மொர்தக்காய்க்கு மன்னர் உயர்வு அளித்தல்

1அன்றிரவு மன்னருக்குத் தூக்கம் வரவில்லை. எனவே, அவர் தம் ஆட்சியின் குறிப்புகள் அடங்கிய ஏட்டைத் தம்மிடம் கொண்டுவந்து வாசிக்குமாறு பணித்தார்.
2அரண்மனை வாயிற்காவலர்களான அலுவலர் பிக்தானாவும், செரேசும், மன்னர் அகஸ்வேரை கொல்ல வகை தேடினதை மொர்தக்காய் அறிவித்ததாக அதில் எழுதப்பட்டிருந்தது.
3அச்சமயம் மன்னர், “இதற்காக மொர்தக்காய்க்கு என்ன மரியாதையும் சிறப்பும் செய்யப்பட்டன?” என்று வினவ, மன்னரின் பணியாளர் “அவருக்கு யாதொன்றும் செய்யப்படவில்லை” என்றனர்.
4“முற்றத்தில் இருப்பது யார்?” என்று மன்னர் வினவினார். தான் நாட்டிய தூக்குமரத்தில் மொர்தக்காயைத் தூக்கிலிட வேண்டும் என்று மன்னரிடம் வேண்டுவதற்காய் ஆமான் அவ்வமயம் அரசமாளிகையின் வெளிமுற்றத்தில் வந்து நின்றான்.
5மன்னரின் பணியாளர் மன்னரை நோக்கி, “இதோ, ஆமான் முற்றத்தில் நின்று கொண்டிருக்கிறார்” என்றனர். உடனே மன்னர் அவனை உள்ளே வரச்சொன்னார்.
6ஆமானிடம், “மன்னர் தாம் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று மன்னர் வினவினார். “என்னைவிட வேறு எவருக்கு மன்னர் மரியாதை செய்ய விரும்புவார்?” என்று ஆமான் தன் உள்ளத்தில் நினைத்துக் கொண்டான்.
7எனவே ஆமான் மன்னரை நோக்கி, “மன்னர் தாம் மரியாதை செய்ய விரும்பும் ஒருவருக்கென,
8மன்னர் அணிகின்ற ஆடைகளும், அமர்கின்ற புரவியும், தலையில் சூடும் மகுடமும் கொண்டுவரப்பட வேண்டும்.
9அந்த ஆடைகளும் புரவியும் அரசரின் தலைமை அதிகாரிகளுள் சிறந்த உயர்குடிமகன் ஒருவரிடம் ஒப்படைக்கப்படவேண்டும். மன்னர் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்கு அவர் அந்த ஆடைகளை அணிவித்து, புரவியின்மீது அமர்த்தி, அவரை நகர் வீதிகளில் வலம் வரச் செய்து, ‛இதுவே அரசர் தாம் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்குச் செய்யும் சிறப்பாகும்!’ என, அவருக்கு முன்னால் அறிவிக்கவேண்டும்” என்று பதிலளித்தான்.
10உடனே மன்னர் ஆமானை நோக்கி, “ஆடைகளையும் புரவியையும் விரைவாய்க் கொணர்ந்து நீ கூறியவாறே அரசவாயிலில் நிற்கும் யூதராகிய மொர்தக்காய்க்குச் செய், நீ கூறியவற்றில் எதையும் விட்டுவிடாதே” என்று கூறினார்.
11அவ்வாறே, ஆமான் ஆடைகளையும் புரவியையும் கொணர்ந்து, மொர்தக்காய்க்கு அந்த ஆடைகளை உடுத்துவித்து, புரவியின் மீது அமர்த்தி, நகர் வீதிகளில் வலம் வரச் செய்து, “இதுவே அரசர் தாம் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்குச் செய்யும் சிறப்பாகும்” என்று அவருக்கு முன்பாய் அறிவிக்கப்படுமாறு செய்தான்.
12இதற்குப்பின் மொர்தக்காய் அரச வாயிலுக்குச் சென்றார். ஆமானோ புலம்பிக்கொண்டு, தன் தலைக்கு முக்காடிட்டுத் தன் வீட்டிற்கு விரைந்தான்.
13ஆமான் தன் மனைவி செரேசு, நண்பர்கள் அனைவரிடமும் தனக்கு நேரிட்ட அனைத்தையும் கூறினான். உடனே அந்த ஆலோசகர்களும் அவன் மனைவி செரேசும் அவனை நோக்கி, “யூத குலத்தினனாகிய மொர்தக்காய்க்கு முன்பாக நீ வீழ்ச்சியுறத் தொடங்கிவிட்டாய். நீ அவனை எதிர்த்து நிற்க மாட்டாய்; அவனுக்கு முன்பாய் முற்றிலும் வீழ்வது திண்ணம்” என்றனர்.

ஆமான் கொல்லப்படல்

14இவ்வாறு அவர்கள் அவனிடம் பேசிக்கொண்டிருக்கையில், மன்னரின் அலுவலர் அவ்விடம் வந்து, எஸ்தர் ஏற்பாடுசெய்திருந்த விருந்திற்கு வருமாறு ஆமானை விரைவுப்படுத்தினர்.

6:2 எஸ் 2:21-22.