1தூண்டிலால் லிவியத்தனைத்
தூக்கிடுவாயோ? கயிற்றினால்
அதன் நாக்கினைக் கட்டிடுவாயோ?
2அதன் மூக்கிற்குச் கயிறு இட
உன்னால் முடியுமோ? அதன் தாடையில்
கொக்கியினால் குத்த முடியுமோ?
3வேண்டுகோள் பல
அது உன்னிடம் விடுக்குமோ?
கனிவாக உன்னிடம் கெஞ்சுமோ?
4என்றும் உனக்கு ஏவல்புரிய
உன்னுடன் அது
உடன்படிக்கை செய்யுமோ?
5பறவைபோல் துள்ளி அதனுடன்
ஆடுவாயா? உம் மகளிர்க்கென
அதனைக் கட்டிவைப்பாயா?
6மீனவர் குழுவினர்
அதன்மேல் பேரம் பேசுவார்களோ?
அவர்கள் வணிகரிடையே
அதைக் கூறுபோடுவார்களோ?
7கூரிய முட்களால் அதன் தோலையும்
மீன் எறி வேல்களால் அதன் தலையையும்
குத்தி நிரப்புவாயோ?
8உன் கையை அதன்மேல் வைத்துப்பார்;
எழும் போராட்டத்தை மறக்கமாட்டாய்.
மீண்டும் அதைச் செய்ய மாட்டோம்.
9இதோ! தொடுவோர் நம்பிக்கை
தொலைந்துபோம்; அதனைக் கண்டாலே
ஒருவர் கதிகலங்குவார்.
10அதை எழுப்பும் வீரம் எவருக்கும் இல்லை;
பின்பு அதன்முன் நிற்கத் துணிபவர் யார்?
11அதனை எதிர்த்து உயிரோடிருந்தவர்
எவராவது உண்டோ?
விண்ணகத்தின்கீழ்
அப்படிப்பட்டவர் யாருமில்லை!
12அதன் உறுப்புகள், அதன் ஆற்றல்
அதன் அமைப்பின் அழகு
அனைத்தையும் பற்றி
அறிவிக்காது விடேன்.
13அதன் மேல்தோலை உரிப்பவர் யார்?
அதன் தாடை இரண்டுக்குமிடையே
நுழைபவர் யார்?
14அதன் முகத்தில் வாயிலைத் திறப்பவன் யார்?
அதன் பற்களைச் சூழ்ந்து பேரச்சமே உள்ளது.
15அதன் முதுகு கேடய வரிசையாம்;
நெருங்க மூடி முத்திரை இடப்பட்டதாம்.
16ஒன்றோடு ஒன்று ஒட்டி உள்ளது.
காற்றும் அதனிடையே கடந்திடாது;
17ஒன்றோடு ஒன்றாய் இணைந்துள்ளன;
பிரிக்கமுடியாதவாறு
ஒன்றாய்ப் பிடித்துள்ளன.
18துலங்கும் மின்னல் அதன் தும்மல்;
வைகறை இமைகள் அதன் கண்கள்.
19அதன் வாயினின்று புறப்படுவது தீப்பிழம்பு;
அங்கிருந்து பறப்பது நெருப்புப் பொறிகளே.
20நாணல் நெருப்புக்
கொதிகலனின்று வருவதுபோல்
அதன் நாசியினின்று புகை கிளம்பும்.
21அதன் மூச்சு கரிகளைப் பற்றவைக்கும்;
அதன் வாயினின்று தீப்பிழம்பு கிளம்பிவரும்.
22அதன் கழுத்தில் வலிமை வதிகின்றது;
நடுக்கம் அதன்முன் துள்ளியாடுகின்றது.
23அதன் தசைமடிப்புகள் ஒட்டியிருக்கும்;
கெட்டியாயிருக்கும் அவற்றை
அசைக்க ஒண்ணாது.
24அதன் நெஞ்சம் கல்லைப்போல்
கடினமானது;
திரிகையின் அடிக்கல்போல்
திண்மையானது.
25அது எழும்பொழுதே
தெய்வங்கள் அஞ்சுகின்றன;
அது அறையவரும்போதே
நிலைகுலைகின்றன.
26வாள் அதைத் தாக்கிடினும், ஊடுருவாது;
ஈட்டியோ அம்போ, எறிவேலோ
உட்செல்லாது.
27இரும்பை அது துரும்பெனக் கருதும்;
வெண்கலத்தை உளுத்த கட்டையெனக்
கொள்ளும்.
28வில்வீரன் அதை விரட்ட முடியாது;
கவண் கல்லும் கூளம்போல் ஆகுமே.
29பெருந்தடியைத் தாளடி எனக்கருதும்;
எறிவேல் ஒலிகேட்டு எள்ளி நகைக்கும்.
30அதன் வயிற்றுப்புறம்
ஒட்டுத் துண்டுகளின் அடுக்கு;
அது சேற்றில் படுத்துக்கிடக்கையில்
பரம்புக் கட்டை.
31கொதிகலமென அது
கடலைப் பொங்கச் செய்யும்;
தைலச் சட்டியென அது
ஆழியைக் கொப்பளிக்கச் செய்யும்.
32அது போனபிறகு பாதை பளபளக்கும்;
கடலே நரைத்ததெனக் கருதத்தோன்றும்.
33அகிலத்தில் அதற்கு இணையானது இல்லை;
அச்சம் கொண்டிலாப் படைப்பு அதுவே.
34செருக்குற்ற படைப்பு
அனைத்தையும் ஏளனமாய் நோக்கும்;
வீறுகொண்ட விலங்குகட்கு
வேந்தனும் அதுவே.