எசேக்கியாவின் சீர்திருத்தங்கள்

1இவை யாவும் முடிந்தபின், அங்கிருந்த இஸ்ரயேலர் எல்லாரும் யூதா நகர்களுக்குச் சென்றனர்; அங்கிருந்த சிலைத்தூண்களைத் தகர்த்து, அசேராக் கம்பங்களை வெட்டி வீழ்த்தினர். யூதா, பென்யமின், எப்ராயிம், மனாசே நாடுகளில் இருந்த தொழுகை மேடுகளையும் பலிபீடங்களையும் முற்றிலுமாக உடைத்தெறிந்தனர். பின்னர், இஸ்ரயேலர் அனைவரும் தங்கள் நகர்களில் தங்களுக்குரிய இடங்களுக்குத் திரும்பினர்.
2அடுத்து, எசேக்கியா குருக்களையும் லேவியரையும் அவரவர் பிரிவின்படியும், பலியின்படியும் பிரித்து, எரிபலி, நல்லுறவுப்பலி செலுத்தவும், ஆண்டவரது கூடார வாயிலில் பணி புரியவும் அவருக்கு நன்றிகூறிப் புகழவும் அந்த குருக்கள், லேவியர் குழுக்களை நியமித்தார்.
3ஆண்டவரின் திருச்சட்டத்தில் எழுதியுள்ளதற்கேற்ப, காலையும் மாலையும், ஓய்வு நாள், அமாவாசையிலும் மற்றும் குறிப்பிட்ட சில திருநாள்களிலும் செலுத்த வேண்டிய எரிபலிக்கு அரசர் தமது உடைமையின் ஒரு பகுதியை அளித்திருந்தார்.
4ஆண்டவரின் திருச்சட்டத்தில் குருக்களும் லேவியரும் முழு ஈடுபாடு கொள்ளும்படி அவர்களுக்குச் சேரவேண்டிய பங்கை அளிக்குமாறு எருசலேமில் இருந்த மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்.
5இக்கட்டளை பரவியபோது, இஸ்ரயேலின் புதல்வர் தானியத்தின் முதற்பலன், புதிய திராட்சை இரசம், எண்ணெய், தேன் முதலியவற்றை மிகுதியாகவே கொண்டு வந்தனர்; அத்துடன் நிலத்தின் எல்லா விளைச்சலிலும் பத்திலொரு பங்கைத் தாராளமாகக் கொடுத்தனர்.
6மேலும், யூதாவின் நகர்களில் வாழ்ந்துவந்த இஸ்ரயேலரும் யூதாவினரும் தங்கள் ஆடுமாடுகளிலும், தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதப் பொருள்களிலும் பத்திலொரு பங்கைக் கொண்டுவந்து குவியல் குவியலாகச் சேர்த்தனர்.
7மூன்றாம் மாதத்தில் அவர்கள் இப்படிச் சேர்க்கத் தொடங்கி ஏழாம் மாதத்தில் முடித்துக் கொண்டனர்.
8எசேக்கியாவும் தலைவர்களும் நுழைந்து அக்குவியல்களைக் கண்டு ஆண்டவரைப் போற்றி அவர்தம் மக்களுக்கு ஆசி வழங்கினர்.
9அந்தக் குவியல்களைக்குறித்து எசேக்கியா குருக்களையும் லேவியரையும் வினவியபோது,
10சாதோக்கு வழிவந்த தலைமைக் குரு அசரியா அவரை நோக்கி, “ஆண்டவரின் இல்லத்திற்குப் படையல்களை, மக்கள் கொண்டுவரத் தொடங்கியது முதல் நாங்கள் நிறைவாக உண்டு வந்துள்ளோம். ஆயினும், எஞ்சியது மிகுதியாகவே உள்ளது. ஏனெனில், ஆண்டவர் தம் மக்களுக்கு ஆசி வழங்கியுள்ளார், எஞ்சியுள்ளவை இக்குவியல்கள்” என்று கூறினார்.
11அப்பொழுது எசேக்கியா ஆண்டவரின் இல்லத்தில் பண்டகசாலைகளை எழுப்புமாறு கட்டளையிட, அவ்வாறே எழுப்பப்பட்டன.
