1அதற்கு நாமாவியனான
சோப்பார் சொன்ன மறுமொழி:
2திரளான சொற்கள் பதிலின்றிப் போகலாமா?
மிகுதியாகப் பேசுவதால்,
ஒருவர் நேர்மையாளர் ஆகிவிடுவாரோ?
3உம் வீண் வார்த்தைகள் மனிதரை
வாயடைத்திடுமோ? நீர் நகையாடும் போது
உம்மை யாரும் நையாண்டி செய்யாரோ?
4“என் அறிவுரை தூயது; நானும்
என் கண்களுக்கு மாசற்றவன்” என்கின்றீர்.
5ஆனால், “கடவுளே பேசட்டும்; தம் இதழ்களை
உமக்கெதிராயத் திறக்கட்டும்” என
யாரேனும் அவரை வேண்டாரோ!
6அவரே ஞானத்தின் மறைபொருளை
உமக்கு அறிவிக்கட்டும்;
அவர் இரட்டிப்பான அறிவும் திறனுமுடையவர்;
கடவுள் உம் தீமைகளில் சிலவற்றை
மறந்தார் என்பதை அறிக!
7கடவுளின் ஆழ்ந்த உண்மைகளை
நீர் அறிய முடியுமா? எல்லாம் வல்லவரின்
எல்லையைக் கண்டுணர முடியுமா?
8அவை வானங்களை விட உயர்ந்தவை;
நீர் என்ன செய்வீர்?
அவை பாதாளத்தைவிட ஆழமானவை;
நீர் என்ன அறிவீர்?
9அதன் அளவு பாருலகைவிடப் பரந்தது;
ஆழ்கடலைவிட அகலமானது.
10அவர் இழுத்து வந்து அடைத்துப் போட்டாலும்,
அவைமுன் நிறுத்தினாலும்
அவரைத் தடுப்பார் யார்?
11ஏனெனில், அவர் மனிதரின்
ஒன்றுமில்லாமையை அறிவார்;
தீமையைக் காண்கின்றார்; ஆனால்,
அதை ஒருபொருட்டாகக் கருதுவதில்லை.
12காட்டுக்கழுதைக்குட்டி
மனிதனாகப் பிறந்தால்,
அறிவிலியும் அறிவு பெறுவான்.
13உம்முடைய உள்ளத்தை
நீர் ஒழுங்குபடுத்தினால்,
உம்முடைய கைகளை
அவரை நோக்கி நீட்டுவீராக!
14உம் கையில் கறையிருக்குமாயின்
அப்புறப்படுத்தும்; உம் கூடாரத்தில்
தீமை குடிகொள்ளாதிருக்கட்டும்.
15அப்போது உண்மையாகவே நாணமின்றி
உம் முகத்தை ஏறெடுப்பீர்;
நிலைநிறுத்தப்படுவீர்; அஞ்சமாட்டீர்.
16உம் துயரை நீர் மறந்துபோவீர்;
கடந்துபோன வெள்ளம்போல்
அதை நினைகூர்வீர்.
17உம் வாழ்வுக்காலம் நண்பகலைவிட ஒளிரும்;
காரிருளால் மூடப்பட்டிருந்தாலும்
காலைபோல் ஆவீர்;
18நம்பிக்கை இருப்பதனால் உறுதிகொள்வீர்;
சுற்றிலும் நோக்கிப் பாதுகாப்பில் ஓய்வீர்;
19ஓய்ந்து படுப்பீர்; ஒருவரும் உம்மை அச்சுறுத்தார்;
உம் முகம்தேடிப் பலர் உம் தயவை நாடுவர்;
20தீயோரின் கண்கள் மங்கிப்போம்;
அனைத்துப் புகலிடமும் அவர்க்கு அழிந்துபோம்;
உயிர்பிரிதலே அவர்தம் நம்பிக்கை!