நாட்டின் புதுவாழ்வுக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: ‘சான்றுபகர் லீலிமலர்’ என்ற மெட்டு; ஆசாபின் புகழ்ப்பா)

1இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்!

யோசேப்பை மந்தையென நடத்திச்

செல்கின்றவரே!
கேருபுகளின் மீது வீற்றிருப்பவரே,

ஒளிர்ந்திடும்!

2எப்ராயிம், பென்யமின்,

மனாசேயின் முன்னிலையில்

உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து

எம்மை மீட்க வாரும்!

3கடவுளே, எங்களை முன்னைய

நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்!

எம்மை மீட்குமாறு

உமது முக ஒளியைக் காட்டியருளும்!

4படைகளின் கடவுளாம் ஆண்டவரே!

உம் மக்களின் வேண்டுதலுக்கு எதிராக

எத்தனை நாள் நீர் சினம் கொண்டிருப்பீர்?

5கண்ணீராம் உணவை

அவர்கள் உண்ணச் செய்தீர்;

கண்ணீரை அவர்கள்

பெருமளவு பருகச் செய்தீர்.

6எங்கள் அண்டை நாட்டாருக்கு

எங்களைச் சர்ச்சைப்பொருள் ஆக்கினீர்;

எங்கள் எதிரிகள்

எம்மை ஏளனம் செய்தார்கள்.

7படைகளின் கடவுளே!

எங்களை முன்னைய

நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்;

எம்மை மீட்குமாறு

உமது முக ஒளியைக் காட்டியருளும்.

8எகிப்தினின்று திராட்சைக்செடி

ஒன்றைக் கொண்டுவந்தீர்;

வேற்றினத்தாரை விரட்டிவிட்டு

அதனை நட்டு வைத்தீர்.

9அதற்கென நிலத்தை

ஒழுங்குபடுத்திக் கொடுத்தீர்;

அது ஆழ வேரூன்றி

நாட்டை நிரப்பியது.

10அதன் நிழல் மலைகளையும்

அதன் கிளைகள்

வலிமைமிகு கேதுரு மரங்களையும் மூடின.

11அதன் கொடிகள் கடல்வரையும்*

அதன் தளிர்கள் பேராறுவரையும்** பரவின.

12பின்னர், நீர் ஏன்

அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்?

அவ்வழிச் செல்வோர் அனைவரும்

அதன் பழத்தைப் பறிக்கின்றனரே!

13காட்டுப் பன்றிகள்

அதனை அழிக்கின்றன;

வயல்வெளி உயிரினங்கள்

அதனை மேய்கின்றன.

14படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்!

விண்ணுலகினின்று

கண்ணோக்கிப் பாரும்;

இந்த திராட்சைக் கொடிமீது
பரிவு காட்டும்!

15உமது வலக்கை நட்டுவைத்த கிளையை,

உமக்கென நீர் வளர்த்த மகவைக்

காத்தருளும்!

16அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்;

அதை வெட்டித் தள்ளிவிட்டார்கள்;

உமது முகத்தின் சினமிகு நோக்கினால்,

அவர்கள் அழிந்துபோவார்களாக!

17உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை

உமது கை காப்பதாக!

உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த

மானிட மைந்தரைக் காப்பதாக!

18இனி நாங்கள் உம்மைவிட்டு

அகலமாட்டோம்;

எமக்கு வாழ்வு அளித்தருளும்;

நாங்கள் உமது பெயரைத் தொழுவோம்.

19படைகளின் கடவுளான ஆண்டவரே!

எங்களை முன்னைய

நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்!

நாங்கள் விடுதலை பெறுமாறு

உமது முக ஒளியைக் காட்டியருளும்!


80:1 விப 25:22.
80:11 *மத்திய தரைக் கடல், **யூப்பிரத்தீசு.