கூடாரத்தை எழுப்புதலும் அர்ப்பணமும்

1ஆண்டவர் மோசேயிடம் பின்வருமாறு கூறினார்:
2“முதல் மாதத்தில், முதல் நாள், சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிடத்தை நீ எழுப்புவாய்.
3அங்கே உடன்படிக்கைப்பேழையை வைத்து அதனைத் திருத்தூயகத் திரையால் மறைத்துவிடு.
4பின்னர், மேசையைக் கொண்டுவந்து, உரியவாறு ஒழுங்குபடுத்து. மேலும், விளக்குத் தண்டினைக் கொண்டுவந்து அதன் அகல்களை ஏற்று.
5உடன்படிக்கைப் பேழைக்கு முன்பக்கம் பொன்தூப பீடத்தை வை. திருஉறைவிட நுழைவாயிலில் திரையைத் தொங்கவிடு.
6சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிட நுழைவாயிலுக்கு முன்புறம் எரிபலி பீடத்தை வை.
7சந்திப்புக் கூடாரத்திற்கும் பலி பீடத்திற்கும் இடையில் தண்ணீர்த் தொட்டியை வைத்து, அதில் தண்ணீர் ஊற்றிவை.
8சுற்றிலும் முற்றம் அமைத்து, முற்றத்தின் நுழைவாயிலில் திரையைத் தொங்கவிடு.
9திருப்பொழிவு எண்ணெயை எடுத்துத் திருஉறைவிடத்திற்கும் அதிலுள்ள அனைத்திற்கும் திருப்பொழிவு செய். அதனை அதன் அனைத்துத் துணைக்கலன்களோடுஅர்ப்பணிப்பாய். இவ்வாறு அது புனிதம் பெறும்.
10எரிபலி பீடத்திற்கும் அதன் அனைத்துத் துணைக்கலன்களுக்கும் திருப்பொழிவு செய்து, அப்பீடத்தை அர்ப்பணிப்பாய். இவ்வாறு, பலிபீடம் மிகப் புனிதமானதாக விளங்கும்.
11தண்ணீர்த் தொட்டிக்கும், அதன் ஆதாரத்திற்கும் திருப்பொழிவு செய்து, அர்ப்பணிப்பாய்.
12சந்திப்புக் கூடார நுழைவாயிலின் அருகில் ஆரோனையும் அவன் புதல்வரையும் வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவு.
13ஆரோன் எனக்கு குருத்துவப் பணியாற்றும்படி அவனுக்குத் திருவுடைகள் அணிவித்து, அவனுக்கு அருள்பொழிவு செய்து, அவனைத் திருநிலைப்படுத்து.
14அவன் புதல்வரையும் அருகில் வரச்செய்து, அவர்களுக்கும் உடைகள் உடுத்துவிப்பாய்.
15அவர்களின் தந்தைக்கு அருள்பொழிவு செய்தது போலவே, எனக்குக் குருத்துவப் பணியாற்றும்படி அவர்களுக்கும் அருள்பொழிவு செய். அவர்களின் அருள்பொழிவு தலைமுறைதோறும் நிலைநிற்கும் குருத்துவமாக விளங்கும்.”
16மோசே அவ்வாறே செய்தார். ஆண்டவர் கட்டளையிட்டபடியெல்லாம் அவர் செயல்பட்டார்.
17இரண்டாம் ஆண்டில், முதல் மாதம், முதல் தேதியன்று திருஉறைவிடம் எழுப்பப்பட்டது.
18மோசே திருஉறைவிடத்தை எழுப்பினார்; பாதப்பொருத்துகளை வைத்து அதன்மேல் சட்டங்களைப் பொருத்தினார். குறுக்குச் சட்டங்களையும் பொருத்தினார்; தூண்களையும் நிறுத்தினார்.
19திரு உறைவிடத்தின்மேல் அவர் கூடாரத்தை விரித்தார்; அதற்குமேல் கூடார மேல்விரிப்பை அமைத்தார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
20உடன்படிக்கைப் பலகையை அவர் எடுத்து, அதைப் பேழையில் வைத்தார். தண்டுகளைப் பேழையில் செருகினார். இரக்கத்தின் இருக்கையைப் பேழையின்மேல் வைத்தார்.
