எதிர்ப்புகளை நெகேமியா மேற்கொள்ளல்

1நாங்கள் மதிலைக் கட்டுவதுபற்றிக் கேள்வியுற்ற சன்பலாற்று சினமுற்று வெகுண்டெழுந்து, யூதர்களை ஏளனம் செய்தான்.
2தன் தோழர்கள் முன்னிலையிலும், சமாரியப் படையின் முன்னிலையிலும், “இந்த அற்ப யூதர்கள் என்ன செய்யமுடியும்? அவர்கள் சும்மா விடப்படுவார்களா? அவர்களால் பலி செலுத்த முடியுமா? ஒரு நாளில் வேலையை முடித்து விடுவார்களா? எரிந்துபோன சாம்பல் குவியலிலிருந்து அவர்களால் கற்கள் உண்டாக்க இயலுமா?” என்று எள்ளி நகையாடினான்.
3அவனுக்கு அருகிலிருந்த அம்மோனியனான தோபியா “ஆமாம், அவர்கள் அதைக் கட்டுகிறார்களாம்; ஆனால், ஒரு நரி அதன் மேல் ஏறிச்சென்றால்கூட அந்தக் கல்மதில் இடிந்துவிழும்” என்று ஏளனம் செய்தான்.
4“எம் கடவுளே! நாங்கள் ஏளனம் செய்யப்படுவதைப் பாரும்! இந்த இழிவு அவர்களின் தலைமேலேயே சுமத்தப்படட்டும். அந்நியரின் நாட்டில் அவர்கள் அடிமைகளாகிக் கொள்ளையடிக்கப்படட்டும்.
5அவர்களின் குற்றத்தை மூடிவிடாதேயும்! அவர்களின் பாவத்தை உம் முகத்திலிருந்து கழுவிவிடாதேயும்! ஏனெனில், கட்டுவோரை இழித்துரைத்தார்கள்.
6இவ்வாறு நாங்கள் மதிலைத் தொடர்ந்து கட்டினோம். எல்லா மதில்களும் பாதி உயரத்திற்கு எழும்பிவிட்டன. மக்களும் பணி செய்வதில் முழு உள்ளத்துடன் ஈடுபட்டனர்.
7சன்பலாற்று, தோபியா, அரேபியர், அம்மோனியர், அஸ்தோதியர் ஆகியோர், எருசலேமின் மதில்களைப் பழுதுபார்க்கும் வேலை முன்னேறிச் செல்வதையும், உடைப்புகள் அடைக்கப்பட்டுவருவதையும் கேள்வியுற்று மிகவும் சீற்றம் கொண்டனர்.
8அவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து எருசலேமின்மீது போர் தொடுக்கவும், அங்கே கலகத்தை உருவாக்கவும் சதி செய்தனர்.
9நாங்களோ எங்கள் கடவுளை வேண்டினோம்; அவர்களிடமிருந்து காத்துக்கொள்ள, இரவும் பகலும் காவலர்களை அமர்த்தினோம்.
10அப்பொழுது யூதா நாட்டினர், சுமப்போர் தளர்ந்து போயினர்; மண்மேடோ பெரிதாய் உள்ளது; மதில்களை நம்மால் கட்டிமுடிக்க இயலாது” என்றனர்.
11எங்கள் எதிரிகளோ, “நாம் அவர்கள் நடுவே சென்று அவர்களைக் கொன்று, வேலையை நிறுத்தும்வரை, அவர்கள் இதை அறியாமலும், தெரியாமலும் இருக்கட்டும்” என்று சொல்லிக்கொண்டனர்.
12அவர்களைச் சுற்றி வாழ்ந்து வந்த யூதர்கள் பத்துமுறை வந்து எங்களிடம், “எல்லாத் திசைகளிலிருந்தும் நம்மை எதிர்த்து வருகிறார்கள்” என்று அறிவித்தனர்.
13எனவே மதிலுக்குப் பின்புறமாக மிகத் தாழ்வான பகுதியில் திறந்த வெளியில் மக்களைக் குடும்பம் குடும்பமாக அவர்களின் வாள், ஈட்டி வில்களோடு நிறத்தி வைத்தேன்.
14தலைவர்களையும், அலுவலர்களையும், ஏனைய மக்களையும் பார்த்தேன். நான் எழுந்து அவர்களை நோக்கி, “பகைவருக்கு அஞ்சாதீர்கள். மேன்மை மிக்கவரும் அஞ்சுதற்கு உரியவருமான ஆண்டவரை மனத்தில் கொண்டு உங்கள் சகோதரர், மகன்கள், மகள்கள், மனைவியர் ஆகியோர்க்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் போராடுங்கள்” என்றேன்.
15தங்கள் சதி எங்களுக்குத் தெரிந்துவிட்டது என்பதையும், அதைக் கடவுள் சிதறடித்தார் என்பதையும் எங்கள் எதிரிகள் அறிய வந்தபோது, நாங்கள் எல்லோரும் அவரவர் வேலையைச் செய்ய மதிலுக்குத் திரும்பினோம்.
16அந்நாள்முதல், என் பணியாளர்களில் பாதிப்பேர் வேலை செய்தனர். மற்றப் பாதிப்பேர் ஈட்டி கேடயம், வில், மார்புக்கவசம் இவைகளை அணிந்துகொண்டு நின்றனர். மக்கள் தலைவர்கள் யூதா வீட்டார் அனைவரையும் மேற்பார்வை செய்தனர்.
17மதில் கட்டுவோரும், சுமை சுமப்பவரும் ஒரு கையால் வேலை செய்தனர்; மறு கையிலோ ஆயுதம் தாங்கியிருந்தனர்.
18கட்டுவோர் ஒவ்வொருவரும் தம் வாளை இடையில் கட்டிக்கொண்டு வேலை செய்தனர். எக்காளம் ஊதுபவன் என் அருகிலேயே இருந்தான்.
19பிறகு நான் தலைவர்களையும், அலுவலர்களையும் ஏனைய மக்களையும் நோக்கிக் கூறியது: “வேலை மிகுந்துள்ளது; பரந்துள்ளது; நாமோ மதில்நெடுகத் தனித்தனியே சிதறி நிற்கின்றோம்.
20எந்த இடத்திலிருந்து எக்காள முழக்கம் கேட்குமோ, அந்த இடத்திற்கு எங்களிடம் ஒன்று கூடி வாருங்கள். நம் கடவுள் நமக்காகப் போர் புரிவார்”.
21இவ்வாறு நாங்கள் வேலை செய்துவந்தோம். எங்களுள் பாதிப்பேர் அதிகாலைமுதல் விண்மீன்கள் தோன்றும்வரை ஆயுதம் தாங்கியிருந்தனர்.
22அப்பொழுது மக்களைப் பார்த்து நான் கூறியது: “ஒவ்வொருவரும் தம் வேலைக்காரரோடு இரவை எருசலேமில் கழிக்கட்டும். இவ்வாறு அவர்கள் நமக்காக இரவில் காவலும் பகலில் வேலையும் செய்வர்”.
23நான், என் சகோதரர், என் ஊழியர், என் மெய்க்காவலர் யாருமே எம் உடைகளைக் களையவேயில்லை. ஒவ்வொருவரும் வலக்கையில்* ஆயுதம் தாங்கியிருந்தோம்.

4:23 ‘தண்ணீர்’ எனவும் பொருள்படும்.