கலப்புத் திருமணத்தை நிறுத்தத் திட்டம்

1இவ்வாறு, எஸ்ரா கடவுளின் இல்லத்தின்முன் விழுந்து மன்றாடி விண்ணப்பித்துக்கொண்டு இருந்தார். அப்பொழுது ஆண், பெண், குழந்தைகள் உள்பட இஸ்ரயேல் மக்களின் பெருங்கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டு கூக்குரலிட்டு அழுதனர்.
2அப்பொழுது ஏலாமியருள் ஒருவரான எகியேல் மகன் செக்கனியா எஸ்ராவை நோக்கி, “நாங்கள் கடவுளுக்கு எதிராக நேர்மையற்றவர்களாய் நடந்து கொண்டோம். ஏனெனில் இந்நாட்டின் மக்களான வேற்றினப் பெண்களை மணந்தோம். ஆயினும், இஸ்ரயேலுக்கு இன்னும் நம்பிக்கை உண்டு.
3ஆகவே, என் தலைவரின் அறிவுரைக்கும் கடவுளின் கட்டளைகளுக்கும் அஞ்சி நடப்போரின் விருப்பத்திற்கும் ஏற்ப, அப்பெண்கள் அனைவரையும் அவர்களின் பிள்ளைகளையும் அகற்றி விடுவோம் என்று நம் கடவுளோடு உடன்படிக்கை செய்வோம். திருச்சட்டத்திற்கு ஏற்ப இது செய்யப்படட்டும்.
4எழுந்திரும்! இது உம் கடமை. நாங்கள் உம்மோடு இருக்கின்றோம். இதை மனஉறுதியுடன் செய்யும்” என்றார்.
5“எஸ்ரா எழுந்து, குருக்களின் தலைவர்களையும், லேவியர்களையும், எல்லா இஸ்ரயேல் மக்களையும் இவ்வாறு வாக்குறுதி அளிக்கச் செய்தார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.
6பின்பு, எஸ்ரா கடவுளது இல்லத்தின் முகப்பினின்று எழுந்தார்; எலியாசிபின் மகனான யோகனானின் அறையினுள் சென்றார். அங்கே உணவு உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தார். ஏனெனில் அடிமைத்தனத்திலிருந்து திரும்பிவந்தவர்களின் நேர்மையின்மையின் பொருட்டுப் புலம்பி அழுது கொண்டிருந்தார்.
7அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த மக்கள் அனைவரும் எருசலேமில் கூடவேண்டுமென்றும்,
8அவர்களுள் எவராவது மூன்று நாள்களுக்குள் வராமல் இருந்தால், மக்கள் தலைவர்கள் பெரியோர் ஆகியோரின் அறிவரைப்படி, அவனுடைய உடைமைகள் பறிமுதல் செய்யப்படவேண்டும் என்றும் அடிமைத்தனத்திலிருந்து வந்தவர்களின் கூட்டத்திலிருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படவேண்டும் என்றும் யூதாவிலும் எருசலேமிலும் அறிவிக்கப்பட்டது.
9எனவே, யூதா, பென்யமின் குலத்தார் அனைவரும் எருசலேமில் மூன்று நாள்களுக்குள் அதாவது, ஒன்பதாம் மாதம், இருபதாம் நாளன்று ஒன்று கூட்டப்பட்டனர். மக்கள் அனைவரும் மேற்குறிப்பிட்டதன் காரணமாகவும், மழையின் காரணமாகவும் கடவுளது இல்லத்தின் வளாகத்தில் நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தனர்.
10குரு எஸ்ரா எழுந்து அவர்களைப் பார்த்துக் கூறியது: “நீங்கள் வேற்றினப் பெண்களை மணந்ததால் நேர்மையற்றவர்களாகி, இஸ்ரயேலின் பாவத்தைப் பெருகச் செய்துள்ளீர்கள்.
11எனவே, இப்பொழுது உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரின் திருமுன் மன்றாடுங்கள்; அவர் திருவுளப்படி நடங்கள்; இந்நாட்டில் வாழும் மக்களிடமிருந்தும், வேற்றினப் பெண்களிடமிருந்தும் விலகி இருங்கள்”.
12அப்பொழுது குழுமியிருந்த அனைவரும் உரத்த குரலில் கூறியது: “நீர் சொல்வதே சரி! உமது வார்த்தையின்படியே நாங்கள் செய்வோம்.
13ஆயினும் இதனை ஓரிரு நாள்களில் செய்ய இயலாது; ஏனெனில் மக்கள் மிகுதியாக உள்ளனர். இது மாரிக்காலமாக இருப்பதால், வெளியே நிற்க முடியவில்லை. மேலும், இக்காரியத்தில் எங்களுள் பாவம் செய்தோர் பலர்.
14எனவே, எல்லா மக்களின் சார்பில் தலைவர்கள் இதன் காரணமாக மூண்ட நம் கடவுளின் கோபக்கனல் நம்மைவிட்டு விலகும்வரை தங்கியிருக்கட்டும், நம் நகர்களில் வாழும் வேற்றினப் பெண்களை மணந்தவர்கள் அனைவரும் குறித்த காலத்தில் வரட்டும்; அவர்களோடு ஒவ்வொரு நகரத்தின் பெரியோர்களும், அதன் நீதிபதிகளும் வரட்டும்.”
15அசாவேலின் மகனான யோனத்தானும், திக்வாவின் மகன் யாகிசியாவுமே இதை எதிர்த்து நின்றனர். மெசுல்லாமும் லேவியரான சபத்தாயும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தனர்.
16அடிமைத்தனத்தலிருந்து திரும்பி வந்திருந்தோர் அவ்வாறே செய்தனர். குரு எஸ்ராவும் மக்கள் தலைவர்களும் அவர்களின் மூதாதையரின் வழிமரபின்படியும், ஒவ்வொருவரின் பெயர் வரிசைப்படியும், பத்தாம் மாதம் முதல் நாள் இதைப்பற்றி விசாரணை செய்ய அமர்ந்தனர்.
17முதல் மாதம் முதல் நாளிலே வேற்றினப் பெண்களை மணந்தவர்கள் அனைவரையும் விசாரித்து முடித்தனர்.

