படைத்தலைவர்களும் குலத்தலைவர்களும்

1இஸ்ரயேல் மக்களின் குடும்பத் தலைவர்கள், ஆயிரத்தவர் தலைவர்கள், நூற்றுவர் தலைவர்கள், மற்றும் அரச அலுவலர்கள் ஆகியோர் இவர்களே: ஆண்டின் ஒவ்வொருமாதமும் வெவ்வேறு பிரிவினர் மாறி மாறி அரசருக்கான பணியில் பங்கேற்றனர். அப்பிரிவுகள் ஒவ்வொன்றிலும் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
2முதல் மாதத்தில், முதல் படைப்பிரிவுக்குச் சப்தியேலின் மகன் யாசொபியாம் தலைவராய் இருந்தார். அவரது பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
3பெரேட்சு வழிவந்த அவர், முதல் மாதத்தில் எல்லாப் படைத் தலைவர்களுக்கும் தலைவராய் இருந்தார்.
4இரண்டாம் மாதத்தில் இரண்டாம் படைப்பிரிவுக்கு அகோகியரான தோதாய் தலைவராய் இருந்தார். மிக்லோத்து இவரின்கீழ் படைத்தலைவராய் இருந்தார். இவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
5மூன்றாம் மாதத்தில் மூன்றாம் படைப்பிரிவுக்கு குரு யோயாதாவின் மகன் பெனாயா தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
6இந்த பெனாயா முப்பதின்மருக்குள் ஆற்றல்மிக்கவரும், அவர்களுக்குத் தலைவருமாய் இருந்தவர். அவர் மகன் அம்மிசபாது அவர் பிரிவை மேற்பார்வை செய்து வந்தார்.
7நான்காம் மாதத்தில், நான்காம் படைப்பிரிவுக்கு யோவாபின் சகோதரராகிய அசாவேலும் அவருக்குப் பின் அவர் மகன் செபதியாவும் தலைவராய் இருந்தனர். அவர்களுக்குக்கீழ் இருபத்துநாலாயிரம் பேர் இருந்தனர்.
8ஐந்தாம் மாதத்தில் ஐந்தாம் படைப்பிரிவுக்கு இஸ்ராகியரான சங்கூத்து தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
9ஆறாம் மாதத்தில், ஆறாம் படைப்பிரிவுக்கு தெக்கோவாவியரான இக்கேசு மகன் ஈரா தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
10ஏழாம் மாதத்தில், ஏழாம் படைப்பிரிவுக்கு எப்ராயிம் குலத்துப் பெலோனியரான ஏலேசு தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
11எட்டாம் மாதத்தில், எட்டாம் படைப்பிரிவுக்கு சர்கியைச் சார்ந்த ஊசாயரான சிபக்காய் தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
12ஒன்பதாம் மாதத்தில், ஒன்பதாம் படைப்பிரிவுக்கு பென்யமின் குலத்து அனத்தோத்தியரான அபியேசர் தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
13பத்தாம் மாதத்தில், பத்தாம் படைப்பிரிவுக்கு சர்கியைச் சார்ந்த நெற்றோபாயரான மகராய் தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
14பதினொன்றாம் மாதத்தில், பதினொன்றாம் படைப்பிரிவுக்கு எப்ராயிம் குலத்து பிராத்தோனியரான பெனாயா தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
15பன்னிரண்டாம் மாதத்தில், பன்னிரண்டாம் படைப்பிரிவுக்கு ஒத்னியேல் வழிவந்த நெற்றோபாயரான கெல்தாய் தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.

