யோவாசு அரசன் ஆதல்
(2 அர 12:1-16)
1யோவாசு அரசரானபோது அவர் வயது ஏழு; அவர் எருசலேமில் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். பெயேர்செபாவைச் சார்ந்த சிபியா என்பவளே அவர் தாய்.
2குரு யோயாதாவின் வாழ்நாள் முழுவதும், யோவாசு ஆண்டவர் பார்வையில் நேரியன செய்தார்.
3யோயாதா அவருக்கு இரு பெண்களை மணமுடித்து வைத்தார். அவர்கள் வழியாக அவருக்குப் புதல்வர், புதல்வியர் பிறந்தனர்.
4பின்னர், ஆண்டவரின் இல்லத்தைப் புதுப்பிக்க யோவாசு விரும்பினார்.
5எனவே, அவர் குருக்களையும் லேவியரையும் ஒன்றுகூட்டி அவர்களிடம், “நீங்கள் யூதா நகர்களுக்கெல்லாம் சென்று உங்கள் கடவுளின் இல்லத்தை ஆண்டுதோறும் பழுதுபார்க்க இஸ்ரயேல் எங்கும் பணம் சேகரியுங்கள். இதனை விரைவாகச் செய்யுங்கள்” என்றார். ஆனால், லேவியர் இதை விரைவாகச் செய்யவில்லை.
6ஆகையால், அரசர் தலைமைக் குரு யோயாதாவை அழைத்து, “ஆண்டவரின் அடியாராகிய மோசே உடன்படிக்கைக் கூடாரத்திற்காக இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் வரிகொடுக்குமாறு பணித்தார். லேவியரோ அவ்வரியை யூதாவிலும் எருசலேமிலும் வசூலிக்காமல் இருப்பதை நீர் ஏன் கண்டிக்காமல் இருக்கறீர்?
7அந்தத் தீய பெண் அத்தலியாவும் அவளுடைய புதல்வர்களும் கடவுளின் இல்லத்தினுள் வன்முறையாய் நுழைந்து, ஆண்டவரின் இல்லத்துப் புனிதப் பொருள்களையெல்லாம் கொள்ளையிட்டு அவற்றைப் பாகால்களுக்காகப் பயன்படுத்தினர்” என்றார்.
8பின்னர், அரசரின் கட்டளைக்கேற்ப ஒரு பெட்டியைச் செய்து, அதை ஆண்டவரின் இல்லத்து வாயிலுக்கு வெளியே வைத்தனர்.
9“கடவுளின் அடியார் மோசே பாலைநிலத்தில் இஸ்ரயேலருக்குக் கட்டளையிட்ட வரிப்பணத்தை ஆண்டவருக்குக் கொண்டு வாருங்கள்” என்று யூதாவிலும் எருசலேமிலும் பறைசாற்றினர்.
10இதைக் கேட்டு எல்லாத் தலைவர்களும் மக்களும் மகிழ்ச்சியுற்று, தங்கள் வரிப்பணத்தைக் கொண்டு வந்து பெட்டியில் போடவே, பெட்டியும் நிறைந்தது.
11பெட்டியில் பணம் நிறைந்து விட்டதைக் கண்ட லேவியர், பெட்டியை அரசரின் அலுவலரிடம் எடுத்துச் சென்றனர். அரசரின் செயலரும் தலைமைக் குருவின் அலுவலரும் பெட்டியிலிருக்கும் பணத்தைக் கொட்டி எடுத்தபின் அதைத் திரும்ப அதன் இடத்திலேயே வைத்தனர். இவ்வாறு, அவர்கள் நாள்தோறும் செய்து, ஏராளமாகப் பணம் சேர்த்தனர்.
12அதை அரசரும் யோயாதாவும் ஆண்டவரின் இல்லப்பணியைக் கவனித்து வந்த வேலையாள்களிடம் கொடுத்தனர். அவர்கள் ஆண்டவரின் இல்லத்தைப் புதுப்பிக்கக் கொத்தர்களையும் தச்சர்களையும் கூலிக்கு அமர்த்தினர்; ஆண்டவரின் இல்லத்தை வலுப்படுத்துமாறு இரும்பு, வெண்கல வேலையில் தேர்ச்சி பெற்றோரையும் வேலைக்கென அமர்த்தினர்.
13வேலையாள்களின் பொறுப்பில் கடவுளின் இல்லத்தைப் புதுப்பிக்கும் பணி விரைவாக முன்னேறியது; அவர்கள் முன்னைய நிலைக்கு அதனைக் கொணர்ந்து இன்னும் வலுப்படுத்தினர்.
14வேலைகள் எல்லாம் முடிந்தபின், எஞ்சியுள்ள பணத்தை அரசருக்கும் யோயாதாவுக்கும் முன்பாகக் கொண்டுவந்தனர்; அவர்கள் அதைக் கொண்டு ஆண்டவரின் இல்லப்பணிக்கெனப் பாத்திரங்களையும், திருப்பணி, எரிபலி ஆகியவற்றுக்கான பாத்திரங்களையும் கிண்ணங்களையும், மற்றும் பொன், வெள்ளிப் பாத்திரங்களையும் செய்தனர். யோயாதாவின் வாழ்நாள் முழுவதும் ஆண்டவரின் இல்லத்தில் எரிபலிகள் தொடர்ந்து செலுத்தப்பட்டன.
