சேபா நாட்டு அரசியின் வருகை
(1 அர 10:1-13)
1சேபாவின் அரசி சாலமோனின் புகழைப்பற்றிக் கேள்விப்பட்டு, கடினமான வினாக்களால் அவரைச் சோதிக்க எருசலேம் வந்தார். பெரும் பரிவராத்தோடும், நறுமணப் பொருள்கள், மிகுதியான பொன், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றைச் சுமந்த ஒட்டகங்களோடும் அவர் வந்து சாலமோனைக் கண்டு, தம் மனத்திலிருந்த எல்லாவற்றையும் அவரிடம் கூறினார்.
2சாலமோன் அவருடைய எல்லா வினாக்களுக்கும் விடையளித்தார்; அவர் அவருக்கு விடுவிக்க இயலாத புதிர் ஒன்றுமில்லை.
3சேபாவின் அரசி சாலமோனின் ஞானத்தையும் அவர் கட்டியிருந்த அரண்மனையையும் கண்டார்.
4அத்துடன், அவரது பந்தி உணவுகளையும், அவருடைய அலுவலர்களின் இருக்கைகளையும், அவர்களது பணியின் ஒழுங்குமுறையையும், அவர்களுடைய சீருடைகளையும், அவருடைய பானம் பரிமாறுவோர், அவர்களுடைய சீருடைகள், மற்றும் ஆண்டவர் இல்லத்தில் அவர் செலுத்திய எரிபலிகள் ஆகியவற்றையும் கண்டபோது அவர் பேச்சற்றுப் போனார்.
5அவர் அரசரை நோக்கி, “உமது செயல்பற்றியும் உமது ஞானம் பற்றியும் எனது நாட்டில் நான் கேள்விப்பட்டது உண்மையே!
6நான் இங்கு வந்து அவற்றை நேரில் என் கண்களால் காணும்வரை, அவர்கள் சொன்னதை நான் நம்பவில்லை; உம் மிகுந்த ஞானம்பற்றி, அவர்கள் பாதிகூட எனக்குக் கூறவில்லை என உணர்கிறேன். உண்மையில் நான் கேள்விப்பட்டதை விஞ்சிவிட்டீர்!
7உம் மனைவியர் பேறுபெற்றோர்! எப்பொழுதும் உம் முன் நின்று உமது ஞானத்தைக் கேட்கிற உம் அலுவலரும் பேறுபெற்றோர்!
8உம்மீது பரிவுகொண்டு உம்மைத் தம் அரியணையில் ஏற்றி, தமக்காக உம்மை ஓர் அரசராக்கிய உம் கடவுளாம் ஆண்டவர் போற்றி! போற்றி! இஸ்ரயேல் மக்களை என்றென்றும் நிலைநிறுத்த உம் கடவுள் அவர்கள்மேல் கொண்டிருக்கும் அன்பினால், நீர் அவர்களுக்கு நீதியும் நியாயமும் வழங்க உம்மை அரசராக ஏற்படுத்தியுள்ளார்” என்று கூறினார்.
9பின்பு, அவர் அரசரிடம் நூற்றிருபது தாலந்து பொன், மிகுதியான நறுமணப் பொருள்கள், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை அளித்தார். சேபாவின் அரசி அரசர் சாலமோனுக்கு அளித்த நறுமணப் பொருள்களைப் போன்று பிறகு என்றுமே அவருக்குக் கிடைக்கவில்லை.
10ஓபீரிலிருந்து பொன்னைக் கொண்டு வந்திருந்த ஈராமின் பணியாளரும் சாலமேனின் பணியாளரும் நறுமண மரங்களையும் விலையுயர்ந்த கற்களையும் கொண்டு வந்தனர்.
11அரசர் அந்த நறுமண மரங்களால் ஆண்டவர் இல்லத்திற்கும் அரச அரண்மனைக்கும் தேவையான படிக்கட்டுகளையும், பாடகர்களுக்கு சுரமண்டலம், தம்புரு ஆகிய இசைக்கருவிகளையும் செய்தார். யூதா நாட்டில் அத்தகையவை அதற்குமுன் இருந்ததில்லை.
12அரசர் சாலமோன் சேபாவின் அரசி விரும்பிக் கேட்டவை எல்லாவற்றையும் அவர் அரசருக்குக் கொண்டு வந்ததைவிட, மிகுதியாகவே அளித்தார். பின்பு, அவர் தம் அலுவலருடன் தமது நாட்டுக்குத் திரும்பிச் சென்றார்.
சாலமோனின் செல்வச் சிறப்பு
(1 அர 10:14-25)
13சாலமோனுக்கு ஆண்டுதோறும் வந்த பொன்னின் நிறை இருபத்து ஆறாயிரத்து, அறுநூற்று நாற்பது கிலோகிராம்.*
14இத்துடன், வியாபாரிகளும் வணிகர்களும் கொண்டு வந்ததைத் தவிர, அரபு நாட்டு அரசர்கள் அனைவரும் உள் நாட்டின் ஆளுநர்களும் சாலமோனுக்குப் பொன்னும் வெள்ளியும் கொண்டுவந்தனர்.
