1அப்பொழுது தாவீது, “கடவுளாகிய ஆண்டவரின் கோவில் இங்கே இருக்கும். இஸ்ரயேலர் பலியிடும் எரிபலிபீடமும் இங்கேயே இருக்கும்” என்றார்.
கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள்
2தாவீது இஸ்ரயேல் நாட்டில் வாழ்ந்துவந்த அந்நியரைக் கூடிவரச் செய்தார். கடவுளின் கோவிலைக் கட்டுவதற்கான செதுக்கப்பட்ட கற்களைத் தயார் செய்வதற்கென்று கல் தச்சரை அவர் நியமித்தார்.
3தாவீது வாயில்களின் கதவுகளுக்குத் தேவையான ஆணிகளுக்கும் கீல் முளைகளுக்குமான ஏராளமான இரும்பையும் அளவிட இயலா வெண்கலத்தையும் தயார் செய்தார்.
4அவர் எண்ணிலடங்காக் கேதுரு மரங்களையும் தயார் செய்தார். ஏனெனில், சீதோன், தீரின் மக்கள் ஏராளமான கேதுரு மரங்களைத் தாவீதுக்குக் கொண்டு வந்தார்கள்.
5தாவீது, “என் மகன் சாலமோன் அனுபவமற்ற இளைஞன். ஆண்டவருக்குக் கட்டப்பட வேண்டிய கோவிலோ பெரியதும் உலகெங்கிலும் பெரும் புகழும் மாட்சியும் பெற்றதாயும் இருக்க வேண்டும். எனவே, அதற்கு வேண்டியவற்றை நானே தயாரித்து வைப்பேன்” என்று கூறி, தாவீது அவருடைய சாவுக்குமுன் ஏராளமான பொருள்களைச் சேகரித்து வைத்தார்.
6மேலும், தம் மகன் சாலமோனை அழைத்து இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தைக் கட்டுமாறு பணித்தார்.
7தாவீது தம் மகன் சாலமோனை நோக்கி, “என் மகனே, கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு ஒரு கோவிலைக் கட்ட என் மனத்தில் நினைத்திருந்தேன்.
8மாறாக, ஆண்டவர் என்னோடு பேசி, ‘நீ மிகுதியான குருதியைச் சிந்தினாய், பெரும் போர்களை நடத்தினாய்; எனக்கு முன்பாகத் தரையில் நீ மிகுதியான குருதியைச் சிந்தியதால், என் பெயருக்கு நீ கோவில் கட்ட வேண்டாம்.
9இதோ! உனக்கு ஒரு மகன் பிறப்பான்! அவன் அமைதியின் மன்னனாய் இருப்பான்! சுற்றிலுமுள்ள அவனுடைய பகைவர்களிடமிருந்து அவனுக்கு அமைதியை அருள்வேன்! எனவே, அவனுடைய பெயர் “சாலமோன்” எனப்படும்! அவனுடைய வாழ் நாள்களில் இஸ்ரயேலுக்கு நிறைவாழ்வும் அமைதியும் அருள்வேன்.
10அவன் என் பெயருக்குக் கோவில் கட்டுவான்; அவன் எனக்கு மகனாய் இருப்பான்; நான் அவனுக்குத் தந்தையாயிருப்பேன்; இஸ்ரயேலில் அவன் அரச அரியணையை என்றென்றும் நிலைநாட்டுவேன்’ என்றார்.
11இப்போதும், என் மகனே! ஆண்டவர் உன்னோடு இருப்பராக! அவர் உன்னைக் குறித்துக் கூறியபடியே உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தை நீ கட்டி முடிப்பதில் வெற்றி பெறுவாயாக!
12உன் கடவுளாகிய ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து இஸ்ரயேலை ஆள்வதற்கு வேண்டிய அறிவையும் விவேகத்தையும் ஆண்டவர் உனக்குக் தந்தருள்வாராக!
13ஆண்டவர் மோசேயின் மூலம் இஸ்ரயேலுக்குக் கட்டளையிட்ட நியமங்களையும் நீதி நெறிகளையும் கடைப்பிடித்து அதன்படி செய்தால் நீ வளம் பெறுவாய்! திடம் கொள்! உறுதியாயிரு! அஞ்சாதே! கலங்காதே!
14இதோ! எளியேன் ஆண்டவரின் இல்லத்திற்காக நாலாயிரம் ‘டன்’* பொன்னும், நாற்பதாயிரம் ‘டன்’** வெள்ளியும் எடை மதிப்பட இயலா வெண்கலமும், இரும்பும் ஏராளமாய்ச் சேகரித்துள்ளேன்; மரங்களும், கற்களும் தயார் செய்து வைத்துள்ளேன்; நீ இன்னும் அதிகம் சேகரிப்பாய்.
15-16வேலை செய்யத் திரளான ஆள்களும், கல்தச்சர், கொத்தர், தச்சர் ஆகியோரும், பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றைக் கொண்டும் எல்லாவித வேலைப்பாடுகளையும் செய்யக்கூடிய எண்ணற்ற கைவினைஞர்களும் இருக்கின்றனர். எழு! செயல்படு! ஆண்டவர் உன்னோடு இருப்பராக!” என்றார்.
17மேலும், தம் மகன் சாலமோனுக்கு உதவி செய்யும்படி இஸ்ரயேலின் தலைவர்கள் அனைவருக்கும் தாவீது கட்டளையிட்டுக் கூறியது:
18“உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடிருந்து, எத்திக்கிலும் உங்களுக்கு அமைதியைத் தந்துள்ளார் அல்லவா? உலகில் வாழ்வோரை என் கையில் ஒப்படைத்துள்ளார். ஆண்டவருக்கு முன்பாகவும், அவர் தம் மக்களுக்கு முன்பாகவும், உலக நாடுகள் அடக்கி வைக்கப்பட்டுள்ளன.
19இப்போது, உங்கள் இதயத்தாலும், உங்கள் உள்ளத்தாலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நாடுங்கள். நீங்கள் சென்று, ஆண்டவரின் திருத்தலத்தை எழுப்புங்கள். ஆண்டவரின் பெயருக்கென எழுப்பப்படும் கோவிலுக்கு ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையும், கடவுளின் எல்லாப் புனித கலன்களும் கொண்டு வரப்படட்டும்.”
22:7-10 2 சாமு 7:1-16; 1 குறி 17:1-14. 22:13 யோசு 1:6-9.