1என் மக்களே,
என் அறிவுரைக்குச்
செவிசாயுங்கள்;
என் வாய்மொழிகளுக்குச்
செவிகொடுங்கள்.
2நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்;
முற்காலத்து மறைசெய்திகளை
எடுத்துரைப்பேன்.
3நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை,
எம் மூதாதையர் எமக்கு
விரித்துரைத்தவை –
இவற்றை உரைப்போம்.
4அவர்களின் பிள்ளைகளுக்கு
நாங்கள் அவற்றை மறைக்க மாட்டோம்;
வரவிருக்கும் தலைமுறைக்கு
ஆண்டவரின் புகழ்மிகு,
வலிமைமிகு செயல்களையும்
அவர் ஆற்றிய வியத்தகு
செயல்களையும் எடுத்துரைப்போம்.
5யாக்கோபுக்கென அவர்
நியமங்களை வகுத்தார்;
இஸ்ரயேலுக்கெனத்
திருச்சட்டத்தை ஏற்படுத்தினார்;
இதனையே தம் பிள்ளைகளுக்கும்
கற்பிக்குமாறு
நம் மூதாதையர்க்கு அவர்
கட்டளையிட்டார்.
6வரவிருக்கும் தலைமுறையினர்
இவற்றை அறிந்திடவும்,
இனிப் பிறக்கவிருக்கும் பிள்ளைகள் –
இவர்கள் தம் புதல்வர்களுக்கு
ஆர்வத்துடன் கற்றுக்கொடுக்கவும்,
7அதனால், அவர்கள் கடவுள்மீது
நம்பிக்கை வைக்கவும்,
இறைவனின் செயல்களை மறவாதிருக்கவும்,
அவர்தம் கட்டளைகளைக்
கடைப்பிடிக்கவும்,
8தங்கள் மூதாதையரைப்போல்,
எதிர்ப்பு மனமும்,
அடங்காக் குணமும் கொண்ட
தலைமுறையாகவும்,
நேரிய உள்ளமற்றவர்களாகவும்
இறைவன்மீது உண்மைப் பற்று
அற்றவர்களாகவும்
இராதபடி அவர் கட்டளையிட்டார்.
9வில் வீரரான எப்ராயிம் மக்கள்,
போரில் புறங்காட்டி ஓடினர்.
10அவர்கள் கடவுளோடு செய்துகொண்ட
உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கவில்லை;
அவரது திருச்சட்டத்தைப் பின்பற்ற
மறுத்துவிட்டனர்.
11அவர்தம் செயல்களையும்
அவர் ஆற்றிய அருஞ்செயல்களையும்
அவர்கள் மறந்தனர்.
12எகிப்து நாட்டில், சோவான் சமவெளியில்
அவர்களின் மூதாதையர் காணுமாறு
அவர் வியத்தகு செயல்கள் பல புரிந்தார்;
13கடலைப் பிரித்து
அவர்களை வழிநடத்தினார்;
தண்ணீரை அணைக்கட்டுப்போல
நிற்கும்படி செய்தார்;
14பகலில் மேகத்தினாலும்
இரவு முழுவதும்
நெருப்பின் ஒளியாலும்
அவர்களை வழி நடத்தினார்.
15பாலைநிலத்தில் பாறைகளைப் பிளந்தார்;
ஆழத்தினின்று பொங்கிவருவது
போன்ற நீரை
அவர்கள் நிறைவாகப் பருகச் செய்தார்;
16பாறையினின்று நீரோடைகள்
வெளிப்படச் செய்தார்;
ஆறுகளென நீரை அவர்
பாய்ந்தோடச் செய்தார்.
17ஆயினும், அவர்கள் அவருக்கெதிராகத்
தொடர்ந்து பாவம் செய்தனர்;
வறண்ட நிலத்தில்
உன்னதருக்கு எதிராய் எழுந்தனர்.
18தம் விருப்பம்போல் உணவு கேட்டு
வேண்டுமென்றே இறைவனைச்
சோதித்தனர்.