15சாலமோன் அரசர் பொன் தகட்டால் இருநூறு பெரிய கேடயங்களைச் செய்தார்; ஒவ்வொரு கேடயத்திற்கும் ஏழு கிலோகிராம்* பொன் பயன்படுத்தப்பட்டது.
16அதே போன்று அவர் முந்நூறு சிறிய கேடயங்களைப் பொன் தகட்டால் செய்தார்; ஒவ்வொரு கேடயத்திற்கும் மூன்றரை கிலோ கிராம்* பொன் பயன்படுத்தப்பட்டது. அரசர் இவற்றை “லெபனோனின் வனம்” என்ற அரச மாளிகையில் வைத்தார்.
17பின்பு, அரசர் தந்தத்தால் பெரியதோர் அரியணை செய்து, அதனைப் பசும் பொன்னால் மூடினார்.
18அந்த அரியணைக்குப் பொன்னாலான ஆறுபடிகளும், பொன்னாலான ஒரு கால்மணையும் மற்றும் இருக்கையின் இருமருங்கிலும் கைத்தாங்கிகளும் அக்கைத்தாங்கிகளோடு இணைந்த இருசிங்கங்களும் இருந்தன.
19அந்த ஆறுபடிகளின் இருமருங்கிலுமாகப் பன்னிரு சிங்கங்கள் நின்றன; இது போன்று வேறு எந்த அரசிலும் செய்யப்படவில்லை.
20அரசர் சாலமோனின் பானபாத்திரங்கள் அனைத்தும் பொன்னாலானவை; “லெபனோன் வனத்தில்” இருந்த எல்லாக் கலன்களும் பசும் பொன்னால் ஆனவை. சாலமோனின் காலத்தில் வெள்ளிக்கு எத்தகைய மதிப்பும் இல்லை.
21அரசரின் கப்பல்கள் ஈராமின் பணியாளருடன் தர்சீசுக்குச் சென்று வரும்; மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தர்சீசிலிருந்து கப்பல்கள் பொன், வெள்ளி, தந்தம், குரங்கு, மயில் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வந்தன.
22செல்வத்திலும் ஞானத்திலும் அரசர் சாலமோன் உலகின் மற்ற மன்னர்களைவிடச் சிறந்து விளங்கினார்.
23கடவுள் சாலமோனின் அறிவுக்கு அருளிய ஞானத்தை நேரில் கேட்க உலகின் எல்லா மன்னர்களும் அவரை நாடி வந்தனர்.
24அவர்கள் ஆண்டுதோறும் வெள்ளியாலும் பொன்னாலுமான பொருள்கள், பட்டாடைகள், படைக்கலன்கள், நறுமணப் பொருள்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொண்டு வந்தனர்.
25சாலமோன் குதிரைகளுக்கும் தேர்களுக்குமாக நாலாயிரம் கொட்டில்களையும், பன்னீராயிரம் குதிரை வீரர்களையும் கொண்டிருந்தார்; தேர்களைத் தேர்ப்படை நகர்களிலும் தம்முடன் எருசலேமிலும் நிறுத்தி வைத்திருந்தார்.
26அவர் பேராறு* முதல் பெலிஸ்தியர் நாடு வரையிலும், எகிப்திய எல்லைமட்டும் இருந்த எல்லா மன்னர்கள்மேலும் அதிகாரம்செலுத்தினார்.
27எருசலேமில் வெள்ளி கற்களைப் போன்றும், கேதுரு மரங்கள் பள்ளத்தாக்கின் அத்தி மரம் போன்றும் ஏராளமாகக் கிடைக்கும்படி செய்தார்.
28அவர்கள் எகிப்திலிருந்தும், மற்ற எல்லா நாடுகளிலிருந்தும் சாலமோனுக்குக் குதிரைகளைக் கொண்டு வந்தனர்.
சாலமோனின் இறப்பு
(1 அர 11:41-43)
29சாலமோனின் பிற செயல்கள், தொடக்கமுதல் இறுதிவரை, இறைவாக்கினர் நாத்தானின் குறிப்பேட்டிலும், சீலோவியராகிய அகியாவின் இறைவாக்கிலும், நெபாற்றின் மகன் எரொபவாம் பற்றித் திருக்காட்சியாளர் இத்தோ கண்டு எழுதிய காட்சிகளிலும் எழுதப்பட்டுள்ளன அல்லவா?
30சாலமோன் இஸ்ரயேல் முழுமைக்கும் அரசராக எருசலேமில் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
31பின்பு, சாலமோன் தம் மூதாதையருடன் துயில்கொண்டார். அவரை அவர் தந்தை தாவீதின் நகரில் அடக்கம் செய்தனர். அவருக்குப்பின் அவர் மகன் ரெகபெயாம் ஆட்சி செய்தான்.
9:1-9 மத் 12:42; லூக் 11:31.