ஏதோமுக்கு வரவிருக்கும் அழிவு

1மோவாபைப் பற்றிய திருவாக்கு:

ஒரே இரவில் ஆர் நகரம்

அழிக்கப்படுவதால்

மோவாபும் அழிக்கப்படும்.

ஒரே இரவில் கீர் நகரம் அழிக்கப்படுவதால்,

மோவாபும் அழிக்கப்படும்.

2தீபோன் குடும்பத்தார் அழுது புலம்ப

உயர்ந்த இடங்களுக்கு

ஏறிச் செல்கின்றனர்;

நெபோ, மேதாபா நகரங்களைக் குறித்து

மோவாபு அலறி அழுகின்றது;

அவர்கள் அனைவரின் தலைகளும்

மழிக்கப்பட்டாயிற்று.

தாடிகள் அனைத்தும்

சிரைக்கப்பட்டதாயிற்று.

3அதன் தெருக்களில் நடமாடுவோர்

சணல் ஆடை உடுத்தி இருக்கின்றனர்;

வீட்டு மாடிகளிலும்

பொது இடங்களிலும் உள்ள யாவரும்

ஓலமிட்டு அழுகின்றனர்.

விழிநீர் ததும்பிவழியத்

தேம்பித் தேம்பி அழுகின்றனர்.

4எஸ்போன் மற்றும் எலயாலே ஊரினர்

கூக்குரலிடுகின்றனர்.

யாகசு ஊர்வரை

அவர்களின் குரல் கேட்கின்றது;

படைக்கலம் தாங்கிய மோவாபிய வீரர்கள்

கதறுகின்றார்கள்,

ஒவ்வொருவனும் மனக்கலக்கம்

அடைகிறான்.

5மோவாபுக்காக என் நெஞ்சம்

குமுறுகின்றது;

அதன் அகதிகள் சோவாருக்கும்

எக்லத்செலிசியாவுக்கும் ஓடுகின்றனர்;

ஏனெனில் அவர்கள்

லூகித்துக்கு ஏறிப்போகும் வழியில்

அழுதுகொண்டு செல்கின்றனர்;

ஒரோனயிம் சாலையில்

அழிவின் அழுகுரலை எழுப்புகின்றனர்;

6நிம்ரிமின் நீர்நிலைகள் தூர்ந்து போயின;

புல் உலர்ந்தது; பூண்டுகள் கருகின;

பசுமை என்பதே இல்லாமற் போயிற்று.

7ஆதலால் தாங்கள்

மிகுதியாக ஈட்டியவற்றையும்

சேமித்து வைத்தவற்றையும்

தூக்கிக் கொண்டு அவர்கள்

அராவிம் ஆற்றைக் கடக்கின்றனர்.

8மோவாபின் எல்லையெங்கும்

கதறியழும் குரல் எட்டுகின்றது;

அவர்களின் அவலக்குரல்

எக்லயிம் நகர்வரை கேட்கின்றது;

அவர்களின் புலம்பல்

பெயேர் ஏலிம் நகரை எட்டுகின்றது.

9தீபோன் நீர்நிலைகள்

இரத்தத்தால் நிரம்பி வழிகின்றன;

ஆயினும் தீபோன் மேல்

இன்னும் மிகுதியான
துன்பத்தைக் கொண்டு வருவேன்;

மோவாபியருள்

தப்பிப் பிழைத்தோர்மேலும்

நாட்டில் எஞ்சியிருப்போர்மேலும்

சிங்கத்தை ஏவிவிடுவேன்.