எருசலேமுக்கு ஆண்டவரின் பாதுகாப்பு

1துணை வேண்டி எகிப்துக்குச்

செல்வோருக்கு ஐயோ கேடு!

அவர்கள் குதிரைகளுக்காகக்

காத்துக் கிடக்கின்றன‌ர்;

பெரும் தேர்ப்படைகளையும்

வலிமைமிகு குதிரை வீரர்களையும்

நம்பியிருக்கிறார்கள்;

இஸ்ரயேலின் தூயவருக்காக

ஆவலுடன் காத்திருக்கவில்லை;

ஆண்டவரைத் தேடுவதுமில்லை;

2ஆனால் அவரோ ஞானமுடையவர்;

தீங்கை வருவிப்பவர்;

தம் வார்த்தைகளின் இலக்கை

மாற்றாதவர்;

தீயோர் வீட்டார்க்கும்

கொடியவருக்கு உதவுவோருக்கும்

எதிராகக் கிளர்ந்தெழுபவர்.

3எகிப்தியர் வெறும் மனிதரே,

இறைவன் அல்லர்;

அவர்கள் குதிரைகள் வெறும்

தசைப்பிண்டங்களே, ஆவிகள் அல்ல;

ஆண்டவர் தம் கையை ஓங்கும் போது

உதவி செய்பவன் இடறுவான்;

உதவி பெறுபவன் வீழ்வான்;

அவர்கள் அனைவரும் ஒருங்கே அழிந்தொழிவர்.

4ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே:

சிங்கமோ இளஞ்சிங்கமோ

தன் இரைமேல் பாய்ந்து

கர்ச்சிக்கும் போது

மேய்ப்பர் கூட்டம்

தனக்கெதிராய் எழுப்பும் கூக்குரலால்

திகிலடைவதில்லை;

அவர்கள் ஆரவாரத்தைப்

பொருட்படுத்துவதில்லை.

அதுபோல் படைகளின் ஆண்டவர்

சீயோன் மலைமேலும்

அதன் குன்றின்மேலும்

போர்புரிய இறங்கி வருவார்.

5பறக்கும் பறவைகள்போல்

படைகளின் ஆண்டவர்

எருசலேமுக்குப் பாதுகாப்பாய் இருப்பார்;

அதைப் பாதுகாத்து விடுவிப்பார்;

தண்டிக்காமல் தப்புவிப்பார்.

6இஸ்ரயேல் மக்களே! எனக்கெதிராகக் கலகம் செய்வதில் ஆழ்ந்துவிட்டீர்கள்; என்னிடம் திரும்பி வாருங்கள்.
7அந்நாளில் உங்களுள் ஒவ்வொருவரும் தமக்குப் பாவத்தை விளைவித்துக் கொள்ளுமாறு செய்த பொன், வெள்ளிச் சிலைகளைத் தூக்கி எறிந்து விடுவார்.

8“அசீரியன் வாளால் வீழ்வான்;

ஆனால் மனிதரின் வாளாலன்று;

அவனை வாள் விழுங்கிவிடும்;

ஆனால் அது மனிதரின் வாளன்று;

அவன் வாள் கண்டு, தப்பி ஓடுவான்;

அவனுடைய இளங்காளையர் அடிமையாக்கப்படுவர்.

9அவன் பாறை திகிலுற்று ஓடிப்போகும்;

அவன் தலைவர்

கலக்கமுற்று ஓடுவர்” என்கிறார்,

சீயோனில் தீப்பிழம்பையும்

எருசலேமில் தீச்சூளையையும்

கொண்ட ஆண்டவர்.