நீதியும் இரக்கமும்

1பொய், புரளியை நீ கிளப்ப வேண்டாம். அநியாயமாய்ப் பொய்ச்சாட்சியாகி, நீ தீயவருக்குக் கைகொடுக்க வேண்டாம்.
2கெடுமதி கொண்ட கும்பலைப் பின்பற்றாதே. வழக்கின்போது கும்பலைச் சார்ந்து கொண்டு நீதியைத் திரித்துச் சான்று சொல்ல வேண்டாம்!
3எளியவரது வழக்கிலும், அவருக்கெதிராக ஒரு தலைச்சார்பாக நிற்காதே.
4உன் பகைவரின் வழிதவறித் திரியும் மாடோ கழுதையோ உனக்கு எதிர்ப்பட்டால் நீ அதனை உரியவரிடம் கொண்டு சேர்த்துவிடு.
5உன்னை வெறுக்கும் ஒருவரின் கழுதை சுமையினால் படுத்துவிட்டதை நீ கண்டால், அந்நிலையில் அவரை விட்டகலாதே! அதைத் தூக்கிவிட அவருக்கு உதவிசெய்.
6உன்னைச் சார்ந்துள்ள எளியவரின் வழக்கில் நீதியைத் திரித்து விடாதே.
7தவறான குற்றச்சாட்டுகளிலிருந்து விலகியிரு. குற்றமற்றவரையும், நேர்மையாளரையும் கொலை செய்ய வேண்டாம். ஏனெனில், தீயவரை நல்லவராக நான் தீர்ப்பிடவே மாட்டேன்.
8கையூட்டு வாங்காதே. கையூட்டு, பார்வையுடையவரையும் குருடராக்கும். நேர்மையாளரின் வழக்கையும் புரட்டிவிடும்.
9அந்நியரை நீ ஒடுக்காதே. அந்நியரது உணர்வுகளை நீங்கள் அறிவீர்கள். ஏனெனில், எகிப்து நாட்டில் நீங்களும் அந்நியராக இருந்தீர்கள்.

ஓய்வு ஆண்டும் ஓய்வு நாளும்

10ஆறு ஆண்டுகள் உன் நிலத்தில் நீ விதைத்து அதன் விளைச்சலை சேமித்து வைப்பாய்.
11ஏழாம் ஆண்டு அதை, ஓய்வு கொள்ளவும் தரிசாகக் கிடக்கவும் விட்டுவிடுவாய். உன் மக்களில் வறியவர்கள் தானாக விளைவதை உண்ணட்டும். அவர்கள் விட்டுவைப்பதை வயல்வெளி உயிரினங்கள் உண்ணும். உன் திராட்சைத் தோட்டத்திற்கும், உன் ஒலிவ தோட்டத்திற்கும் இவ்வாறே செய்வாய்.
12ஆறு நாள்கள் நீ உன் வேலையைச் செய்வாய்; ஏழாம் நாளிலோ ஓய்ந்திருப்பாய். இதனால் உன் மாட்டுக்கும் உன் கழுதைக்கும் ஓய்வுகிடைக்கும்; உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியரும் இளைப்பாறுவர்.
13நான் உங்களுக்கு சொன்ன யாவற்றையும் கடைப்பிடியுங்கள். பிற தெய்வங்களின் பெயரை நீங்கள் உச்சரிக்க வேண்டாம். அது உங்கள் வாயில் ஒலிக்கவும் வேண்டாம்.

முப்பெரும் விழாக்கள்
(விப 34:18-26; இச 16:1-17)

14ஆண்டில் மூன்று முறை நீ எனக்கு விழா எடுப்பாய்.
15புளிப்பற்ற அப்ப விழாவை நீ கொண்டாட வேண்டும். நான் உனக்கு கட்டளையிட்டபடி ஆபிபு மாதத்தில் குறிக்கபட்ட காலத்தில் ஏழு நாள்கள் புளிப்பற்ற அப்பம் உண்பாய். ஏனெனில், அப்போது நீ எகிப்திலிருந்து வெளியேறினாய். எவரும் வெறுங்கையராக என் திருமுன் வரவேண்டாம்.
16வயலில் நீ விதைத்து, உன் உழைப்பின் முதற்பலன் கிட்டும்போது, ‘அறுவடைவிழா’வும், ஆண்டுத் தொடக்கத்தில் வயலிலிருந்து உனது உழைப்பின் பயனை ஒன்று சேர்க்கையில் ‘சேகரிப்பு விழா’வும் எடுக்க வேண்டும்.
17ஆண்டில் மூன்றுமுறை உன் ஆண்மகவு ஒவ்வொன்றும் தலைவராகிய ஆண்டவர் திருமுன் வரவேண்டும்.
18எனக்குச் செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளித்த மாவுடன் படைக்காதே. என் விழாவிலுள்ள கொழுப்பு காலைவரைக்கும் இருக்கக்கூடாது.
19உன் நிலத்தின் முதற்கனிகளில் முதன்மையானவற்றை உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்துக்குக் கொண்டு செல்வாய். குட்டியை அதன் தாய்ப்பாலில் சமைக்காதே.

