1திராட்சை இரசம் ஒழுங்கீனத்தைத் தோற்றுவிக்கும்; போதை தரும் குடி அமளியைத் தோற்றுவிக்கும்; அவற்றில் நாட்டங்கொள்பவர் மடையரே.
2அரசரின் சினம் சிங்கத்தின் முழக்கத்திற்கு நிகர்; அரசருக்குச் சினமூட்டுகிறவர் தம் உயிரை இழப்பார்.
3விவாதத்தில் ஈடுபடாதிருத்தல் மனிதருக்கு அழகு; ஏனெனில் மூடராயிருக்கும் எவரும் விவாதத்தை விரும்புகின்றனர்.
4சோம்பேறி பருவத்தில் உழுது பயிர் செய்யமாட்டார்; அவர் அறுவடைக் காலத்தில் விளைவை எதிர்பார்த்து ஏமாறுவார்.
5மனிதர் மனத்தில் மறைந்திருக்கும் எண்ணம் ஆழமான நீர்நிலை போன்றது; மெய்யறிவுள்ளவரே அதை வெளிவரச் செய்வார்.
6பலர் தம்மை வாக்குப் பிறழாதவரெனக் கூறிக்கொள்வர்; ஆனால், நம்பிக்கைக்குரியவரைக் கண்டுபிடிக்க யாரால் இயலும்?
7எவர் களங்கமற்ற நேர்மையான வாழ்க்கை நடத்துகிறாரோ, அவருடைய பிள்ளைகள் அவரின் காலத்திற்குப்பின் நற்பேறு பெறுவார்கள்.
8மன்னன் நீதிவழங்கும் இருக்கையில் வீற்றிருக்கும்போது, தன் பார்வையாலேயே தீமையான யாவற்றையும் சலித்துப் பிரித்துவிடுவான்.
9“என் இதயத்தைத் தூயதாக்கி விட்டேன்; நான் பாவம் நீக்கப்பெற்றுத் தூய்மையாயிருப்பவன்” என்று யாரால் சொல்லக்கூடும்?
10பொய்யான எடைக் கற்களையும் பொய்யான அளவைகளையும் பயன் படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கின்றார்.
11சிறுவரையும் அவருடைய செயல்களைக் கொண்டே அறியலாம்; அவர் உண்மையும் நேர்மையானவரா என்று சொல்லிவிடலாம்.
12கேட்கும் காது, காணும் கண்; இவ்விரண்டையும் ஆண்டவரே படைத்தார்.
13தூங்கிக்கொண்டேயிருப்பதை நாடாதே; நாடினால் ஏழையாவாய். கண் விழித்திரு; உனக்கு வயிறார உணவு கிடைக்கும்.
14ஒரு பொருளை வாங்கும் போது, தரம் குறைவு, விலை மிகுதி என்று ஒருவர் சொல்வார்; வாங்கிச் சென்றபின், தாம் திறம்படச் செய்ததாக நினைத்துத் தம்மையே மெச்சிக் கொள்வார்.
15பொன்னையும் முத்துகளையும் விட, அறிவுள்ள பேச்சே விலையுயர்ந்த அணிகலன்.
16அன்னியருடைய கடனுக்காகப் பிணை நிற்கிறவருடைய ஆடையை எடுத்துக்கொள்; அதை அந்தக் கடனுக்காகப் பிணையப் பொருளாக வைத்திரு.
17வஞ்சித்துப் பெறும் உணவு சுவையாயிருக்கும்; ஆனால் பின்னர் அது வாய் நிறைய மணல் கொட்டியது போலாகும்.
18நல்ல அறிவுரை கேட்டுத் திட்டமிட்டால் வெற்றி பெறுவாய்; சூழ்ச்சி முறையை வகுக்குமுன் போரைத் தொடங்காதே.
19வம்பளப்போன் மறைசெய்திகளை வெளிப்படுத்திவிடுவான்; வாயாடியோடு உறவாடாதே.
20தாயையும் தந்தையையும் சபிக்கிறவனின் விளக்கு, காரிருள் வேளையில் அணைந்துபோகும்.
21தொடக்கத்திலே விரைவில் கிடைத்த உரிமைச் சொத்து, இறுதியிலே ஆசி பெற்றதாய் இராது.
22“தீமைக்குத் தீமை செய்வேன்” என்று சொல்லாதே; ஆண்டவரையே நம்பியிரு; அவர் உன்னைக் காப்பார்.
23பொய்யான எடைக் கற்களைப் பயன்படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கிறார்; போலித் துலாக்கோலைப் பயன்படுத்துவது முறையற்றது.
24மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை ஆண்டவர் அமைக்கின்றார்; அப்படியிருக்க, தன் வழியை மனிதனால் எப்படி அறிய இயலும்?
25எண்ணாமல் ஒன்றைக் கடவுளுக்குப் படையல் என நேர்ந்து விட்டு, அப்பொருத்தனையைப்பற்றிப் பிறகு எண்ணுவது கண்ணியில் கால் வைப்பதாகும்.
26ஞானமுள்ள அரசன் பொல்லாரைப் பிரித்தெடுப்பான்; அவர்கள் மீது சக்கரத்தை ஏற்றி நசுக்குவான்.
27ஆண்டவர் மனிதருக்குத் தந்துள்ள ஆவி ஒரு விளக்கு; அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் ஆய்ந்தறியும்.
28அன்பும் உண்மையும் மன்னவனை ஆட்சியில் நீடித்திருக்கச் செய்யும்; அன்பாகிய அடிப்படையிலேதான் அவனது அரியணை நிலைத்து நிற்கும்.
29இளைஞருக்கு உயர்வளிப்பது அவர்களது வலிமை; முதியோருக்குப் பெருமை தருவது அவர்களது நரைமுடி.
30நையப் புடைத்தலே மனத்தின் மாசகற்றும்; கசையடி கொடுத்தலே உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும்.