இஸ்ரயேலில் குல நிர்வாகம்

16இஸ்ரயேலில் குலத் தலைவர்களாய் இருந்தவர்கள் வருமாறு: ரூபனியருக்குத் தலைவர் சிக்ரியின் மகன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காலின் மகன் செபற்றியா;
17லேவியருக்குக் கெமுயேல் மகன் அசபியா; ஆரோனியருக்குச் சாதோக்கு;
18யூதாவினர்க்குத் தாவீதின் சகோதரரில் ஒருவராகிய எலிகூ; இசக்கார் குலத்துக்கு மிக்கேல் மகனான ஓம்ரி;
19செபுலோனியருக்கு ஒபதியாவின் மகன் இஸ்மாயா; நப்தலி குலத்துக்கு அஸ்ரியேல் மகன் எரிமோத்து;
20எப்ராயிம் மக்களுக்கு அசரியாவின் மகன் ஓசேயா; மனோசேயின் பாதிகுலத்துக்கு பெதாயாவின் மகன் யோவேல்;
21கிலயாதிலுள்ள மனாசேயின் பாதிக் குலத்துக்குச் செக்கரியாவின் மகன் இத்தோ, பென்யமினியருக்கு அப்னேரின் மகன் யாகசியேல்;
22தாண் குலத்துக்கு எரொகாமின் மகன் அசரியேல்; இவர்கள் இஸ்ரயேல் குலங்களுக்குத் தலைவர்களாய் இருந்தனர்.
23“இஸ்ரயேலை வானத்தின் விண்மீன்களைப் போல் பெருகச் செய்வேன்” என்று ஆண்டவர் வாக்களித்திருந்ததால், அரசர் தாவீது இருபது வயதுக்குட்பட்டோரைக் கணக்கிடவில்லை.
24செருயாவின் மகன் யோவாபு கணக்கெடுக்கத் தொடங்கியபொழுது, இஸ்ரயேலின்மேல் கடுஞ்சினம் வீழ்ந்ததால், அவர் அதை முடிக்கவில்லை. எனவே, அரசர் தாவீதின் குறிப்பேட்டில் எண்ணிக்கை இடம் பெறவில்லை.

அரச உடைமைகளின் நிர்வாகம்

25அரசரது கருவூலத்திற்கு அதியேல் மகன் அஸ்மாவேத்து பொறுப்பேற்றிருந்தார். வயல்வெளிகள், நகர்கள், சிற்றூர்கள், கோட்டைகள் ஆகியவற்றிலிருந்த கருவூலங்களுக்கு உசியாவின் மகன் யோனத்தான் பொறுப்பேற்றிருந்தார்.
26வயல்வெளியில் உழைக்கும் விவசாயிகளுக்குக் கெலூபின் மகன் எஸ்ரி கண்காணியாய் இருந்தார்.
27திராட்சைத் தோட்டங்களுக்கு இராமாவைச் சார்ந்த சிமயி; திராட்சை ரசக் கிடங்குகளுக்கு சிபிமியரான சப்தி;
28செபேலாவின் ஒலிவமரங்களுக்கும் அத்திமரங்களுக்கும் கெதேரியரான பாகால்கானான்; எண்ணெய்க் கிடங்குகளுக்கு யோவாசு;
29சாரோனின் மாட்டு மந்தைகளுக்கு சாரோனியரான சித்ராய்; பள்ளத்தாக்குகளின் மாட்டு மந்தைகளுக்கு அத்லாயின் மகன் சாபாத்து;
30ஒட்டகங்களுக்கு இஸ்மயேலரான ஓபில்; கழுதைகளுக்கு மெரோனோவியரான எகுதியா,
31ஆட்டு மந்தைகளுக்கு ஆகாலியரான யாசிசு. இவர்கள் எல்லாரும் அரசர் தாவீதின் உடைமைகளுக்குப் பொறுப்பாளர் ஆவர்.

தாவீதின் சிறப்பு ஆலோசகர்

32தாவீதின் சிற்றப்பா யோனத்தான் விவேகமிகு ஆலோசகரும், எழுத்தருமாய் இருந்தார். அவரும் அக்மோனியின் மகனான எகியேலும் அரசரின் புதல்வருக்குப் பொறுப்பேற்றிருந்தனர்.
33அகித்தோபல் அரசரின் ஆலோசகர்; அர்கியரான ஊசாய் அரசரின் நண்பர்.
34அகித்தோபலுக்குப் பின் பெனாயாவின் மகன் யோயாதாவும், அபியத்தாரும் அவர் பதவியை ஏற்றனர். யோவாபு அரசரின் படைத் தலைவராய் இருந்தார்.

27:23 தொநூ 15:5; 22:17; 26:4. 27:24 2 சாமு 24:1-15; 1 குறி 21:1-4.