வாக்குறுதிகள், அறிவுரைகள்

20வழியில் உன்னைப் பாதுகாக்கவும், நான் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் உன்னைக் கொண்டு சேர்க்கவும், இதோ நான் உனக்கு முன் ஒரு தூதரை அனுப்புகிறேன்.
21அவர்முன் எச்சரிக்கையாயிரு; அவர் சொற்கேட்டு நட; அவரை எதிர்ப்பவனாய் இராதே. உன் குற்றங்களை அவர் பொறுத்துக்கொள்ளார். ஏனெனில், என் பெயர் அவரில் உள்ளது.
22நீ அவர் சொல் கேட்டு நடந்தால், நான் சொல்வது யாவற்றையும் கேட்டுச் செயல்பட்டால், நான் உன் எதிரிகளுக்கு எதிரியும், உன் பகைவர்க்குப் பகைவனும் ஆவேன்.
23ஏனெனில், என் தூதர் உனக்குமுன் சென்று உன்னை எமோரியர், இத்தியர், பெரிசியர், கானானியர், இவ்வியர், எபூசியர் இவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும்போது நான் அவர்களை அழித்தொழிப்பேன்.
24நீ அவர்கள் தெய்வங்களைப் பணிந்து கொள்ளவோ, அவைகளுக்கு வழிபாடு செய்யவோ, அவைகளுக்குரிய பழக்கவழக்கங்களைப் பின்பற்றவோ வேண்டாம். மாறாக, அவற்றை அழித்தொழித்து அவற்றின் சிலைத்தூண்களை உடைத்துத் தள்ளுவாய்.
25நீ உன் கடவுளாகிய ஆண்டவரை வழிபடவேண்டும். அவர் உன் உணவு தண்ணீர் இவற்றின் மேல் ஆசி வழங்குவார். அவர் உன் நடுவினின்று நோயை அகற்றிவிடுவார்.
26குறைகாலப் பிள்ளைப்பேறும் மலடும் உன் நாட்டில் இரா. உன் வாழ்நாள்களின் எண்ணிக்கையை நான் நிறைவு செய்வேன்.
27‘என் பேரச்சத்தை’ உனக்கு முன்னர் அனுப்பி, உன்னை எதிர்ப்படும் எல்லா மக்களையும் நான் கதிகலங்கச் செய்வேன். உன் பகைவர் அனைவரும் உனக்குப் புறம்காட்டச் செய்வேன்.
28உனக்கு முன் நான் குளவிகளை அனுப்பி வைப்பேன். அவை இவ்வியரையும் கானானியரையும் இத்தியரையும் உனக்கு முன்னின்று துரத்திவிடும்.
29ஆயினும், ஒரே ஆண்டில், உனக்கு முன்னின்று நான் அவர்களைத் துரத்திவிட மாட்டேன். துரத்தினால், நிலம் தரிசாகிவிடும். உன்னிலும் மிகுதியாக வயல்வெளி விலங்குகள் பலுகிப் பெருகிவிடும்.
30எனவே, நீ பலுகிப்பெருகி நாட்டைக் கைப்பற்றும் வரை சிறிது சிறிதாக அவர்களை உனக்கு முன்னின்று துரத்திவிடுவேன்.
31உன் எல்லைகள், செங்கடல்முதல் பெலிஸ்தியர் கடல்வரைக்கும், பாலைநிலம் முதல் யூப்பிரத்தீசு நதிவரைக்கும், விரிந்து கிடக்கச் செய்வேன். ஏனெனில், அந்நாட்டின் குடிமக்களை நான் உன் கையில் ஒப்படைப்பேன். நீயும் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்.
32நீ அவர்களுடனோ அவர்களுடைய தெய்வங்களுடனோ எந்த உடன்படிக்கையும் செய்யாதே!
33அவர்கள் உன் நாட்டில் குடியிருக்க வேண்டாம். இல்லையெனில் நீ எனக்கு எதிராகப் பாவம் செய்ய அவர்கள் காரணமாவர். நீ அவர்கள் தெய்வங்களை வழிபடுவது உனக்குக் கண்ணியாக அமையும்.

23:1 விப 17:16; லேவி 19:11-12; இச 5:20. 23:3 லேவி 19:15. 23:4-5 இச 22:1-4. 23:6-8 லேவி 19:15; இச 16:9. 23:9 விப 22:21; லேவி 19:33-34; இச 24:17-18; 27:19. 23:10-11 லேவி 25:1-7. 23:12 விப 20:9-11; 31:15; 34:21; 35:2; லேவி 23:3; இச 5:13-14. 23:15 விப 12:14-20; லேவி 23:6-8; எண் 28:17-25. 23:16 லேவி 23:15-21,39-43; எண் 28:26-31. 23:19 விப 34:26; இச 14:21; 26:2.