1திரண்ட செல்வத்தைவிட நற் பெயரைத் தெரிந்துகொள்வது மேல்; வெள்ளியையும் பொன்னையும்விடப் புகழைப் பெறுவதே மேல்.

2செல்வருக்கும் வறியவருக்கும் பொதுவான ஒன்று உண்டு; ஏனெனில், அனைவரையும் உண்டாக்கியவர் ஆண்டவரே.

3எதிரில் வரும் இடரைக் கண்டதும் விவேக முள்ளவர் மறைந்து கொள்வார்; அறிவற்றோர் அதன் எதிரே சென்று கேட்டுக்கு ஆளாவர்.

4தாழ்மையுள்ளவர்களுக்கும் ஆண்டவரிடம் அச்சம் உடையவர்களுக்கும் கிடைக்கும் பயன் செல்வமும் மேன்மையும் நீடித்த ஆயுளுமாகும்.

5நேர்மையற்றவர் வழியில் முள்ளும் கண்ணியும் இருக்கும்; விழிப்புடன் இருப்பவர் அவற்றினருகில் செல்லமாட்டார்.

6நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு; முதுமையிலும் அவர் அந்தப் பழக்கத்தை விட்டு விடமாட்டார்.

7செல்வர் ஏழையை அடக்கி ஆளுவார்; கடன்பட்டவர் கடன் கொடுத்தவருக்கு அடிமை.

8அநீதியை விதைப்பவன் கேட்டை அறுப்பான்; அவனது சீற்றம் அவனையே எரித்துவிடும்.

9கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்; அவரே ஆசி பெற்றவர்.

10ஏளனம் செய்வோனை வெளியே துரத்து, சண்டை நின்றுவிடும்; சச்சரவும் பழிச்சொல்லும் ஒழியும்.

11ஆண்டவர் தூய உள்ளத்தினரை விரும்புகிறார்; இன்சொல் கூறுவோர் அரசனது நட்பைப் பெறலாம்.

12அறிவுடையோரைக் காப்பதில் ஆண்டவர் கண்ணாயிருக்கிறார்; கயவனின் வழக்கைத் தள்ளுபடி செய்கிறார்.

13“வெளியே சிங்கம் நிற்கிறது; வீதியில் கால் வைத்தால் கொல்லப்படுவேன்” என்கிறான் சோம்பேறி.

14பரத்தையின் வாய் ஓர் ஆழமான படுகுழி; ஆண்டவரின் சினத்திற்காளானவர் அதில் போய் விழுவார்.

15பிள்ளையின் இதயத்தில் மடமை ஒட்டிக்கொண்டிருக்கும்; கண்டித்துத் திருத்தும் பிரம்பால் அதை அகற்றி விடலாம்.

16செல்வராகும் பொருட்டு ஏழைகளை ஒடுக்குகிறவனும், செல்வருக்குப் பொருள் கொடுக்கிறவரும் ஏழையாவார்கள்.

முப்பது முதுமொழிகள்

17ஞானிகள் போதித்ததை நான் உனக்குக்கூறுகின்றேன், செவி கொடுத்துக் கேள்; நான் புகட்டும் அறிவை மனத்தில் ஏற்றுக்கொள்.
18அவற்றை நீ உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது எடுத்துரைக்கக்கூடுமானால் உனக்கு மகிழ்ச்சியுண்டாகும்.
19நீ ஆண்டவரை நம்ப வேண்டுமென்று அவற்றை நான் உனக்கு இன்று தெரியப்படுத்துகிறேன்.
20அறிவும் நல்லுரையும் தரக்கூடிய முப்பது முதுமொழிகளை நான் உனக்கென்றே எழுதி வைத்திருக்கிறேன் அல்லவா?
21அவற்றைக் கொண்டு மெய்ம்மையை உன்னால் விளக்கக் கூடும்.

1

22ஒருவர் ஏழையாய் இருக்கிறார் என்று அவரை வஞ்சிக்காதே; ஒருவர் ஆதரவின்றி இருக்கிறார் என்று அவரை நீதிமன்றத்தில் சிறுமைப்படுத்தாதே.
23ஏனெனில், ஆண்டவர் அவர்களுக்காக வாதாடுவார்; அவர்களது உயிரை வாங்கப் பார்க்கிறவர்களின் உயிரை அவர் பறித்துக்கொள்வார்.

2

24கடுஞ்சினங்கொள்பவனோடு நட்புக்கொள்ளாதே; எரிச்சல்கொள்பவனோடு தோழமை கொள்ளாதே.
25அப்படிச் செய்தால் அவர்களின் போக்கை நீயும் கற்றுக்கொள்வாய்; உன் உயிர் கண்ணியில் சிக்கிக் கொள்ளும்.

3

26பிறருக்காக ஒருபோதும் பிணையாய் நில்லாதே; பிறர் கடனுக்காக ஒருநாளும் பிணையாய் நிற்காதே.
27அந்த கடனை திருப்பிக்கொடுக்க உனக்கு ஒரு வழியும் இல்லாதிருந்தால், நீ படுத்திருக்கையில் உன் படுக்கையும் பறிபோய்விடுமன்றோ?

4

28வழிவழிச் சொத்துக்கு உன் மூதாதையர் குறித்து வைத்த எல்லையை நீ மாற்றி அமைக்காதே.

5

29தம் அலுவலில் திறமை காட்டுகின்ற ஒருவரைப் பார்; அவர் பாமர மனிதரிடையே இரார்; அரசு அவையில் இருப்பார்.