இஸ்ரயேலுக்கும் மோவாபுக்கும் இடையே போர்

1யூதாவின் அரசன் யோசபாத்தினுடைய ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில், ஆகாபின் மகன் யோராம் இஸ்ரயேலின் அரசன் ஆனான். அவன் பன்னிரண்டு ஆண்டுகள் சமாரியாவில் இருந்து கொண்டு ஆட்சி செலுத்தினான்.
2அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்த போதிலும், தன் தாய் தந்தையைப் போல் அவ்வளவு தீயவனாய் இல்லை. ஏனெனில், அவன் தன் தந்தை செய்து வைத்திருந்த பாகால் சிலைத்தூணை அகற்றி விட்டான்.
3எனினும், இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் தீயவழியில் அவனும் நிலையாய் நின்றான். அதை விட்டு அவன் விலகவில்லை.
4இது நிற்க, மோவாபிய மன்னன் மேசா ஏராளமான ஆட்டு மந்தைகளை வளர்த்து வந்தான். அவன் இஸ்ரயேல் அரசனுக்கு ஆண்டுக்கு ஒர் இலட்சம் செம்மறிகளையும் ஓர் இலட்சம் ஆட்டுக்கிடாய்களின் கம்பளி உரோமத்தையும் கப்பமாகக் கொடுத்து வந்தான்.
5ஆனால், ஆகாபு இறந்தபின், மோவாபிய மன்னன் இஸ்ரயேல் அரசனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்.
6எனவே, அரசன் யோராம் உடனே இஸ்ரயேலர் அனைவரையும் சமாரியாவில் ஒன்று திரட்டினான்.
7அவ்வாறு அவன் செல்கையில், “மோவாபிய மன்னன் எனக்கு எதிராய்க் கிளர்ச்சி செய்கிறான். எனவே, மோவாபுக்கு எதிராய்ப் போரிட என்னோடு வருவீரா?” என்று கேட்குமாறு யூதாவின் அரசன் யோசபாத்திடம் ஆளனுப்பினான். அவன் மறுமொழியாக, “வருகிறேன். உம்மைப்போலவே நானும் தயார்! உம் மக்களைப் போலவே என் மக்களும்; உம் குதிரைகளைப் போலவே என் குதிரைகளும்” என்றான்.
8பின்பு அவன், “எவ்வழியே சென்று நாம் தாக்கலாம்?” என்று கேட்டான். அதற்கு அவன், “ஏதோம் பாலைநில வழியாகப் போவோம்” என்று பதிலளித்தான்.
9அவ்வாறே , இஸ்ரயேல் அரசன் யூதாவின் அரசனோடும், ஏதோமின் மன்னனோடும் புறப்பட்டான். அவர்கள் ஏழு நாள் சுற்று வழியில் சென்றபின், படை வீரர்களுக்கும் அவர்களைப் பின் தொடர்ந்த விலங்கினங்களுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.
10அப்பொழுது இஸ்ரயேலின் அரசன், “அந்தோ! அரசர்களாகிய நம் மூவரையும் ஆண்டவர் இங்கே கூட்டி வந்தது மோவாபியர் கையில் ஒப்புவிக்கவா?” என்றான்.
11அப்பொழுது, யோசபாத்து, “ஆண்டவரின் விருப்பத்தைத் தெரிவிக்கக் கூடிய இறைவாக்கினர் யாரும் இங்கு இல்லையா?” என்று கேட்டான். இஸ்ரயேல் அரசனின் பணியாளன் ஒருவன், “சாபாற்றின் மகன் எலிசா இங்கே இருக்கிறார். இவர் எலியா கைகளைக் கழுவும்போது தண்ணீர் ஊற்றி வந்தவர்” என்றான்.
12யோசபாத்து, “ஆம், ஆண்டவரின் வாக்கு அவரிடம் உள்ளது” என்றான். எனவே, இஸ்ரயேலின் அரசன், யோசபாத்து, ஏதோமின் மன்னன் ஆகிய மூவரும் எலிசாவிடம் சென்றனர்.
13எலிசா இஸ்ரயேல் அரசனிடம், “உனக்கும் எனக்கும் என்ன உறவு? உன் தந்தையின் இறைவாக்கினரையும், உன் தாயின் இறைவாக்கினரையும் நாடிச் செல்!” என்றார். ஆனால், இஸ்ரயேலின் அரசன், “இல்லை, ஆண்டவர்தாம் அரசர்களாகிய எங்கள் மூவரையும், மோவாபியர் கையில் ஒப்புவிக்கும்படி இங்கே கூட்டி வந்துள்ளார்” என்றான்.