15யோயாதா நிறை ஆயுள் கண்டு முதுமை எய்தி இறந்தார். அவர் இறந்தபோது அவருக்கு வயது நூற்றுமுப்பது.
16அவர் இஸ்ரயேலருக்கும் கடவுளுக்கும் அவரது இல்லத்துக்கும் நற்பணி செய்திருந்ததனால், அவரைத் தாவீதின் நகரில் அரசர்களுக்கு அருகே அடக்கம் செய்தனர்.
17ஆனால், யோயாதா இறந்தபின், அரசர் தம்மைப் பணிந்து நின்ற தலைவர்களின் சொற்களுக்கு இணங்கினார்.
18அதனால், அவர்கள் தங்கள் முன்னோர்களின் கடவுளான ஆண்டவரின் இல்லத்தைப் புறக்கணித்து, அசேராக் கம்பங்களையும் சிலைகளையும் வழிப்பட்டனர். அவர்கள் செய்த இப்பாவத்தின் பொருட்டு யூதாவின் மேலும் எருசலேமின் மேலும் இறைவன் கடுங்கோபம் கொண்டார்.
19அவர்கள் தம்மிடம் மீண்டும் வருவதற்கு ஆண்டவர் அவர்களிடம் இறைவாக்கினர்களை அனுப்பினார். அவர்களும் மக்களைக் கண்டித்தனர். ஆனால், அவர்கள் செவிகொடுக்கவில்லை.
20அப்போது கடவுளின் ஆவி குரு யோயாதாவின் மகன் செக்கரியாவின்மேல் இறங்கியது; அவர் மக்கள்முன் நின்று அவர்களை நோக்கி: “இதோ, கடவுள் கூறுகிறார்: ஆண்டவரின் கட்டளைகளை மீறுவதேன்? அதனால் நீங்கள் வாழ்வில் முன்னேற மாட்டீர்களே! ஆண்டவரை நீங்கள் புறக்கணித்ததால், அவரும் உங்களைப் புறக்கணித்துள்ளார்” என்று கூறினார்.
21அவர்கள் அவருக்கு எதிராக சதி செய்து, அரசரின் ஆணைக்கேற்ப ஆண்டவரின் இல்லத்து மண்டபத்தில் அவரைக் கல்லால் எறிந்து கொன்றனர்.
22அவர் தந்தை யோயாதா காட்டிய பேரன்பை மறந்து, அரசர் யோவாசு செக்கரியாவைக் கொல்லச் செய்தார். அவர் இறக்கும்போது, “ஆண்டவர் இதைக் கண்டு பழிவாங்குவாராக!” என்றார்.
யோவாசின் இறப்பு
23அடுத்த ஆண்டு, சிரியாப் படையினர் அவருக்கு எதிராக வந்து, யூதாவிலும் எருசலேமிலும் புகுந்து மக்களின் எல்லாத் தலைவர்களையும் கொன்றழித்தனர். கொள்ளைப் பொருள்கள் அனைத்தையும் தமஸ்கு மன்னனிடம் அனுப்பி வைத்தனர்.
24சிரியர் மிகச் சிறு படையுடன்தான் வந்தனர்; இருப்பினும், தங்கள் முன்னோரின் கடவுளான ஆண்டவரை இஸ்ரயேலர் புறக்கணித்ததால், ஆண்டவர் அவர்களது பெரும் படையைச் சிரியரின் கையில் ஒப்புவித்தார். அவர்கள் யோவாசைத் தண்டித்தனர்.
25கடும் காயமுற்ற நிலையில் யோவாசைச் சிரியர் விட்டுச் சென்றனர்; அவருடைய அலுவலர்களோ அவருக்கெதிராகச் சதி செய்து, குரு யோயாதாவின் மகனின் இரத்தப்பழியின் பொருட்டு அவரது படுக்கையிலேயே அவரைக் கொன்றனர். தாவீதின் நகரத்தில் அவர் சடலத்தை அடக்கம் செய்தனர்; ஆனால், அரசர்களின் கல்லறையில் அவரை அடக்கம் செய்யவில்லை.
26அவருக்கெதிராகச் சதி செய்தவர் அம்மோனியனான சிமயாத்தின் மகன் சாபாத்தும், மோவாபியனான சிம்ரித்தின் மகன் யோசபாத்தும் ஆவர்.
27அவர் புதல்வர் பற்றியும் அவருக்கெதிராக பல இறைவாக்குகள் பற்றியும், கடவுளின் இல்லத்தை அவர் வலுப்படுத்தியது குறித்தும் அரசர்களின் ஆய்வேட்டில் எழுதப்பட்டுள்ளன; அவருக்குப்பின் அவர் மகன் அமட்சியா அரசனானான்.
24:6 விப 30:11-16. 24:20-21 மத் 22:35; லூக் 11:51.