யூதர் தம் எதிரிகளை அழித்தல்

1மன்னரின் வாக்கும் நியமும் நிறைவேற்றப்படவேண்டிய அதார் என்ற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாள் வந்தது. எதிரிகள் யூதரை மேற்கொள்ளலாம் என்று நம்பியிருந்த அந்த நாள், யூதர் தம் பகைவரை மேற்கொள்ளும் நாளாக மாறியது.
2அகஸ்வேர் மன்னரின் மாநிலங்களில் இருந்த யூதர் அனைவரும் தமக்குத் துன்பம் விளைவிக்க எண்ணியோர்க்கு எதிராய்த் தம் கைகளை நீட்ட அவரவர் தம் இடங்களில் ஒன்று திரண்டனர். வேற்றினத்தாரை அச்சம் ஆட்கொள்ள, அவர்களுள் எவராலும் யூதரை எதிர்த்து நிற்க இயலவில்லை.
3மொர்தக்காயைப் பற்றிய அச்சம் மன்னரின் அலுவல்களில் உதவி செய்கின்ற மாநிலத் தலைவர்கள், குறுநில மன்னர்கள், ஆளுநர்கள் அரச ஊழியம் செய்வோர் அனைவரையும் ஆட்கொள்ள அவர்களும் யூதருக்கு உதவி செய்யலாயினர்.
4மொர்தக்காய் அரச மாளிகையில் வல்லவரானார். அவரது புகழ் அனைத்து மாநிலங்களிலும் பரவியது. அவரது ஆற்றல் மென்மேலும் வளர்ந்தது.
5எனவே, யூதர் தம் பகைவருக்கு எதிராய்த் தாம் விரும்பியபடி செய்தனர். அவர்களை வாளால் தாக்கி வெட்டி வீழ்த்தினர்.
6சூசான் அரண்மனையில் ஐந்நூறு பேரை யூதர் கொன்றொழித்தனர்.
7பர்சந்தத்தா, தல்போன், அஸ்பாத்தா,
8போராத்தா, அதலியா, அரிதாத்தா,
9பர்மஸ்தா, அரிசாய், அரிதாய், வய்சாத்தா ஆகிய
10யூதரின் எதிரியும் அம்மதாத்தின் மகனுமான ஆமானின் புதல்வர் பதின்மரையும் அவர்கள் கொன்றனர்; ஆயினும், அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடிக்கவில்லை.
11மன்னரின் பிற மாநிலங்களில் வாழ்ந்த யூதர் ஒன்று திரண்டு தம்மைப் பாதுகாத்துக்கொன்டனர். தம் பகைவரிடமிருந்து விடுதலை பெறுமாறு அவர்கள் எழுபத்தைந்து ஆயிரம் பேரைக் கொன்றனர். ஆயினும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையடிக்கவில்லை.
12அதார் மாதம் பதின்மூன்றாம் நாளையடுத்த பதினான்காம் நாளன்று அவர்கள் ஓய்வெடுத்தனர். அந்நாளை விருந்துண்டு மகிழும் விழாவாக ஆக்கினர்.
13சூசான் வாழ் யூதரோ அதார் மாதம் பதின்மூன்றாம், பதினான்காம் நாள்களில் ஒன்றுகூடி அடுத்துவந்த பதினைந்தாம் நாளை ஒய்வெடுத்து, விருந்துண்டு மகிழும் விழாவாக ஆக்கினர்.
14அரணற்ற நகர்ப்புறச் சிற்றூர்களில் வாழ்ந்த யூதர், அதார் மாதம் பதினான்காம் நாளை விருந்துண்டு மகிழ்ந்து, ஒருவருக்கொருவர் அன்பளிப்பு கொடுத்துக் கொள்ளும் விழாவாக ஆக்கினர்.