19அவர்கள் கடவுளுக்கு எதிராக
இவ்வாறு பேசினார்கள்:
‘பாலை நிலத்தில் விருந்தளிக்க
இறைவனால் இயலுமா?
20உண்மைதான்! அவர் பாறையை
அதிரத் தட்டினார்;
நீர் பாய்ந்து வந்தது;
ஆறுகள் கரைபுரண்டு ஓடின.
ஆயினும், அப்பமளிக்க இயலுமா அவரால்?
தம் மக்களுக்கு இறைச்சி தர முடியுமா?’
21எனவே, இதைக் கேட்ட ஆண்டவர்
சினங்கொண்டார்;
நெருப்பு யாக்கோபுக்கு எதிராய்க்
கிளர்ந்தெழுந்தது.
இஸ்ரயேல்மீது அவரது சினம்
பொங்கியெழுந்தது.
22ஏனெனில், அவர்கள் கடவுள்மீது
பற்றுறுதி கொள்ளவில்லை;
அவர் காப்பார் என்று நம்பவில்லை.
23ஆயினும், மேலேயுள்ள வானங்களுக்கு
அவர் கட்டளையிட்டார்;
விண்ணகத்தின் கதவுகளைத்
திறந்துவிட்டார்.
24அவர்கள் உண்பதற்காக மன்னாவை
மழையெனப் பொழியச் செய்தார்;
அவர்களுக்கு வானத்து உணவை
வழங்கினார்.
25வான தூதரின் உணவை
மானிடர் உண்டனர்;
அவர்களுக்கு வேண்டியமட்டும்
உணவுப் பொருளை அவர் அனுப்பினார்.
26அவர் விண்ணுலகினின்று கீழ்க்காற்றை
இறங்கிவரச் செய்தார்;
தம் ஆற்றலினால் தென்காற்றை
அழைத்துவந்தார்.
27அவர் இறைச்சியைத் துகள்துகளென
அவர்கள்மீது பொழிந்தார்;
இறகுதிகழ் பறவைகளைக்
கடற்கரை மணலென வரவழைத்தார்.
28அவற்றை அவர்தம்
பாளையத்தின் நடுவிலும்
கூடாரத்தைச் சுற்றிலும் விழச்செய்தார்.
29அவர்கள் உண்டனர்;
முற்றிலுமாய் நிறைவடைந்தனர்;
அவர்கள் விரும்பியவற்றையே
அவர் அவர்களுக்கு அளித்தார்.
30அவர்களது பெருந்தீனி வேட்கை
தணியுமுன்பே,
அவர்கள் வாயிலில்
உணவு இருக்கும் பொழுதே,
31கடவுளின் சினம் அவர்களுக்கு எதிராக
மூண்டெழுந்தது;
அவர்களுள் வலியோரை அவர் கொன்றார்;
இஸ்ரயேலின் இளைஞரை வீழ்த்தினார்.
32இவையெல்லாம் நிகழ்ந்த பின்னும்,
அவர்கள் தொடர்ந்து பாவம் செய்தார்கள்;
அவர்தம் வியத்தகு செயல்களில்
நம்பிக்கை கொள்ளவில்லை.
33ஆகையால், அவர்களது வாழ்நாளை
மூச்சென மறையச் செய்தார்;
அவர்களது ஆயுளைத் திடீர்த் திகிலால்
முடிவுறச் செய்தார்.
34அவர்களை அவர் கொன்றபோது
அவரைத் தேடினர்;
மனம் மாறி இறைவனைக்
கருத்தாய் நாடினர்.
35கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும்
உன்னதரான இறைவன்
தங்கள் மீட்பர் என்பதையும்
அவர்கள் நினைவில் கொண்டனர்.
36ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே
அவரைப் புகழ்ந்தார்கள்;
தங்கள் நாவினால் அவரிடம்
பொய் சொன்னார்கள்.
