யூதாவின் அரசன் அபியா
(1 அர 15:1-8)

1அரசன் எரொபவாம் ஆட்சியேற்ற பதினெட்டாம் ஆண்டில் அபியா யூதாவுக்கு அரசன் ஆனான்.
2எருசலேமில் அவன் மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். கிபயாவைச் சேர்ந்த உரியேல் மகள் மீக்காயா என்பவளே அவன் தாய். அபியாவுக்கும் எரொபவாமுக்கும் இடையே போர் நடந்து வந்தது.
3அபியா தேர்ந்தெடுக்கப் பெற்ற நாற்பதாயிரம் வலிமைமிக்க வீரர்களுடன் போருக்குச் சென்றான். அதுபோன்றே எரொபவாம் தேர்ந்தெடுக்கப் பெற்ற வலிமைமிகு எண்பதாயிரம் வீரர்களைச் சேர்த்துக் கொண்டு போருக்கு அணிவகுத்து நின்றான்.
4அபியா, எப்ராயிம் மலைநாட்டின் செமாரயிம் என்ற குன்றின்மேல் நின்று கொண்டு, “எரொபவாம்! எல்லா இஸ்ரயேல் மக்களே! எனக்குச் செவி கொடுங்கள்!
5இஸ்ரேயலின் கடவுளாம் ஆண்டவரே, இஸ்ரயேல் அரசைத் தாவீதுக்கும் அவர் மைந்தர்களுக்கும், முறிவுறாத உடன் படிக்கையாக, என்றென்றைக்கும் அளித்ததை நீங்கள் அறியீர்களோ?
6இருப்பினும், நெபாற்றின் மகனும் தாவீதின் மகன் சாலமோனின் அலுவலனுமான எரொபவாம் தன் தலைவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்;
7அவன் வீணரான கயவரைச் சேர்த்துத் தன்னை வலிமைப்படுத்திக்கொண்டு, சாலமோன் மகன் ரெகபெயாமை வென்றான். அப்பொழுது ரெகபெயாம் மன வலிமையற்ற இளைஞனாய் இருந்தான். எனவே, அவனால் அவர்களை எதிர்த்து நிற்க முடியவில்லை.
8இப்பொழுது, தாவீதின் வழிமரபிற்கு ஆண்டவர் அளித்த அரசை எதிர்த்து நிற்க நீங்கள் எண்ணுகிறீர்கள்; நீங்கள் பெருந்திரளாக இருக்கிறீர்கள்; அத்துடன் எரொபவாம் உங்களுக்குத் தெய்வங்களாகச் செய்த பொற்கன்றுகுட்டிகளையும் நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.
9மேலும், நீங்கள் ஆரோனின் வழிவந்த ஆண்டவரின் குருக்களையும் லேவியரையும் புறக்கணித்துவிட்டு, மற்ற நாட்டு மக்களைப் போல் உங்களுக்குக் குருக்களை ஏற்படுத்திக் கொண்டீர்கள்; ஓர் இளம் காளையோடும், ஏழு ஆட்டுக்கிடாய்களோடும் திருநிலை பெற வரும் எவனும் தெய்வமல்லாதவற்றுக்குக் குரு ஆகிவிடுகிறான்!
10ஆனால், எங்களைப் பொறுத்த வரை, ஆண்டவரே எங்கள் கடவுள்! அவரை நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஆரோன் வழிவந்த குருக்களே ஆண்டவருக்குப் பணிபுரிவர்! லேவியரோ அப்பணியில் துணைநிற்பர்.
11அவர்கள் நாள்தோறும், காலையிலும் மாலையிலும், ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தி, நறுமணத் தூபமிட்டு, தூய்மையான மேசைமேல் திருமுன்னிலை அப்பங்களை வைப்பர்; பொன் விளக்குத் தண்டின் அகல்கள் மாலைதோறும் ஏற்றப்படும்; இவ்வாறு, நாங்கள் எங்கள் கடவுளாம் ஆண்டவரின் ஒழுங்கு முறைகளை நிறைவேற்றுகிறோம்; நீங்களோ, அவரைப் புறக்கணித்துவிட்டீர்கள்.
12இதோ! கடவுளே எங்கள் தலைவராக எங்களோடு இருக்கிறார்; உங்களுக்கு எதிராகப் போரிட அவருடைய குருக்களே எக்காளங்களை ஊதிப் பேரொலி எழுப்புவார்கள்! ஆதலால், இஸ்ரயேல் மக்களே! உங்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவருக்கு எதிராகப் போரிடதீர்கள்; ஏனெனில், நீங்கள் வெற்றியடைய மாட்டீர்கள்” என்று கூறினான்.
13ஆனால், எரொபவாம் பதுங்கிச்செல்லும் ஒரு படையை அனுப்பி, யூதாவைப் பின்புறம் சுற்றி வளைக்கச் செய்தான்; அவனோடிருந்த படையோ யூதாவின் முன்னே நின்றது.
14யூதாவின் வீரர்கள் திரும்பிப் பார்த்தபோது, அவர்களை முன்னும் பின்னும் எதிர்க்கும் படைகளைக் கண்டனர். உடனே அவர்கள் ஆண்டவரை நோக்கி, அபயக் குரலிட, குருக்கள் எக்காளங்களை ஊதினர்.
15யூதாவின் வீரர்கள் போர் முழக்கமிட்டனர்; அப்படி முழக்கமிட்டபோது, கடவுள் அபியா, யூதா முன்பாக எரொபவாமையும் இஸ்ரயேலர் எல்லாரையும் முறியடித்தார்.
16இஸ்ரயேலர் யூதாவுக்குப் புறமுதுகு காட்டி ஓடினர். கடவுள் இஸ்ரயேல் மக்களை யூதாவிடம் கையளித்தார்.
17அப்பொழுது, அபியாவும் அவன் மக்களும் அவர்களைப் பெருமளவில் வெட்டி வீழ்த்தி, இஸ்ரயேலில் ஆற்றல்மிகு ஐந்து இலட்சம் வீரர்களைக் கொன்றனர்.
18அந்நேரத்தில், இஸ்ரயேலின் புதல்வர் சிறுமையுற, தங்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரை நம்பி வாழ்ந்த யூதாவின் புதல்வர் வலிமையுற்றனர்.
19பின்பு, அபியா எரொபவாமைத் துரத்திச்சென்று, பெத்தேலையும் அதன் சிற்றூர்களையும், எசானாவையும் அதன் சிற்றூர்களையும், எப்ரோனையும் அதன் சிற்றூர்களையும் அவனிடமிருந்து கைப்பற்றினான்.
20அபியாவின் வாழ்நாள் முழுவதும், எரொபவாம் வலிமையுறவில்லை. ஆண்டவர் அவனைத் தண்டிக்க, அவனும் இறந்தான்.
21பின்பு, அபியா மிகுந்த வலிமை அடைந்தான்; அவனுக்குப் பதினான்கு மனைவியரும், இருபத்திரண்டு புதல்வரும், பதினாறு புதல்வியரும் இருந்தனர்.
22அபியாவின் பிற செயல்கள் யாவும், அவன் வழிமுறைகளும் உரைகளும், இறைவாக்கினர் இத்தோ எழுதிய ஆய்வேட்டில் எழுதப்பட்டள்ளன.