இனிமைமிகு பாடல் முன்னுரை


‘இனிமைமிகு பாடல்’ என்னும் இந்நூல் உண்மையில் ஒரு தொகைநூல்; காதற் கவிதைகளின் ஒரு தொகுப்பு. யூதப் பரம்பரையின்படி, இந்நூலில் அடங்கியுள்ள பாடல்களின் ஆசிரியர் மாமன்னர் சாலமோன்; ஆனால் சாலமோனின் காலத்திற்குப் பிற்பட்ட பாடல்களும் இந்தத் தொகைநூலில் இடம்பெற்றுள்ளன என்பதை மறுத்தல் இயலாது.

இந்நூலின் பாடல்களுக்குப் பல்வேறு பொருள்பொருத்தம் தருகின்றனர் விரிவுரையாளர்கள். கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களினத்திற்கும் இடையே நிலவும் அன்புறவை (காதலுறவை) வருணிப்பவை இவை என்பர் சிலர்; பாலஸ்தீன நாட்டு மக்கள் நடுவில் திருமணத்தின்போது பாடப்பட்டவை என்பர் மற்றும் சிலர். ஆனால் ஆண்-பெண் இருவருக்கும் நடுவில் முகிழ்க்கும் இயல்பான காதலுணர்வை இருவரும் ஒருவர்க்கொருவர் வெளிப்படுத்தும் கவிதைகள் அல்லது கூற்றுகள் இவை என்பதே ஏற்புடையது.

இந்தத் தொகைநூலில் காணும் பாடல்களின் எண்ணிக்கைப்பற்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மொத்தம் இருபத்தெட்டுப் பாடல்களாகக் காண்பதே இங்குப் பின்பற்றியுள்ள கொள்கை.

காதலுணர்வு புனிதமானது; இயற்கையின் அன்பளிப்பு; கடவுளின் கொடை; இதனை விவிலியம் ஏற்கிறது. இந்நூலில் கடவுளின் பெயர் ஒருமுறைகூட வரவில்லை. எனினும், இறை ஏவுதல் பெற்ற திருமறை நூல்களில் இந்நூலும் இடம்பெறுதல் வியப்பன்று. ஆண்-பெண் காதலுணர்வும் காதலுறவும் கடவுளின் அன்புக்கு ஓர் உயர்ந்த அடையாளம் என்னும் அளவில் இப்பாடல்கள் கடவுள் - இஸ்ரயேல், கிறிஸ்து - திருச்சபை, கடவுள் - ஆன்மா ஆகியோர்க்கிடையில் நிலவும் அன்புணர்வையும் அன்புறவையும் குறிக்கப் பயன்படுதல் மிகவும் பொருத்தமே என்க.