37அவர்கள் இதயம்
அவரைப் பற்றிக்கொள்வதில்
உறுதியாய் இல்லை;
அவரது உடன்படிக்கையில்
அவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
38அவரோ இரக்கம் கொண்டவராய்,
அவர்கள் குற்றத்தை மன்னித்தார்;
அவர்களை அழித்துவிடவில்லை,
பலமுறை தம் கோபத்தை
அடக்கிக்கொண்டார்.
தம் சினத்தையெல்லாம்
அவர்களுக்கு எதிராய் மூட்டவில்லை.
39அவர்கள் வெறும் சதையே என்பதையும்
திரும்பி வராத காற்று என்பதையும்
அவர் நினைவுகூர்ந்தார்.
40பாலை நிலத்தில்
அவர்கள் எத்தனையோமுறை
அவருக்கெதிராய்க் கிளர்ந்தெழுந்தனர்!
வறண்ட நிலத்தில்
அவர் மனத்தை வருத்தினர்!
41இறைவனை அவர்கள்
மீண்டும் மீண்டும் சோதித்தனர்;
இஸ்ரயேலின் தூயவருக்கு
எரிச்சலூட்டினர்.
42அவரது கைவன்மையை மறந்தனர்;
எதிரியிடமிருந்து அவர் அவர்களை
விடுவித்த நாளையும் மறந்தனர்;
43அந்நாளில் எகிப்தில் அவர்
அருஞ்செயல்கள் செய்தார்;
சோவான் சமவெளியில்
வியத்தகு செயல்கள் புரிந்தார்.
44அவர்களின் ஆறுகளைக்
குருதியாக மாற்றினார்;
எனவே, தங்கள் ஓடைகளினின்று
அவர்களால் நீர் பருக இயலவில்லை.
45அவர்களை விழுங்குமாறு
அவர்கள்மீது ஈக்களையும்,
அவர்களது நாட்டை அழிக்குமாறு
தவளைகளையும் அவர் அனுப்பினார்.
46அவர்களது விளைச்சலைப்
பச்சைப் புழுக்களுக்கும்
அவர்களது உழைப்பின் பயனை
வெட்டுக்கிளிகளுக்கும் அவர் கொடுத்தார்.
47கல்மழையினால் அவர்களுடைய
திராட்சைக் கொடிகளையும்
உறைபனியால் அவர்களுடைய
அத்தி மரங்களையும் அவர் அழித்தார்.
48அவர்களுடைய கால்நடைகளைக்
கல்மழையிடமும்
அவர்களுடைய ஆடுமாடுகளை
இடி மின்னலிடமும் அவர் ஒப்புவித்தார்.
49தம் சினத்தையும், சீற்றத்தையும்
வெஞ்சினத்தையும் இன்னலையும் –
அழிவு கொணரும் தூதர்க் கூட்டத்தை –
அவர் ஏவினார்.
50அவர் தமது சினத்திற்கு
வழியைத் திறந்துவிட்டார்;
அவர்களைச் சாவினின்று
தப்புவிக்கவில்லை;
அவர்களின் உயிரைக்
கொள்ளை நோய்க்கு ஒப்புவித்தார்.
51எகிப்தின் அனைத்துத்
தலைப்பேறுகளையும்
‛காம்’ கூடாரங்களில்
ஆண் தலைப்பேறுகளையும்
அவர் சாகடித்தார்.
52அவர்தம் மக்களை ஆடுகளென
வெளிக்கொணர்ந்தார்;
பாலைநிலத்தில் அவர்களுக்கு
மந்தையென வழி காட்டினார்.
53பாதுகாப்புடன் அவர்களை
அவர் அழைத்துச் சென்றார்;
அவர்கள் அஞ்சவில்லை;
அவர்களுடைய எதிரிகளைக்
கடல் மூடிக்கொண்டது.
54அவர் தமது திருநாட்டுக்கு,
தமது வலக்கரத்தால் வென்ற மலைக்கு,
அவர்களை அழைத்துச் சென்றார்.