21திருஉறைவிடத்தினுள் பேழை எடுத்துச் செல்லப்பட்டது. திருத்தூயகத்திரை தொங்கவிடப்பட்டு, உடன்படிக்கைப் பேழை மறைக்கப்பட்டது. இதையும் ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார்.
22சந்திப்புக் கூடாரத்தில் திருஉறைவிடத்தின் வடபுறம், திருத்தூயகத் திரைக்கு வெளியே அவர் மேசையை வைத்தார்.
23அதன் மேல் ஆண்டவர்முன் திருமுன்னிலை அப்பத்தை அவர் முறைப்படி வைத்தார்; இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
24சந்திப்புக் கூடாரத்தில் திருஉறைவிடத்தின் தென்புறம், மேசைக்கு எதிரே, விளக்குத் தண்டை நிறுத்தினார்.
25ஆண்டவர் திருமுன் அகல்களை ஏற்றினார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
26சந்திப்புக் கூடாரத்தில் திருத்தூயகத் திரைக்கும் முன்னே பொன்பீடத்தை வைத்தார்.
27அதில் நறுமணத் தூபம் எரித்தார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
28திருஉறைவிடத்தின் நுழைவாயிலில் திரை தொங்கவிடப்பட்டது.
29அவர் சந்திப்புக் கூடாரத்தின் திரு உறைவிட நுழைவாயிலின் முன் எரிபலிபீடத்தை வைத்தார். அதன்மேல் அவர் எரிபலியும் உணவுப் படையலும் செலுத்தினார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டப்படியே செய்யப்பட்டது.
30சந்திப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் தண்ணீர்த் தொட்டி அமைக்கப்பட்டது. கழுவுவதற்காகத் தண்ணீர் அதில் ஊற்றி வைக்கப்பட்டது.
31இது மோசேயும், ஆரோனும், அவர் புதல்வரும் கைகளையும் கால்களையும் கழுவிக் கொள்வதற்கே.
32சந்திப்புக் கூடாரத்தில் நுழையும்போதும், பலிபீடத்தை அணுகும்போதும் அவர்கள் கழுவிக் கொள்வர். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
33திருஉறைவிடம், பலிபீடம் இவற்றைச் சுற்றி எங்கும் அவர் முற்றம் அமைத்தார். முற்றத்தின் நுழைவாயிலில் திரையைத் தொங்கவிட்டார். இவ்வாறு, மோசே தம் பணியை முடித்துக்கொண்டார்.

கூடாரத்தின்மேல் ஆண்டவரின் மாட்சி
(எண் 9:15-23)

34பின்பு, மேகம் சந்திப்புக்கூடாரத்தை மூடிற்று; ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று.
35சந்திப்புக்கூடாரத்தின் மேலே மேகம் நின்றிருந்ததாலும், ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பியதாலும் மோசே உள்ளே நுழைய முடியாமல் போயிற்று.
36இஸ்ரயேல் மக்கள் தங்கள் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், மேகம் திரு உறைவிடத்தைவிட்டு எழும்பும் போதெல்லாம் புறப்பட்டுச் செல்வார்கள்.
37மேகம் எழும்பாதிருக்கும் போதோ, அது மேலே எழும்பும் நாள்வரை, அவர்கள் புறப்பட மாட்டார்கள்.
38ஏனெனில், பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் திருஉறைவிடத்தின்மேல் பகலில் ஆண்டவரின் மேகம் இருப்பதையும், இரவிலோ அதில் நெருப்பு இருப்பதையும் இஸ்ரயேல் வீட்டார் காண்பார்கள்.

40:34 1 அர 8:10-11; எசா 6:4; எசே 43:4-5; திவெ 15:8.