ஆகூரின் மொழிகள்

1மாசாவைச் சார்ந்த யாக்கோபின் மகன் ஆகூரின் மொழிகள்; அவர் ஈத்தியேல் ஊக்கால் என்பவர்களுக்குக் கூறிய வாக்கு;*

2மாந்தருள் மதிகேடன் நான்; மனிதருக் குரிய அறிவாற்றல் எனக்கில்லை.

3ஞானத்தை நான் கற்றுணரவில்லை; கடவுளைப்பற்றிய அறிவு எனக்கில்லை.

4வானத்திற்கு ஏறிச்சென்று மீண்டவர் யார்? தம் கைப்பிடிக்குள் காற்றை ஒருங்கே கொணர்ந்தவர் யார்? கடல்களை மேலாடையில் அடக்கிவைத்தவர் யார்? மண்ணுலகின் எல்லை களைக் குறித்தவர் யார்? அவர் பெயரென்ன? அவருடைய மகன் பெயரென்ன? நீதான் எல்லா வற்றையும் அறிந்தவனாயிற்றே!

5கடவுளின் ஒவ்வொரு வாக்கும் பரிசோதிக் கப்பட்டு நம்பத்தக்கதாய் விளங்குகிறது; தம்மை அடைக்கலமாகக் கொண்டவர்களுக்கு அவர் கேடயமாயிருக்கிறார்.

6அவருடைய வார்த்தைகளோடு ஒன்றையும் கூட்டாதே; கூட்டினால் நீ பொய்யனாவாய்; அவர் உன்னைக் கடிந்துகொள்வார்.

7வரம் இரண்டு உம்மிடம் கேட்கிறேன், மறுக்காதீர்; நான் சாவதற்குள் அவற்றை எனக்கு அளித்தருளும்.

8வஞ்சனையும் பொய்யும் என்னை விட்டு அகலச்செய்யும்; எனக்குச் செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம்; எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும்.

9எனக்கு எல்லாம் இருந்தால், நான், “உம்மை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்து, “ஆண்டவரைக் கண்டது யார்?” என்று கேட்க நேரிடும். நான் வறுமையுற்றால், திருடனாகி, என் கடவுளின் திருப்பெயருக்கு இழிவு வருவிக்க நேரிடும்.

10வேலைக்காரரைப் பற்றி அவர் தலைவரிடம் போய்க் கோள் சொல்லாதே; சொன்னால், அவர் உன்மீது பழிசுமத்துவார்; நீயே குற்றவாளியாவாய்.

11தந்தையைச் சபிக்கிற, தாயை வாழ்த்தாத மக்களும் உண்டு.

12மாசு நிறைந்தவராயிருந்தும் தம்மைத் தூயோர் எனக் கருதும் மக்களும் உண்டு.

13கண்களில் இறுமாப்பு, பார்வையில் ஆணவம் — இத்தகைய மக்களும் உண்டு.

14பற்கள் கூரிய வாள், கீழ்வாய்ப் பற்கள் தீட்டிய கத்தி — இவற்றை உடைய மக்களும் உண்டு; அவர்கள் நாட்டிலுள்ள ஏழைகளை விழுங்கிவிடுவார்கள்; உலகிலுள்ள எளி யோரைத் தின்று விடுவார்கள்.

15அட்டைப்பூச்சிக்கு, “தா, தா” எனக் கத்தும் இரு புதல்வியர் உண்டு; ஆவல் தணியாத மூன்று உண்டு; “போதும்” என்று சொல்லாத நான்காவது ஒன்றும் உண்டு.

16அவை; பாதாளம், மலடியின் கருப்பை, நீரை அவாவும் வறண்ட நிலம், “போதும்” என்று சொல்லாத நெருப்பு ஆகியவையே.

17தகப்பனை ஏளனம் செய்யும் கண் களையும் வயது முதிர்ந்த தாயை இகழும் விழிகளையும் இடுகாட்டுக் காக்கைகள் பிடுங்கட்டும், கழுகுக் குஞ்சுகள் தின்னட்டும்.

18எனக்கு வியப்பைத் தருவன மூன்று உண்டு; என் அறிவுக்கு எட்டாத நான்காவது ஒன்றும் உண்டு.

19அவை: வானத்தில் கழுகு மிதத்தல், கற்பாறைமேல் பாம்பு ஏறுதல், நடுக்கடலில் கப்பல் மிதந்து செல்லுதல், ஆண்மகனுக்குப் பெண்மீதுள்ள நாட்டம் ஆகியவையே.

20விலைமகள் நடந்துகொள்ளும் முறை இதுவே: தவறு செய்தபின்* அவள் குளித்து விட்டு,* “நான் தவறு எதுவும் செய்யவில்லை” என்பாள்.

21உலகத்தை நிலைகுலைப்பவை மூன்று; அது பொறுக்க இயலாத நான்காவது ஒன்றும் உண்டு:

22அரசனாகிவிடும் அடிமை, உண்டு திரியும் கயவன்,

23யாரும் விரும்பாதிருந்தும் இறுதியில் மணம் முடிக்கும் பெண், உரிமை மனைவியின் இடத்தைப் பறித்துக் கொள்ளும் அடிமைப் பெண்.

24சிறியவையாயினும் ஞானமுள்ள சிற்று யிர்கள் நான்கு உலகில் உண்டு:

25எறும்புகள்: இவை வலிமையற்ற இனம்; எனினும், கோடைக்காலத்தில் உணவைச் சேமித்து வைத்துக் கொள்கின்றன.

26குறுமுயல்கள்: இவையும் வலிமையற்ற இனமே; எனினும், இவை கற்பாறைகளுக் கிடையே தம் வளைகளை அமைத்துக் கொள்கின்றன.

27வெட்டுக்கிளிகள்: இவற்றிற்கு அரசன் இல்லை; எனினும், இவை அணி அணியாகப் புறப்பட்டுச் செல்லும்.

28பல்லி: இதைக் கைக்குள் அடக்கி விடலாம்; எனினும், இது அரச மாளிகையிலும் காணப்படும்.

29பீடுநடை போடுபவை மூன்று உண்டு; ஏறுபோல நடக்கின்ற நான்காவது ஒன்றும் உண்டு;

30விலங்குகளுள் வலிமை வாய்ந்ததும் எதைக் கண்டும் பின்வாங்காததுமான சிங்கம்;

31பெருமிதத்துடன் நடக்கும் சேவல்; மந்தைக்குமுன் செல்லும் வெள்ளாட்டுக்கடா; படையோடு செல்லும் அரசன்.

32நீ வீண் பெருமைகொண்டு மூடத் தனமாக நடந்திருந்தாலும், தீமை செய்யத் திட்டம் வகுத்திருந்தாலும், உன் வாயை பொத்திக் கொண்டிரு.

33ஏனெனில், மோரைக் கடைந்தால் வெண்ணெய் திரண்டுவரும்; மூக்கை நெரித்தால் இரத்தம் வரும்; எரிச்சலூட்டினால் சண்டை வரும்.


30:1 * ‘ஈத்தியேல்’ என்பதை ‘கடவுளே, நான் சோர்ந்துபோனேன்’ எனவும், ‘ஊக்கால்’ என்பதை ‘நான் நொந்துபோனேன்’ எனவும் மொழிபெயர்க்கலாம்.. 30:20 *…* ‘அவள் சாப்பிட்டபின் வாயைத் துடைத்துவிட்டு’ எனவும் மொழிபெயர்க்கலாம்.