எஸ்ரா முன்னுரை


‘எஸ்ரா’ என்னும் இந்நூல் ‘குறிப்பேட்டின்’ தொடர்ச்சியாகும். கி.மு. 538இல் பாரசீக மன்னர் சைரசு பாபிலோனியாவைக் கைப்பற்றினார். அதே ஆண்டில் அவர் இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலை அளித்து யூதாவுக்குத் திரும்பிச் செல்ல அனுமதித்தார். செருபாபேலின் தலைமையில் இஸ்ரயேல் மக்களுள் ஒரு பகுதியினர் முதலில் திரும்பி வந்தனர். திரும்பிவந்த இஸ்ரயேலர் எருசலேமில் அழிந்திருந்த கோவிலைத் திரும்பவும், 515இல் கட்டியெழுப்பிப் புனிதப்படுத்தினர்; மீண்டும் அங்கு வழிபாடுகள் நடத்தினர். சில ஆண்டுகளுக்குப் பின் எஸ்ராவின் தலைமையில் இஸ்ரயேல் மக்களுள் மற்றொரு பகுதியினர் திரும்பி வந்தனர்.

எஸ்ரா ஒரு குரு; திருச்சட்ட வல்லுநர். உடன்படிக்கையின் மக்களாகவும், இறைவனின் புனித மக்களாகவும் தேர்ந்துகொள்ளப்பட்ட இஸ்ரயேல் மக்களின் சிறப்பு நிலையைக் காக்குமாறு அவர்களின் மறைவாழ்விலும், சமூக வாழ்விலும் மறுமலர்ச்சி ஏற்படுத்தினார். மேலும் அவர் ‘இறையாட்சி’ இஸ்ரயேல் மக்களிடையே நிலவுமாறு அரசியல், மறை ஆகியவற்றின் பொறுப்பைக் குருக்களிடமே ஒப்படைத்து, அவற்றிற்கான சட்டதிட்டங்களை வகுத்துத் தந்தார்.

இந்நூலின் பெரும் பகுதி எபிரேயத்திலும், சிறு பகுதி (4:8 -6:18, 7:12-16) அரமேயத்திலும் எழுதப்பட்டுள்ளன.

நூலின் பிரிவுகள்

  1. சிறையிருப்பினின்று திரும்பி வருதலின் முதல் பகுதி 1:1 - 2:70
  2. கோவில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு அர்ப்பணிக்கப்படல் 3:1 - 6:22
  3. சிறையிருப்பினின்று எஸ்ராவின் தலைமையில் திரும்பி வருதலின் இரண்டாம் பகுதி 7:1 - 10:44