இரபாவின்மேல் வெற்றி
(2 சாமு 12:26-31)

1ஓர் ஆண்டு கழிந்தபின் அரசர்கள் போருக்குப் புறப்படும் காலம் வந்தபோது, யோவாபு ஆற்றல்மிக்க படையோடு சென்று அம்மோனியர் நாட்டை அழித்தார். பின்பு இரபாவுக்குச் சென்று அதை முற்றுகையிட்டார். தாவீதோ எருசலேமில் தங்கிவிட்டார். யோவாபு இரபாவைத் தாக்கி அதை வீழ்த்தினார்.
2தாவீது அவர்கள் மன்னனின் தலையிலிருந்த மகுடத்தை எடுத்துக் கொண்டார். அது ஒரு தாலந்து பொன் எடையுடையது. அதில் ஒர் இரத்தினம் இருந்தது. அதைத் தாவீது தம் மகுடத்தில் பதித்துக்கொண்டார். மேலும் நகரினின்று ஏராளமான கொள்ளைப் பொருள்களையும் கொண்டு வந்தார்.
3தாவீது அங்குக் குடியிருந்த மக்களைச் சிறைப்படுத்தி இரம்பம், கடப்பாரை, கோடரி ஆகியவற்றால் அவர்களை வேலை செய்ய வைத்தார். தாவீது அம்மோனியரின் எல்லா நகர் மக்களுக்கும் இவ்விதமே செய்தார். பின்னர், அவர்தம் மக்கள் அனைவருடனும் எருசலேமுக்குத் திரும்பினார்.

பெலிஸ்தியர்மேல் படையெடுப்பு
(2 சாமு 21:15-22)

4அதன் பின்னர், கெசேரில் பெலிஸ்தியரோடு போர் நடந்தது. அதில் ஊசாவியனான சிபக்காய் அரக்கர் இனத்தானான சிபாயைக் கொன்றான். அதனால் பெலிஸ்தியரும் அடிபணிந்தனர்.
5மேலும் ஒரு போர் பெலிஸ்திரோடு நடந்தது. யாயிரின் மகன் எல்கானான் இத்தியனான கோலியாத்தின் சகோதரன் இலகுமியைக் கொன்றான். இவனது ஈட்டியின் பிடி தறிக்கட்டை அளவு பெரிதாயிருந்தது.
6காத்தில் மற்றொரு போரும் நடந்தது. ஒவ்வொரு கையிலும் காலிலும் ஆறு ஆறு விரல்களாக இருபத்தி நான்கு விரல்களைக் கொண்ட அரக்கர் இனத்தானான நெட்டையன் ஒருவன் அவ்வூரில் இருந்தான்.
7அவன் இஸ்ரயேலைப் பழித்துரைத்தான். தாவீதின் சகோதரராகிய சிமயா மகன் யோனத்தான் அவனைக் கொன்றார்.
8காத்து ஊரிலிருந்த அரக்கருக்குப் பிறந்த இவர்கள் தாவீதாலும் அவர் அலுவலராலும் சாகடிக்கப்பட்டனர்.

20:1 2 சாமு 11:1. 20:5 1 சாமு 17:4-7.