1ஆண்டவர் மோசேயை நோக்கி, “நான் பார்வோனுக்குச் செய்யப்போவதை நீ இப்போது காண்பாய்; என் கைவன்மை கண்டு அவன் அவர்களைப் போக விடுவான்; தன் நாட்டிலிருந்து துரத்தியும் விடுவான்” என்றார்.
மோசேயின் அழைப்பு
2கடவுள் மோசேயிடம் பின்வருமாறு கூறினார்:
3“நானே ஆண்டவர். ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ‘ஆண்டவர்’ என்ற என் பெயரால் என்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லையெனினும், எல்லாம் வல்ல கடவுளாகக் காட்சியளித்தவர் நானே!
4மேலும், அவர்கள் அந்நியராக அலைந்தபோது தங்கியிருந்த கானான் நாட்டை அவர்களுக்குக் கொடுப்பதாக அவர்களுடன் உடன்படிக்கை நிலைநாட்டியதும் நானே!
5மேலும், எகிப்தியர் அடிமைப்படுத்தி வைத்துள்ள இஸ்ரயேல் மக்களின் புலம்பலைக் கேட்டு என் உடன்படிக்கையை நினைவுகூர்ந்துள்ளேன்.
6நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்ல வேண்டியது; நானே ஆண்டவர். எகிப்தியரின் பாரச் சுமைகளை நான் உங்களிடமிருந்து அகற்றுவேன். அவர்கள் உங்களை அடிமைப்படுத்துவதிலிருந்து விடுவிப்பேன். ஓங்கிய கையாலும் மாபெரும் தண்டனைத் தீர்ப்புகளாலும் நான் உங்களுக்கு மீட்பளிப்பேன்.
7உங்களை நான் என் மக்களாகத் தேர்ந்தெடுப்பேன். உங்களுக்குக் கடவுளாக நான் இருப்பேன். எகிப்தியர் சுமத்திய பாரச் சுமைகளை அகற்றி உங்களை விடுவித்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
8ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் நான் கொடுப்பதாக வாக்களித்த அந்த நாட்டிற்கு நான் உங்களைக் கூட்டிக்கொண்டு செல்வேன். அதை உங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுப்பேன். நானே ஆண்டவர்!”
9இவற்றையெல்லாம் மோசே இஸ்ரயேல் மக்களிடம் எடுத்துச் சொல்லியும், மன ஏக்கத்தையும் வேலையின் கொடுமையையும் முன்னிட்டு அவர்கள் மோசேக்குச் செவிகொடுக்கவில்லை.
10ஆண்டவர் மோசேயை நோக்கி,
11“எகிப்திய மன்னனாகிய பார்வோன் தன் நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அனுப்பிவிடும்படி நீ அவனிடம் போய்ச் சொல்” என்றுரைத்தார்.
12மோசே ஆண்டவரிடம் பேசி, “இஸ்ரயேல் மக்களே எனக்குச் செவிசாய்க்காதிருக்க, பார்வோன் எவ்வாறு எனக்குச் செவிசாய்க்கப் போகிறான்? நானோ பண்பட்ட உதடுகள் இல்லாதவன்” என்று சொன்னார்.
13ஆண்டவர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களைக் கொண்டுவருவதற்காக இஸ்ரயேல் மக்களிடமும் எகிப்திய மன்னன் பார்வோனிடமும் செல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
மோசே, ஆரோனின் மூதாதையர் அட்டவணை
14அவர்களின் மூதாதையர் வழிவந்த குடும்பத் தலைவர்கள் இவர்களே; இஸ்ரயேலின் தலைமகனான ரூபனின் புதல்வர்; அனோக்கு, பல்லூ, எட்சரோன், கர்மி. இவைகளே ரூபன் வழிவந்த குடும்பங்கள்.
15சிமியோனின் புதல்வர்; எமுவேல், யாமின், ஓகாது, யாக்கின், சோவார், கானானியப் பெண்ணின் மகன் சாவூல். இவைகளே சிமியோன் வழிவந்த குடும்பங்கள்.
16தம் தலைமுறைகளின் வரிசைப்படி லேவியின் புதல்வரின் பெயர்கள்; கேர்சோன், கோகாத்து, மெராரி. லேவி வாழ்ந்தது நூற்று முப்பத்தேழு ஆண்டுகள்.
17கேர்சோனின் புதல்வர்: லிப்னி, சிமெயி. இவர்கள் தம்தம் குடும்பங்களுக்குத் தலைவர்கள்.
18கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல். கோகாத்து வாழ்ந்தது நூற்று முப்பத்துமூன்று ஆண்டுகள்.
19மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி. இவைகளே தலைமுறை வரிசைப்படி லேவியின் குடும்பங்கள்.
20அம்ராம் தன் தந்தையின் சகோதரியாகிய யோக்கபேது என்பவளைத் தனக்கு மனைவியாக்கிக் கொண்டான். அவனுக்கு அவள் ஆரோன், மோசே என்பவர்களைப் பெற்றெடுத்தாள். அம்ராம் வாழ்ந்தது நூற்றுமுப்பத்தேழு ஆண்டுகள்.
21இட்சகாரின் புதல்வர்: கோராகு, நெபேகு, சிக்ரி.
22உசியேலின் புதல்வர்; மீசாவேல், எல்சாபான், சித்ரி.
23அம்மினதாபின் மகளும் நகசோனின் சகோதரியுமான எலிசபாவை ஆரோன் மனைவியாக்கிக்கொண்டார். அவருக்கு அவள் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர் என்பவர்களைப் பெற்றெடுத்தாள்.
24கோராகின் புதல்வர்: அசீர், எல்கானா, அபியசாபு. இவைகளே கோராகின் குடும்பங்கள்.
25ஆரோனின் மகன் எலயாசர், பூற்றியேல் என்பவனின் புதல்வியருள் ஒருத்தியைத் தனக்கு மனைவியாகக் கொண்டான். அவனுக்கு அவள் பினகாசு என்பவனைப் பெற்றெடுத்தாள். தம் குடும்ப வரிசைக்கேற்ப லேவியரின் மூதாதையருள் தலைவர்கள் இவர்களே.
26“தம்தம் அணிவகுப்பின்படி இஸ்ரயேல் மக்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியேறச் செய்யுங்கள்” என்று ஆண்டவரிடம் கட்டளை பெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே.
27இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து வெளியேறச் செய்வதற்காக எகிப்திய மன்னனாகிய பார்வோனுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்களும் மோசே, ஆரோன் ஆகிய இவர்களே!
மோசே, ஆரோனுக்கு ஆண்டவரின் கட்டளை
28அக்காலத்தில் எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேயுடன் பேசியருளினார்.
29ஆண்டவர் மோசேயுடன் பேசி, “நானே ஆண்டவர். நான் உன்னோடு பேசுவதையெல்லாம் எகிப்திய மன்னன் பார்வோனிடம் நீ எடுத்துக் கூறு” என்று அறிவித்தபோது,
30மோசே ஆண்டவரிடம், “பாரும், நான் பண்பட்ட உதடுகள் இல்லாதவன். பார்வோன் எவ்வாறு எனக்குச் செவி கொடுக்கப்போகிறான்?” என்றார்.
6:2-3 தொநூ 17:1; 28:3; 35:11; விப 3:13-15. 6:16-19 எண் 3:17-20; 26:57-58; 1 குறி 6:16-19.