1வேனிற் காலத்தில் பனி இருக்குமா? அறுவடைக் காலத்திற்கு மழை பொருத்துமா? அவ்வாறே மதிகேடருக்குப் புகழ் ஒவ்வாது.

2சிட்டுக் குருவியும் அடைக்கலான் குருவியும் பறந்து திரிவது போல, காரணமின்றி இட்ட சாபமும் காற்றாய்ப் பறந்துபோகும்.

3குதிரைக்குச் சவுக்கடி, கழுதைக்குக் கடிவாளம்; முட்டாளின் முதுகுக்குப் பிரம்பு.

4மடையரின் கேள்விக்கு முட்டாள் தனமாகப் பதிலுரைக்காதே; உரைத்தால் நீயும் அவரை போல ஒரு மடையனே.

5மடையரின் கேள்விக்கு அவரது மடமையை உணர்த்தும் வகையில் பதிலுரை; இல்லாவிடில், அவர் தம்மை ஞானி என்று எண்ணிக் கொள்வார்;

6மூடரைத் தூதாக அனுப்புதல், தன் காலையே வெட்டிக் கேடு உண்டாக்கிக் கொள்வதற்குச் சமம்.

7ஊனக் கால்கள் தடுமாறி நடக்கும்; அவ்வாறே மூடர் வாயில் முதுமொழியும் வரும்.

8மூடருக்கு உயர் மதிப்புக்கொடுப்பவர் கவணில் கல்லை இறுகக் கட்டி வைத்தவருக்குச் சமம்.

9மூடன் வாயில் முதுமொழி, குடிகாரன் கையிலுள்ள முட்செடிக்குச் சமம்.

10மூடனையோ குடிகாரனையோ வேலைக்கு அமர்த்துபவர் வழிப்போக்கர் எவராயிருப்பினும் அவர் மீது அம்பு எய்கிறவரை ஒத்திருக்கிறார்.

11நாய் தான் கக்கினதைத் தின்னத் திரும்பிவரும்; அதுபோல மூடர் தாம் செய்த மடச் செயலையே மீண்டும் செய்வார்.

12தம்மை ஞானமுள்ளவரென்று சொல்லிக் கொள்ளும் யாரையாவது நீ பார்த்திருக்கிறாயா? மூடராவது ஒருவேளை திருந்துவார்; ஆனால் இவர் திருந்தவேமாட்டார்.

13“வீதியில் சிங்கம் இருக்கிறது; வெளியே சிங்கம் அலைகிறது” என்று சொல்லிக் கொண்டிருப்பவர் சோம்பேறி.

14கீல்பட்டையில் கதவு ஆடிக்கொண் டிருப்பதுபோல, சோம்பேறி தம் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பார்.

15சோம்பேறி உண்கலத்தில் கையை இடுவார்; ஆனால் அதை வாய்க்குக் கொண்டு போகச் சோம்பலடைவார்.

16விவேகமான விடையளிக்கும் ஏழு அறிவாளிகளைவிட, தாம் மிகுந்த ஞான முள்ளவர் என்று நினைக்கிறார் சோம்பேறி.

17பிறருடைய சச்சரவுகளில் தலையிடு கிறவர், தெருவில் செல்லும் வெறிநாயின் வாலைப் பிடித்து இழுப்பவருக்கு ஒப்பாவார்.

18கொல்லும் தீக்கொள்ளியையும் அம்பையும் எறியும் பைத்தியக்காரனுக்கு ஒப்பானவர் யாரெனில்,

19பிறனை வஞ்சித்துவிட்டு “நான் விளையாட்டுக்குச் செய்தேன்” என்று சொல் பவரே.

20விறகு இல்லாவிடில் நெருப்பு அணையும்; புறங்கூறுபவர் இல்லாவிடில் சண்டை அடங்கும்.

21கரியால் தழல் உண்டாகும், விறகால் நெருப்பு எரியும்; சண்டை பிடிக்கிறவரால் கலகம் மூளும்.

22புறணி கேட்பது பலருக்கு அறுசுவை உண்டி உண்பது போலாம். அதை அவர்கள் பேராவலோடு விழுங்குவார்கள்.

23தீய நெஞ்சத்தை மறைக்க நயமாகப் பேசுவது, மட்பாண்டத்திற்கு மெருகூட்டிப் பளபளக்கச் செய்வது போலாகும்.

24பகையுணர்ச்சி உள்ளவர் நாவினால் கபடத்தை நயம்படப் பேசுவார்; உள்ளத்திலோ கபடம் மறைந்திருக்கும்.

25அவர் நயமாகப் பேசினாலும் அவரை நம்பாதே; அவர் உள்ளத்தில் அருவருக்கத் தக்கவை ஏழு இருக்கும்.

26அவர் தம் பகையை வஞ்சகமாக மறைத்து வைத்திருப்பினும், அவரது தீயகுணம் மக்களிடையே அம்பலமாகிவிடும்.

27தான் வெட்டின குழியில் தானே விழுவார்; தான் புரட்டின கல் தன் மேலேயே விழும்.

28பொய் பேசும் நா உண்மையை வெறுக்கும்; இச்சகம் பேசும் வாய் அழிவை உண்டாக்கும்.