யோசபாத்து அரசன் ஆதல்

1ஆசாவின் மகன் யோசபாத்து அவனுக்குப்பின் ஆட்சியேற்று, இஸ்ரயேலுக்கு எதிராகத் தம்மை வலுப்படுத்திக் கொண்டார்.
2யூதாவின் அனைத்து அரண்சூழ் நகர்களில் போர்ப்படைகளையும், பிற பகுதிகளிலும் தம் தந்தை ஆசா கைப்பற்றியிருந்த எப்ராயிம் நகர்களிலும் காவற்படைகளையும் நிறுத்தி வைத்தார்.
3ஆண்டவர் யோசபாத்தோடு இருந்தார். ஏனெனில், அவர் பாகால்களை நம்பாமல் தம் மூதாதை தாவீதின் வழியில் நடந்தார்.
4மேலும், அவர் இஸ்ரயேலின் செயல்களைப் பின்பற்றாமல், தம் மூதாதையின் கடவுளையே நாடி, அவர் கட்டளைகளின் படியே நடந்து வந்தார்.
5ஆதலால், ஆண்டவர் அவரது ஆட்சியை நிலைநிறுத்தினார். யூதா மக்கள் அனைவரும் யோசபாத்துக்குக் காணிக்கைகள் கொண்டு வந்தனர்; அவர் செல்வமும் புகழும் பெருகியது.
6மேலும், ஆண்டவரது வழியில் அவர் உள்ளம் உறுதியடைந்து, யூதாவிலிருந்த தொழுகை மேடுகளையும் அசேராக் கம்பங்களையும் அகற்றினார்.
7அவர் தமது ஆட்சியின் மூன்றாம் ஆண்டில், யூதா நகர்களில் போதிக்கும் பொருட்டு தலைவர்களான பென்கயில், ஒபதியா, செக்கரியா, நெத்தனியேல், மீக்காயா ஆகியோரையும்,
8லேவியரான செமாயா, நெத்தனியா, செபதியா, அசாவேல், செமிராமோத், யோனத்தான், அதோனியா, தோபியா, தோபு-அதோனியா ஆகியோரையும் குருக்கள் எலிசாமா, யோராம் ஆகியோரையும் அனுப்பி வைத்தார்.
9இவர்கள், ஆண்டவரின் திருச்சட்ட நூலுடன் சென்று யூதாவில் போதித்தனர்; யூதாவின் எல்லா நகர்களிலும் சுற்றி அலைந்து மக்களுக்குப் போதித்தனர்.

யோசபாத்தின் சிறப்பு

10யூதாவைச் சூழ்ந்த நாடுகள் எல்லாம், ஆண்டவர்மீது அச்சம் கொண்டதால், அவை யோசபாத்தை எதிர்த்துப் போரிடவில்லை.
11பெலிஸ்தியர் யோசபாத்துக்கு அன்பளிப்பும் கப்பமுமாக வெள்ளிப் பணமும் கொடுத்தனர். அரேபியரும் அவருக்கு ஏழாயிரத்து எழுநூறு ஆட்டுக்கிடாய்களையும் ஏழாயிரத்து எழுநூறு வெள்ளாட்டுக் கிடாய்களையும் அளித்தனர்.
12யோசபாத்து மென்மேலும் வலிமையடைந்து வந்தார்; யூதாவில் கோட்டைகளையும் சேமிப்பு நகர்களையும் கட்டினார்.
13யூதாவின் நகர்களில் சேமிப்பு மிகுதியாய் இருந்தது; வலிமைமிகு போர்வீரர் எருசலேமில் இருந்தனர்.
14தங்கள் மூதாதையரின் குடும்பத்தின்படி அவர்களது எண்ணிக்கை: யூதாவில் இருந்த ஆயிரத்தவர் தலைவர்கள், வலிமைமிகு போர்வீரர் மூன்று இலட்சம் பேருக்குத் தலைவன் அத்னா;
15அவனை அடுத்து, வலிமைமிகு போர்வீரர் இரண்டு இலட்சத்து எண்பதினாயிரம் பேருக்குத் தலைவன் யோகனான்.
16அவனை அடுத்து, ஆண்டவருக்குத் தன்னையே அர்ப்பணித்திருந்தவனும் சிக்ரியின் மகனுமான அமசியா; இவனுக்குக்கீழ் வலிமைமிகு போர்வீரர் இரண்டு இலட்சம் பேர் இருந்தனர்.
17பென்யமினிலிருந்து வலிமைமிகு போர் வீரர் எலியாதா. இவனுக்குக்கீழ் வில்லும் பரிசையும் தாங்கிய வீரர் இரண்டு இலட்சம் பேர் இருந்தனர்.
18அவனை அடுத்து, யோசபாத்து, இவனுக்குக்கீழ் போர்க்கோலம் பூண்ட இலட்சத்து எண்பதினாயிரம் பேர் இருந்தனர்.
19இவர்கள் அரசருக்குப் பாதுகாப்புப் பணி புரிந்து வந்தனர். மேலும், யூதாவின் அரண்சூழ் நகர்களில் அரசரால் நியமிக்கப்பட்ட காவலர்கள் இருந்தனர்.