வேற்றினப் பெண்களை மணந்தோர்

18குருக்களின் மரபில் வேற்றினப் பெண்களை மணந்தவர்களாகக் கண்டு பிடிக்கப்பட்டவர்கள்: ஏசுவா வழிமரபில் யோசதாக்கின் மகனான ஏசுவா, அவர் சகோதரரின் வழிமரபில், மாசேயா, எலியேசர், யாரிபு, கெதலியா ஆகியோர்.
19அவர்கள் தம் மனைவியரை அனுப்பி விட வாக்களித்தனர்; தங்கள் குற்றநீக்கப் பலியாக ஒரு கிடாயைச் செலுத்தினர்.
20இம்மேயின் வழிமரபில், அனானி, செபதியா ஆகியோர்.
21ஆரிம் வழிமரபில் மாசேயா, எலியா, செமாயா, எகியேல், உசியா ஆகியோர்.
22பஸ்கூர் வழிமரபில் எலியேனாய், மாசேயா, இஸ்மயேல், நத்தனியேல், யோசபாது, எலாசா ஆகியோர்.
23லேவியரில், யோசபாது, சிமயி, கெலித்தா என்ற கேலாயா, பெத்தகியா, யூதா, எலியேசர் ஆகியோர்.
24பாடகரில் எலியாகிபு; வாயிற்காவலரில், சல்லூம், தேலம், ஊரி, ஆகியோர்.
25மற்ற இஸ்ரயேலருள் பாரோகின் வழிமரபில் இரமியா, இசியா, மல்கியா, மிய்யாமின், எலியாசர், மல்கியா, பெனாயா ஆகியோர்.
26ஏலாம் வழிமரபில், மத்தானியா, செக்கரியா, எகியேல், அப்தி, ஏரேமோத்து, எலியா ஆகியோர்.
27சத்தூ வழிமரபில், எலியேனாய், எலியாகிபு, மத்தனியா, எலிமோது, சாபாது, அசிசா ஆகியோர்.
28பேபாய் வழிமரபில் யோகனான், அனனியா, சபாய், அத்லாய் ஆகியோர்.
29பானி வழிமரபில், மெசுல்லாம், மல்லூக்கு, அதாயா, யாசூபு, செயால், எரேமேத்து ஆகியோர்.
30பாகாத்மோவாபு வழிமரபில், அத்னா, கெலால், பெனாயா, மாசேயா, மத்தனியா, பெசலேல், பின்னூய், மனாசே ஆகியோர்.
31ஆரிம் வழிமரபில், எலியேசர், இசிய்யா, மல்கியா, செமாயா, சிமியோன்,
32பென்யமின், மல்லூக்கு, செமரியா ஆகியோர்.
33ஆசூம் வழிமரபில், மத்தனாய், மத்தாத்தா, சாபது, எலிப்பலேற்று, எரேமாய், மனாசே, சிமயி ஆகியோர்.
34பானி வழிமரபில், மாகதாய், அம்ராம், ஊவேல்,
35பெனாயா, பேதயா, கெலூகி,
36வானியா, மெரேமோத்து, எலியாசிபு,
37மத்தனியா, மத்தனாய், யகசு ஆகியோர்.
38பின்னூய் வழிமரபில், சிமயி,
39செலேமியா, நாத்தான், அதாயா,
40மாக்னதபாய், சசாய், சாராய்,
41அசரியேல், செலேமியா, செமரியா,
42சல்லூம், அமரியா, யோசேப்பு ஆகியோர்.
43நெபோ வழிமரபில், எயியேல், மத்தித்தியா, சாபது, செபினா, யாதாய், யோவேல், பெனாயா ஆகியோர்.
44வேற்றினப் பெண்களை மணந்திருந்த இவர்கள் அனைவரும் இப்பெண்களையும் அவர்களிடமிருந்து பிறந்த பிள்ளைகளையும் விலக்கிவிட்டனர்.