எசேக்கியாவின் நோய் குணமாதல்
(2 அர 20:1-11; 2 குறி 32:24-26)

1அந்நாள்களில், எசேக்கியா நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்தார்; ஆமோட்சின் மகனான எசாயா இறைவாக்கினர் அவரைக் காணவந்து அவரை நோக்கி, “ஆண்டவர் கூறுவது இதுவே: நீர் உம் வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும்; ஏனெனில் நீர் சாகப்போகிறீர்; பிழைக்க மாட்டீர்” என்றார்.
2எசேக்கியா சுவர்ப்புறம் தம் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஆண்டவரிடம் மன்றாடி,
3“ஆண்டவரே, நான் உம் திருமுன் உண்மைவழியில் மாசற்ற மனத்துடன் நடந்து வந்ததையும் உம் பார்வைக்கு நலமானவற்றைச் செய்ததையும் நினைந்தருளும்” என்று கூறிக் கண்ணீர் சிந்தித் தேம்பித் தேம்பி அழுதார்.
4அப்போது ஆண்டவரின் வாக்கு எசாயாவுக்கு அருளப்பட்டது:
5“நீ எசேக்கியாவிடம் சென்று கூறவேண்டியது; உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை இன்னும் பதினைந்து ஆண்டு மிகுதியாக்குவேன்.
6உன்னையும் இந்த நகரையும் அசீரிய மன்னன் கையினின்று விடுவிப்பேன்; இந்த நகரைப் பாதுகாப்பேன்.
7தாம் கூறிய இந்த வார்த்தையை ஆண்டவர் நிறைவேற்றுவார் என்பதற்கு அவர் உமக்களிக்கும் அடையாளம்:
8இதோ, சாயும் கதிரவனின் நிழல் ஆகாசின் கதிரவக் கடிகையில் பத்துப் பாத அளவு பின்னிடச் செய்வேன்.” அவ்வாறே சாயும் கதிரவனின் நிழல் அக் கடிகையில் பத்துப்பாத அளவு பின்னிட்டது.
9யூதா அரசர் எசேக்கியா நோயுற்று, நோயினின்று குணமடைந்தபின் தீட்டிய எழுத்தோவியம்:
10‘என் வாழ்நாள்களின் நடுவில் இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டுமே! நான் வாழக்கூடிய எஞ்சிய ஆண்டுகளைப் பாதாளத்தின் வாயில்களில் கழிக்க நேருமே!’ என்றேன்.
11‘வாழ்வோர் உலகில் ஆண்டவரை நான் காண இயலாதே! மண்ணுலகில் குடியிருப்போருள் எந்த மனிதரையும் என்னால் பார்க்க முடியாதே!’ என்றேன்.
12என் உறைவிடம் மேய்ப்பவனின் கூடாரத்தைப்போல பெயர்க்கப்பட்டு என்னைவிட்டு அகற்றப்படுகிறது. நெசவாளன் பாவைச் சுருட்டுவதுபோல் என் வாழ்வை முடிக்கிறேன். தறியிலிருந்து அவர் என்னை அறுத்தெறிகிறார்; காலை தொடங்கி இரவுக்குள் எனக்கு முடிவுகட்டுவீர்,
13துணை வேண்டிக் காலைவரை கதறினேன்; சிங்கம்போல் அவர் என் எலும்புகள் அனைத்தையும் நொறுக்குகிறார்; காலை தொடங்கி இரவுக்குள் நீர் எனக்கு முடிவுகட்டுவீர்.
14சிட்டுக்குருவி போலும் நாரை போலும் கூக்குரலிடுகிறேன்; மாடப்புறாப்போல் விம்முகிறேன்; மேல்நோக்கிப் பார்த்து என் கண்கள் சோர்வடைந்தன; என் தலைவரே, நான் ஒடுக்கப்படுகிறேன்; எனக்குத் துணையாய் இரும்.
15நான் அவரிடம் என்ன சொல்வேன்? என்ன கூறுவேன்? ஏனெனில் அவரே இதைச் செய்தார்; மனக்கசப்பால் உறக்கமே எனக்கு இல்லாமற் போயிற்று.
16என் தலைவரே, நான் உம்மையே நம்புகின்றேன்; என் உயிர் உமக்காகவே வாழ்கின்றது; எனக்கு உடல்நலத்தை நல்கி நான் உயிர் பிழைக்கச் செய்வீர்.
17இதோ, என் கசப்புமிகு அனுபவத்தை நலமாக மாற்றினீர்; மனங்கனிந்து அழிவின் குழியிலிருந்து என் உயிரைக் காத்தீர்; என் பாவங்கள் அனைத்தையும் உன் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீர்.
18பாதாளம் உம்மைப் போற்றிப் பாடாது; சாவு உம்மைப் புகழ்ந்து ஏத்தாது; பாதாளக் குழிக்குள் இறங்குவோர், நம்பிக்கைக்குரிய உம்மை நம்பியிருப்பதில்லை!
19நான் இன்று உம்மைப் புகழ்ந்து போல் வாழ்வோரே, வாழ்வோர் மட்டுமே உம்மைப் போற்றிப் பாடுவர். தந்தையர் தம் பிள்ளைகளுக்கு உமது வாக்குப் பிறழாமை குறித்துப் போதிப்பர்.
20ஆண்டவர் எனக்கு நலமளிக்க மனம்கொண்டார்; ஆண்டவரின் இல்லத்தில் எம் புகழ்ப்பாக்களை வாழ்நாளெல்லாம் இசைக்கருவி மீட்டிப் பாடுவோம்.
21“எசேக்கியா நலமுடைய, ஓர் அத்திப்பழ அடையைக் கொண்டுவந்து பிளவையின்மேல் வைத்துக் கட்டுங்கள்” என்று எசாயா பதில் கூறியிருந்தார்.
22ஏனெனில், “ஆண்டவரின் இல்லத்திற்கு என்னால் போக முடியும் என்பதற்கு எனக்கு அடையாளம் யாது?” என்று எசேக்கியா அரசர் கேட்டிருந்தார்.