அரசர் சவுலின் இறப்பு
(1 சாமு 31:1-13)

1பெலிஸ்தியர் இஸ்ரயேலரோடு போரிட்டனர். இஸ்ரயேலர் பெலிஸ்தியர் முன்பாக புறமுதுகு காட்டி ஓடினர்; கில்போவா மலையில் வெட்டுண்டு வீழ்ந்தனர்.
2பெலிஸ்தியர் சவுலையும் அவர் புதல்வரையும் துரத்திப் பிடித்துச் சவுலின் புதல்வர் யோனத்தான், அபினதாபு, மல்கிசூவா, ஆகியோரை வெட்டி வீழ்த்தினர்.
3சவுலுக்கு எதிராய் அவர்கள் கடும்போர் புரிந்தனர். வில்வீரர் அவரைக் கண்டு கொண்டதும் அம்புகளால் அவரைக் காயப்படுத்தினர்.
4அப்போது சவுல் தமது போர்க்கலன் சுமப்போனை நோக்கி, “விருத்த சேதனம் அற்ற இவர்கள் என்னை ஏளனம் செய்யாதபடி உன் வாளை உருவி என்னைக் கொன்று விடு” என்றார். அவர் தம் போர்கலன் சுமப்போன் மிகவும் அச்சமுற்று “அவ்வாறு செய்யமாட்டேன்” என்றான். எனவே, சவுல் தம் வாளை நட்டுவைத்து அதன்மேல் வீழ்ந்தார்.
5சவுல் இறந்ததை அவர்தம் போர்க்கலன் சுமப்போன் கண்டு அவனும் தன் வாளின்மேல் விழுந்து மடிந்தான்.
6இவ்வாறு, சவுலும் அவர்தம் புதல்வர் மூவரும் மடிந்தனர். அவரோடு அவர் குடும்பம் முழுவதும் அழிந்தது.
7பள்ளத்தாக்கிலே குடியிருந்த இஸ்ரயேலர் தங்கள் படை* புறமுதுகிட்டு ஓடியதையும், சவுலும் அவர் புதல்வரும் இறந்துபோனதையும் கண்டு, அவர்கள் தங்கள் நகர்களைவிட்டுத் தப்பி ஓடினர். பெலிஸ்தியர் வந்து அவற்றில் குடியேறினர்.
8பெலிஸ்தியர் மடிந்தோரின் உடைகளை உரிந்துகொள்ள மறுநாள் வந்தபோது, சவுலும், அவர்தம் புதல்வரும் கில்போவா மலையில் கிடப்பதைக் கண்டனர்.
9அவர்தம் உடைகளை உரிந்து, தலையை வெட்டி, போர்க்கலன்களையும் எடுத்துக் கொண்டனர். பின்னர், தம் வழிபாட்டுச் சிலைகளுக்கு முன்னும், மக்களுக்கும் அந்த நற்செய்தியை அறிவிக்குமாறு பெலிஸ்தியர் நாடெங்கும் ஆள்களை அனுப்பி வைத்தனர்.
10அவர்தம் போர்க்கலன்களைத் தங்கள் தெய்வத்தின் கோவிலில் வைத்தனர். அவரது தலையைத் தாகோன் கோவிலில் கட்டித் தொங்க விட்டனர்.
11பெலிஸ்தியர் சவுலுக்குச் செய்ததையெல்லாம் யாபேசு-கிலயாதுவாழ் மக்கள் அனைவரும் கேள்வியுற்றனர்.
12அப்போது அவர்களுள் வலிமைமிக்கோர் அனைவரும் புறப்பட்டுச் சென்று சவுலின் பிணத்தையும், அவர் புதல்வர் பிணங்களையும் எடுத்து அவற்றை யாபேசுக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த ஒரு கருவாலி மரத்தடியில் அவர்கள் எலும்புகளை அடக்கம் செய்து, ஏழு நாள் நோன்பிருந்தனர்.
13இவ்வாறு, சவுல் தம் துரோகங்களை முன்னிட்டு மடிந்தார். அவர் ஆண்டவர் கட்டளையைக் கடைப்பிடிக்காமல் அவருக்குத் துரோகம் செய்தார். மேலும், இறந்தோர் ஆவியிடம் ஆலோசனை கேட்டார்;
14ஆனால், ஆண்டவரிடம் ஆலோசனை கேட்கவில்லை. ஆகையால், ஆண்டவர் அவரைச் சாகடித்து, அவர் அரசை ஈசாயின் மகன் தாவிதுக்குக் கொடுத்தார்.

10:13 லேவி 19:31; 20:6; 1 சாமு 13:8-14; 15:1-24; 28:7-8.
10:7 ‘அவர்கள்’ என்பது எபிரேய பாடம்.