யோபு முன்னுரை


விவிலியத்தின் ஞான இலக்கியங்களுள் ‘யோபு’ என்னும் இந்நூல் தலைசிறந்தது. ஒரு காலத்தில் கடவுளுக்கு ஏற்ற நீதிமானாக ஒருவர் வாழ்ந்து வந்தார்; அவர் பெயர் யோபு. அவர் செல்வர்; கடவுளுக்கு அஞ்சி நடந்தவர். கடவுளின் அனுமதியுடன் சாத்தான் யோபைச் சோதித்தான். இதனால் யோபு மக்களை இழந்தார். சொத்து சுகத்தை இழந்தார்; உடல் நலத்தையும் இழந்தார். இருப்பினும், அவர் கடவுளைத் தூற்றினாரில்லை. அவருக்கு ஏற்புடையவராகவே வாழ்ந்து வந்தார். அவர் மனைவியும் நண்பர்களும் அவருடன் வாக்குவாதம் செய்து, இறைவனின் நீதியை விளக்க முயன்றனர்.

பழைய ஏற்பாட்டுப் பின்னணியின்படி, துன்பத்திற்குக் காரணம் ஒருவர் செய்யும் பாவமே. ஆகவே, யோபு படும் துன்பத்திற்குக் காரணம் அவர் செய்த பாவமே என்பது நண்பர்களின் கூற்று. தாம் அத்தகைய குற்றம் ஏதும் செய்யவில்லை என்பது யோபு கூறும் மறுப்பு. இவ்வாறு ‘நீதிமான் ஏன் துன்பப்பட வேண்டும்?’ என்ற வினாவிற்கு விடை காணும் போக்கில், நாடகம்போல் அமைந்துள்ளது இந்நூல்.

இந்நூலின் காலம் திட்டவட்டமாகத் தெரியவில்லை. பல அறிஞர்கள் இது பாபிலோனிய அடிமை வாழ்வுக்குப் பிற்பட்டது என்பர்.

நூலின் பிரிவுகள்

 1. முகவுரை 1:1 - 2:13
 2. யோபும் அவர்தம் நண்பர்களும் 3:1 - 31:40
   அ) யோபின் முறையீடு 3:1 - 26
   ஆ) முதல் உரையாடல் 4:1 - 14:22
   இ) இரண்டாம் உரையாடல் 15:1 - 21:34
   ஈ) மூன்றாம் உரையாடல் 22:1 - 27:23
   உ) ஞானத்தின் மேன்மை 28:1 - 28
   ஊ) யோபின் இறுதிப் பதிலுரை 29:1 - 31:40
 3. எலிகூவின் உரைகள் 32:1 - 37:24
 4. யோபுக்கு ஆண்டவரின் பதில் 38:1 - 42:6
 5. முடிவுரை 42:7 -17