12முதற்பலன்களையும், பத்திலொரு பாகத்தையும், நேர்ச்சைப் பொருள்களையும் கவனத்துடன் அந்த அறைகளில் வைத்தனர். இவற்றையெல்லாம் கண்காணிக்கக் கொனானியா என்ற லேவியர் தலைவராகவும், அவர் சகோதரர் சிமயி துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.
13இவ்விருவருக்கும்கீழ் எகியேல், அசரியா, நாகாத்து, அசாவேல், எரிமோத்து, யோசபாத்து, எலியேல், இஸ்மகியா, மகாத்து, பெனாயா ஆகியோர் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டனர். அரசர் எசேக்கியாவும், ஆண்டவரின் இல்லத் தலைவர் அசரியாவும் கட்டளையிட்டவாறு இவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
14லேவியர் இம்னாவின் மகனும் கீழை வாயிற்காப்பவனுமான கோரே, ஆண்டவருக்கு அளிக்கப்பட்ட தன்னார்வக் காணிக்கைகளையும் படையல்களையும் பங்கிட அதிகாரம்பெற்று, கடவுளுக்குஅர்ப்பணிக்கப்பட்டவற்றிற்குப் பொறுப்பேற்றிருந்தான்.
15குருக்களின் நகர்களில் தங்கள் சகோதரர்களுக்கு, பெரியோர் சிறியோர் என்ற பாகுபாடின்றியும், பிரிவுகளின் முறைப்படியும், பொருள்களைப் பகிர்ந்து கொடுப்பதில் ஏதேன், மின்யமின், ஏசுவா, செமாயா, அமரியா, செக்கனியா ஆகியோர் மிகவும் நேர்மையான முறையில் அவருக்கு உதவி செய்தனர்.
16அவர்களின் தலைமுறை அட்டவணையில் எழுதப்பட்ட மூன்றும் அதற்கு மேற்பட்ட வயதினருமான ஆண்பிள்ளைகளைத் தவிர, அவரவர் தம் பிரிவின்படி, தங்கள் பணியின் காரணமான அன்றைய கடமையை நிறைவேற்ற ஆண்டவரின் இல்லத்திற்கு வருகிற ஒவ்வொருவனுக்கும் பங்குகள் கொடுக்கப்பட்டன.
17குருக்கள், அவர்களின் மூதாதையரின் குடும்பத்தின்படி பதிவு செய்யப்பட்டனர். இருபதும் அதற்கு மேற்பட்ட வயதினருமான லேவியர் அவர்களது பணியின்படியும் பிரிவின்படியும் பதிவு செய்யப்பட்டனர்.
18குருக்கள் தங்கள் எல்லாக் குழந்தைகள், மனைவியர், புதல்வர், புதல்வியர் ஆகிய அனைவருடனும் பதிவு செய்யப்பட்டனர். ஏனெனில், அவர்கள் தங்களையே தூய்மையாக வைத்துக்கொள்வதில் மிகவும் கவனமாக இருந்தனர்.
19தங்கள் நகர்களை அடுத்த வெளிநிலங்களிலோ வேறு நகர்களிலோ வாழ்ந்த ஆரோனின் புதல்வர்களான குருக்களுக்கு சேர வேண்டிய பங்குகளை அளிக்க ஆள்கள் நியமிக்கப்பட்டனர்; குருக்கள் குடும்பங்களில் எல்லா ஆண்களுக்கும், லேவியர்களின் தலைமுறை அட்டவணையில் பதிவு செய்த அனைவருக்கும் அவர்கள் பங்குகளை அளித்தனர்.
20எசேக்கியா யூதாவெங்கும் இவ்வாறு செய்தார். அவர் தம் கடவுளாம் ஆண்டவர் திருமுன், நல்லவராகவும் நேர்மையுடையவராகவும் உண்மையுடையவராகவும் ஒழுகினார்.
21அவர் கடவுள் இல்லத்திற்கான ஒவ்வொரு திருப்பணியையும் திருச்சட்டத்திற்கும் கட்டளைக்கும் ஏற்றவாறு செய்து ஆர்வமுடன் உழைத்து, தம் கடவுளை முழு இதயத்தோடு நாடினதால், அவர் அனைத்திலும் வெற்றி கண்டார்.

31:3 எண் 28:1-29:39. 31:4-5 எண் 18:12-13,21.