55அவர்கள் முன்னிலையில்
வேற்றினத்தாரை அவர் விரட்டியடித்தார்;
அவர்களுக்கு நாட்டைப் பங்கிட்டு
உரிமைச் சொத்தாகக் கொடுத்தார்;
இஸ்ரயேல் குலங்களை
அவர்கள் கூடாரங்களில் குடியேற்றினார்.
56ஆயினும், உன்னதரான கடவுளை
அவர்கள் சோதித்தனர்;
அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்;
அவர்தம் நியமங்களைக்
கடைப்பிடிக்கவில்லை.
57தங்கள் மூதாதையர்போல்
அவர்கள் வழி தவறினர்;
நம்பிக்கைத் துரோகம் செய்தனர்;
கோணிய வில்லெனக் குறி மாறினர்.
58தம் தொழுகை மேடுகளால்
அவருக்குச் சினமூட்டினர்;
தம் வார்ப்புச் சிலைகளால்
அவருக்கு ஆத்திரமூட்டினர்.
59கடவுள் இதைக் கண்டு
சினம் கொண்டார்;
இஸ்ரயேலை அவர்
முழுமையாகப் புறக்கணித்தார்;
60சீலோவில் அழைந்த தம்
உறைவிடத்தினின்று வெளியேறினார்;
மானிடர் நடுவில் தாம் வாழ்ந்த
கூடாரத்தினின்று அகன்றார்;
61தம் வலிமையை*
அடிமைத் தனத்திற்குக் கையளித்தார்;
தம் மாட்சியை*
எதிரியிடம் ஒப்புவித்தார்;
62தம் மக்களை வாளுக்குக் கையளித்தார்;
தம் உரிமைச்சொத்தின்மீது
கடுஞ்சினங்கொண்டார்.
63அவர்களுடைய இளைஞரை
நெருப்பு விழுங்கியது;
அவர்களுடைய கன்னியர்க்குத்
திருமணப் பாடல் இல்லாது போயிற்று.
64அவர்களுடைய குருக்கள்
வாளால் வீழ்த்தப்பட்டனர்;
அவர்களுடைய கைம்பெண்டிர்க்கு
ஒப்பாரி வைக்க வழியில்லை.
65அப்பொழுது,
உறக்கத்தினின்று எழுவோரைப்போல்,
திராட்சை மதுவால் களிப்புறும்
வீரரைப்போல்
எம் தலைவர் விழித்தெழுந்தார்.
66அவர் தம் எதிரிகளைப்
புறமுதுகிடச் செய்தார்;
அவர்களை என்றென்றும்
இகழ்ச்சிக்கு உள்ளாக்கினார்.
67அவர் யோசேப்பின் கூடாரத்தைப்
புறக்கணித்தார்;
எப்ராயிம் குலத்தைத்
தேர்வு செய்யவில்லை.
68ஆனால், யூதாவின் குலத்தை,
தமக்கு விருப்பமான சீயோன் மலையை
அவர் தேர்ந்துகொண்டார்.
69தம் திருத்தலத்தை உயர் விண்ணகம்போல்
அவர் அமைத்தார்;
மண்ணுலகத்தில்* என்றும்
நிலைத்திருக்குமாறு எழுப்பினார்.
70அவர் தாவீதைத்
தம் ஊழியராய்த் தேர்ந்தெடுத்தார்;
ஆட்டு மந்தைகளினின்று
அவரைப் பிரித்தெடுத்தார்.
71இறைவன் தம் மக்களான யாக்கோபை,
தம் உரிமைச் சொத்தான இஸ்ரயேலை,
பால் கொடுக்கும் ஆடுகளைப் பேணிய
தாவீது மேய்க்குமாறு செய்தார்.
72அவரும் நேரிய உள்ளத்தோடு
அவர்களைப் பேணினார்;
கைவன்மையாலும் அறிவுத் திறனாலும்
அவர்களை வழிநடத்தினார்.