதை நமக்கு அறிவிக்கட்டும்;
முன்னே நடந்தவற்றை
எடுத்துரைக்கட்டும்;
நாம் சிந்தித்து அவற்றின்
இறுதி விளைவை அறிந்து கொள்வோம்;
இல்லாவிடில் வரவிருப்பவற்றை
நமக்கு எடுத்துக்கூறட்டும்.
23“நீங்கள் தெய்வங்கள் என
நாங்கள் உணரும்பொருட்டு
வருங்காலத்தில் நடப்பனவற்றை
எங்களுக்குக் கூறுங்கள்;
நன்மையாவது தீமையாவது
செய்யுங்கள்;
நாங்கள் யாவரும் ஒன்றாகக்கண்டு
திகைத்து நிற்போம்.
24இதோ, நீங்கள் ஒன்றுமில்லாமை!
உங்கள் செயலும் ஒன்றுமில்லாமையே!
உங்களைத் தேர்ந்துகொள்பவன்
வெறுக்கத்தக்கவன்”.
25நான் வடக்கிலிருந்து
ஒருவனை எழும்பச் செய்தேன்;
அவன் கதிரவன் உதிக்கும்
திசையிலிருந்து வந்துவிட்டான்;
அவன் என் பெயரைப் போற்றுவான்;
ஒருவன் சேற்றைக் குழைப்பதுபோலும்
குயவன் களிமண்ணை மிதிப்பது போலும்
அவன் ஆளுநர்களை நடத்துவான்.
26நாங்கள் அறியும்படி
தொடக்கத்திலிருந்தே
இதை அறிவித்தவர் யார்?
‘அது சரி’ என்று
நாங்கள் சொல்லும்முன்னரே
உரைத்தவர் யார்?
அப்படி எதுவும் அறிவிக்கவில்லை;
முன்னுரைக்கவில்லை;
நீங்கள் பேசியதை
யாரும் கேட்டதுமில்லை.
27“இதோ வருகிறார்கள்” என்று
முதன்முதலில் சீயோனுக்கு
அறிவித்தது நானே!
நற்செய்தியாளரை எருசலேமுக்கு
அனுப்பியதும் நானே!
28நான் சுற்றுமுற்றும் பார்த்தேன்;
எதையும் காணவில்லை;
அவற்றுள் அறிவுரை வழங்கவோ
என் வினாவுக்கு மறுமொழி தரவோ
எத்தெய்வமும் இல்லை.
29இதோ அவை அனைத்தும்
ஒன்றுமில்லாமையே!
அவற்றின் செயல்களும்
ஒன்றுமில்லாமையே!
அவற்றின் படிமங்களோ
வெறும் காற்றும் வெறுமையுமே!