கடவுளுக்கு அஞ்சி நடப்போர்

1அல்லேலூயா! ஆண்டவருக்கு

அஞ்சிநடப்போர் பேறுபெற்றோர்;

அவர்தம் கட்டளைகளில்

அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.

2அவர்களது வழிமரபு பூவுலகில்

வலிமைமிக்கதாய் இருக்கும்;

நேர்மையுள்ளோரின் தலைமுறை

ஆசிபெறும்.

3சொத்தும் செல்வமும்

அவர்களது இல்லத்தில் தங்கும்;

அவர்களது நீதி

என்றென்றும் நிலைத்திருக்கும்.

4இருளில் ஒளியென அவர்கள்

நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்;

அருளும் இரக்கமும் நீதியும்

உள்ளோராய் இருப்பர்.

5மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர்

நன்மை அடைவர்;

அவர்கள் தம் அலுவல்களில்

நீதியுடன் செயல்படுவர்.

6எந்நாளும் அவர்கள் அசைவுறார்;

நேர்மையுள்ளோர்

மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.

7தீமையான செய்தி எதுவும்

அவர்களை அச்சுறுத்தாது;

ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால்

அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.

8அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்;

அவர்களை அச்சம் மேற்கொள்ளாது;

இறுதியில் தம் எதிரிகள் அழிவதை

அவர்கள் காண்பது உறுதி.

9அவர்கள் வாரி வழங்கினர்;

ஏழைகளுக்கு ஈந்தனர்;

அவர்களது நீதி

என்றென்றும் நிலைத்திருக்கும்;

அவர்களது வலிமை

மாட்சியுடன் மேலோங்கும்.

10தீயோர் அதைப் பார்த்து எரிச்சல் அடைவர்;

பல்லை நெரிப்பர்; சோர்ந்து போவர்;

தீயோரின் விருப்பமெல்லாம்

வீணாய்ப்போம்.


112:9 2 கொரி 9:9.