பாதுகாப்புக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீதுக்கு உரியது)

1கடவுளே! என் கூக்குரலைக்

கேளும்; என்

விண்ணப்பத்திற்குச் செவிசாயும்.

2பூவுலகின் கடைமுனையினின்று

உம்மைக் கூப்பிடுகின்றேன்;

என் உள்ளம் சோர்வுற்றிருக்கின்றது;

உயரமான குன்றுக்கு
என்னை அழைத்துச் செல்லும்.

3ஏனெனில் நீரே என் புகலிடம்;

எதிரியின்முன் வலிமையான கோட்டை.

4நான் உமது கூடாரத்தில்

எந்நேரமும் தங்கியிருப்பேன்;

உமது இறக்கைகளின் பாதுகாப்பில்

தஞ்சம் புகுவேன். (சேலா)

5ஏனெனில், கடவுளே!

நான் செய்த பொருத்தனைகளை

நீர் அறிவீர்;

உமது பெயருக்கு அஞ்சுவோர்க்குரிய

உடைமையை எனக்குத் தந்தீர்.

6அரசரைப் பல்லாண்டு வாழச் செய்யும்;

அவரது ஆயுள்

தலைமுறை தலைமுறையாக நீடிக்கட்டும்!

7கடவுள் முன்னிலையில் அவர்

என்றென்றும் வீற்றிருப்பாராக!

பேரன்போடும் உண்மையோடும்

அவரைக் காத்தருளும்!

8உமது பெயரை என்றென்றும்

புகழ்ந்து பாடுவேன்;

நாள்தோறும் என் பொருத்தனைகளை

நிறைவேற்றுவேன்.