பூரிம் பெருவிழா

15மொர்தக்காய் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் மடல்களில் வரைந்து, அவற்றை அருகிலும் தொலையிலும், மன்னர் அகஸ்வோரின் அனைத்து மாநிலங்களிலும் வாழ்ந்த யூதருக்கு அனுப்பி,
16ஆண்டுதோறும் அதார் மாதம் பதினான்காம், பதினைந்தாம் நாள்களை
17யூதர் தம் பகைவரின் தொல்லையினின்று விடுதலை பெற்ற நாள்களாகவும், அவர்களின் துன்பம் மகிழ்ச்சியாகவும், புலம்பல் விழாக் கோலமாகவும் மாறின மாதமாகவும் கொண்டு, அந்நாள்களில் விருந்துண்டு மகிழவும், ஒருவருக்கொருவர் அன்பளிப்பு கொடுத்துக் கொள்ளவும், ஏழைகளுக்கு உணவளிக்கவும், வேண்டுமென்று நியமம் தந்தார்.
18யூதர்கள் தாம் செய்யத் தொடங்கிவாறும், மொர்தக்காய் தங்களுக்கு எழுதியவாறும் செய்ய உடன்பட்டார்கள்.
19ஆகாகியனும் அம்மதாத்தின் மகனுமான ஆமான், யூதர்க்கெல்லாம் எதிரியாய் இருந்து, அவர்களை அழிக்கவும், அடியோடு ஒழிக்கவும், ‘பூர்’ என்ற சீட்டைப் போட்டான்.
20அப்போது எஸ்தர், மன்னரின் உதவியை நாட, யூதருக்கு எதிராய்ச் சதிசெய்த ஆமானின் தீவினை அவன் தலைமேலே விழுமாறு அவர் கட்டளை பிறப்பித்தார். அதன்படி அவனும் அவன் புதல்வரும் தூக்கிலிடப்பட்டனர்.
21எனவே, யூதர் இந்நாள்களை, ‘பூர்’ என்ற சொல்லினின்று எழுந்த ‘பூரிம்’ என்ற பெயரால் அழைக்கலாயினர். ‘பூரிம்’ என்ற இவ்விழாவிற்கு மொர்தக்காயின் மடலின் வாசகமும் அவர்கள் கண்டவையும் அனுபவித்தவையுமே அடிப்படை ஆயின.
22அவர்களும் அவர்களின் வழிமரபினரும் அவர்களைச் சார்ந்தோர் அனைவரும், இந்த இரு நாள்களை அவை பற்றிய மடல்களின்படியும் குறிக்கப்பட்ட காலத்திலும் கண்டிப்பாய்க் கொண்டாடுவது என்று கீழ்க் கண்டவாறு உறுதி பூண்டனர்:
23‘‘இந்நாள்கள் தலைமுறைதோறும், ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரிலும் நினைவுகூரப்பட்டுக் கொண்டாடப்பட வேண்டும். ‘பூரிம்’ என்ற இந்நாள்கள் யூதரிடையே கொண்டாடப்படாமல் போகா. இவற்றின் நினைவு அவர்களின் வழிமரபினரிடையிலும் ஒழிந்து போகாது”.
24அபிகாயிலின் மகளான அரசி எஸ்தரும் யூதராகிய மொர்தக்காயும் ‘பூரிம்’ பற்றிய இந்த இரண்டாம் மடலை முழு அதிகாரத்துடன் எழுதி உறுதிப்படுத்தினர்.
25அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அம்மடல் எழுதப்பட்டு, அகஸ்வேரின் ஆட்சிக்குட்பட்ட நூற்றிருப்பத்தேழு மாநிலங்களிலும் வாழ்ந்த யூதருக்கு அனுப்பப்பட்டது.
26யூதராகிய மொர்தக்காயும் அரசி எஸ்தரும் இட்ட ஆணையின்படி, ‘பூரிம்’ என்ற இந்த நாள்களை யூதரும், அவர்களின் வழிமரபினரும் குறிக்கப்பட்ட காலத்தில் நோன்பு, புலம்பல் நாள்களாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
27இந்தப் ‘பூரிம்’ விழாபற்றிய ஒழுங்குமுறைகள் யாவற்றையும் உறுதிப்படுத்திய எஸ்தரின் ஆணை ஓர் ஏட்டுச் சுருளில் எழுதி வைக்கப்பட்டது.

9:24 எஸ் 3:7.