14எலிசா அவனை நோக்கி, “நான் பணியும் படைகளின் வாழும் ஆண்டவர் மேல் ஆணை! யூதாவின் அரசன் யோசபாத்தின் மீது நான் பெருமதிப்புக் கொண்டுள்ளேன். இல்லையேல், உன் முகத்தில் விழித்திருக்கவே மாட்டேன். ஒரு பாணனை அழைத்து வாருங்கள்” என்றார்.
15அவ்வாறே பாணன் ஒருவன் வந்து யாழிசைக்கவே ஆண்டவரது ஆற்றல் எலிசாவின் மேல் இறங்கியது.
16அப்பொழுது அவர், “ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இந்தப் பள்ளத்தாக்கு எங்கும் குழிகளை வெட்டுங்கள்.
17ஏனெனில், ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் காற்றையோ மழையையோ காணப்போவதில்லை. ஆயினும், இந்தப்பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும். நீங்களும், உங்கள் கால்நடைகளும், விலங்கினங்களும் நீர் அருந்துவீர்கள்.
18இது ஆண்டவரது பார்வையில் எளிதான ஒன்று. அவர் மோவாபியரை உங்கள் கையில் ஒப்புவிப்பார்.
19நீங்கள் எல்லா அரண்சூழ் நகர்களையும் எல்லா மாநகர்களையும் முறியடிப்பீர்கள். நீங்கள் எல்லா நல்ல மரங்களையும் வெட்டி வீழ்த்துவீர்கள். எல்லா நீருற்றுகளையும் தூர்த்துவிடுவீர்கள். எல்லா நல்ல வயல்களையும் கல்லால் நிரப்பி விடுவீர்கள்” என்றார்.
20மறுநாள் காலை, பலி செலுத்தும் நேரத்தில் இதோ! தண்ணீர் ஏதோம் திக்கிலிருந்து ஓடி வந்தது! நாடு தண்ணீரால் நிரம்பியது.
21‘தங்களோடு போர் புரிய அரசர்கள் வருகிறார்கள்’ என்று மோவாபியர் அனைவரும் கேள்வியுற்று, படைக்கலம் தாங்கக் கூடிய இளையோர், முதியோர் அனைவரையும் ஒன்று திரட்டி எல்லையில் அணிவகுத்து நின்றனர்.
22மோவாபியர் காலையில் எழுந்த பொழுது, கதிரவனின் ஒளி தண்ணீர்மீது ஒளிர்ந்தது. மறுபக்கம் இருந்த அவர்களுக்குத் தண்ணீர் இரத்த வெள்ளமாய்த் தோன்றியது.
23உடனே அவர்கள், “அது இரத்தம்! அந்த அரசர்கள் தங்களுக்குள் போர் புரிந்து ஒருவர் மற்றவரை வெட்டி வீழ்த்திவிட்டனர். மோவாபியரே! வாருங்கள்! கொள்ளையடிப்போம்!” என்றனர்.
24ஆனால், அவர்கள் இஸ்ரயேலின் பாசறைக்குள் நுழைந்தவுடன், இஸ்ரயேலர் எழுந்து மோவாபியரைத் தாக்கினர். இவர்கள் அவர்கள் முன்னிலையிலிருந்து பாய்ந்து தப்பி ஓடினர். ஆயினும், இஸ்ரயேலர் துரத்திச் சென்று மோவாபியரை வெட்டி வீழ்த்தினர்.
25பின்னர், அவர்கள் நகர்களைத் தகர்த்து, எல்லா நல்ல நிலங்கள் மீதும் ஆளுக்கு ஒரு கல் வீசி நிரப்பினர். எல்லா நீருற்றுக்களையும் தூர்த்து, எல்லா நல்ல மரங்களையும் வெட்டி வீழ்த்தினர். அரண் சூழ்ந்த கீர் அரசேத்து மட்டும் எஞ்சி நின்றது. அந்நகரையும் கவண் வீசுவோர் வளைத்து அழித்தனர்.
26தனக்கு எதிராகப் போரின் முடிவு இருந்ததை அறிந்த மோவாபிய மன்னன், வாளேந்திய எழுநூறு வீரர்களைச் சேர்த்துக் கொண்டு, ஏதோம் மன்னனை எதிர்க்கச் சென்றான். ஆனால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
27பின்னர், அவன் தனக்குப்பின் அரசாளும் உரிமையுள்ள தன் தலைமகனை இட்டுச் சென்று, மதிலின்மேல் அவனை எரிபலியாக ஒப்புக் கொடுத்தான். இஸ்ரயேலர் தங்களுக்கு எதிராகக் கடுஞ்சினம் மூள்வதைக் கண்டு, அவனை விட்டு அகன்று தம் சொந்த நாட்டுக்குத் திரும்பினர்.